நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இண்டிகோ நிறுவன குளறுபடிகளால் சுரண்டலில் ஈடுபட்டுள்ள இதர விமான நிறுவனங்கள்; உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.7,500 முதல் ரூ.18,000 வரை மட்டுமே வசூலிக்க வேண்டும்: இந்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: 

இண்டிகோ விமான சேவை 5-ஆவது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே, உள்நாட்டு விமானங்களுக்கு ரூ.7,500 முதல் ரூ.18 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு எச்சரித்து உத்தரவிட்டுள்ளது.

விமான ஊழியர்களுக்கான புதிய பணி நேர வரம்பு விதிகளை இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ)கடந்த ஆண்டே அறிவித்திருந்தது. 

பயணிகள் பாதுகாப்பையும் விமான பைலட்களின் நலனையும் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட இந்த விதிகள் கடந்த மாதம் அமலுக்கு வந்தன.

இதன்படி, பணி நேரம் குறைந்ததால் இண்டிகோ நிறுவனத்தில் பைலட் உள்ளிட்ட விமான ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. 

இதனால் கடந்த 4 நாட்களாக சுமார் 2 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், நாடு முழுவதும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

இதையடுத்து, புதிய விதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக டிஜிசிஏ நேற்றுமுன்தினம் அறிவித்தது. 

இதுகுறித்து விசாரிக்க உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார். 

ஆனாலும், 5-வது நாளாக நேற்றும் 500-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. 

4 முக்கிய விமான நிலையங்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதிகபட்சமாக பெங்களூரு விமானநிலையத்தில் 124, மும்பையில் 109, டெல்லியில் 106, ஹைதராபாத்தில் 66 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

எனினும் நேற்று இரவு நிலவரப்படி, மொத்தம் உள்ள 138-ல் 135 நகரங்களில் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது. 

இண்டிகோ நிறுவனம் முன்னதாக வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த சில நாட்களாக பயணிகள் சிரமப்பட்டதை புரிந்து கொள்கிறோம். இதற்காக மன்னிப்பு கோருகிறோம். விமான போக்குவரத்தை விரைவில் இயல்புநிலைக்கு கொண்டுவர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

டிசம்பர் 5 முதல் 15-ம் தேதிவரை முன்பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டை ரத்து செய்யும் பயணிகளுக்கு பணம் முழுமையாக திருப்பித் தரப்படும். 

இது போல, விமான நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் தங்குவதற்கு வசதியாக அருகில் உள்ள ஓட்டல்களில் அறைகளை முன்பதிவு செய்துள்ளோம்’ என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா உள்ளிட்ட நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இயக்கி வருகின்றன. ஆனால், கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக புகார் எழுந்தது. 

இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. 

பயணிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நியாயமான கட்டணம் வசூலிப்பதை உறுதிசெய்வதற்காக, ஒழுங்குமுறை அதிகாரத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் விமானங்களில் (சாதாரண வகுப்பு) 500 கி.மீ. வரையிலான தூரத்துக்கு அதிகபட்சமாக ரூ.7,500 கட்டணம், 500 முதல் 1,000 கி.மீ. வரையிலான தூரத்துக்கு ரூ.12,000 கட்டணம், 1,000 முதல் 1,500 கி.மீ. வரையிலான தூரத்துக்கு ரூ.15,000 கட்டணம். 1,500 கி.மீ.க்கு அதிகமான தூரத்துக்கு ரூ.18 ஆயிரம் கட்டணம் விதிக்கலாம். 

பயனாளர் மேம்பாட்டு கட்டணம் (யுடிஎப்), பயணிகள் சேவைக் கட்டணம் (பிஎஸ்எப்), வரிகள் இதில் அடங்காது. பிசினஸ் வகுப்பு மற்றும் உடான் விமான பயணங்களுக்கும் இது பொருந்தாது.

அனைத்து விமான நிறுவனங்களும் இந்த கட்டண உச்சவரம்பை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். 

நிலைமை சீராகும் வரை இது அமலில் இருக்கும். சிக்கலில் உள்ள பயணிகளை சுரண்டுவதை தடுப்பது, அவசரமாக பயணம் செய்ய வேண்டியவர்களை நிதி நெருக்கடிக்கு ஆளாக்காமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

இதுவரை ரத்து செய்யப்பட்ட விமான சேவைகளுக்கான கட்டணங்களை 7-ம் தேதி (இன்று) இரவு 8 மணிக்குள் முழுமையாக (ரீஃபண்ட்) திருப்பித் தர வேண்டும். மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

பயணநேரம் மாற்றியமைக்கப்பட்டதற்காக பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset