நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை

குமுளி: 

பம்பை, நிலக்கல், சந்நிதானம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பக்தர்களுக்கு தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக புகார் வந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் பல பகுதிகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தினமும் சுமார் ஒருலட்சம் பக்தர்கள் வருகின்றனர். எருமேலியில் தொடங்கும் வனப்பாதை நிலக்கல், பம்பை, நீலிமலை, சந்நிதானம் வரை தொடர்கிறது. 

வெளி வர்த்தகம் குறைந்துள்ள இப் பகுதிகளில் ஒப்பந்த அடிப்ப்டையில் உள்ளூர் கடைகளின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. குறிப்பாக சீசனில் மட்டும் இங்கு வியாபாரம் செய்பவர்களே அதிகம். 

தரிசனத்துக்காக நிலக்கல் வரும் ஒவ்வொரு பக்தரும் மீண்டும் தங்கள் வாகனங்களுக்கு வர குறைந்தது 8 மணி நேரம் ஆகி விடுகிறது.

இந்த நேரங்களில் குடிநீர், தேநீர், உணவு உள்ளிட்ட அனைத்துக்கும் இப்பகுதி கடைகளையே சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. 

அனைத்து கடைகளும் தங்கள் திறனுக்கு அதிகமான வாடிக்கையாளர்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. இதனால் சுத்தமான, சுகாதாரமான உணவு என்பது பக்தர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. மேலும் விலையும் அதிகமாகவே உள்ளது.

பக்தர்களின் தொடர் புகாரினைத் தொடர்ந்து பத்தினம்திட்டா உணவு பாதுகாப்பு துறை சார்பில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதன்படி இதுவரை பம்பையில் 328 கடைகளிலும், சந்நிதானத்தில் 302 கடைகளிலும் சோதனை செய்யப்பட்டுள்ளது. 

இதில் 6 கடைகளுக்கு அபராத நோட்டீஸூம், 45 கடைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ்களும் வழங்கப்பட்டுள்ளன.

தர பரிசோதனைக்காக 131 கடைகளில் உணவு மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சோதனை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து ஐயப்ப பக்தர்கள் கூறுகையில், சபரிமலைக்கு சென்றாலே சுத்தமான, சுகாதாரமான உணவு கிடைக்காது என்ற நிலைதான் பல ஆண்டுகளாக தொடர்கிறது.

விலையும் மிக அதிகம். கேட்டால் கூடுதல் ஒப்பந்தத்தில் கடை எடுத்து நடத்துகிறோம் என்கிறார்கள். 

இரண்டு மாதத்தில் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மூலம் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காக அதிக.லாப நோக்கிலேயே பல கடைகள் செயல்படுகின்றன. 

நீதிமன்றத்தை திருப்திப்படுத்தும் வகையில் அவ்வப்போது பெயரளவுக்கு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset