நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்

டி.ஆர்.பி.ரேட்டிங் எகிறணுமாம்!

’'பர்ஸ்டா நாங்க தான் சொன்னோம்’’னு பீத்திக்கிடனுமாம்!

விவஸ்தைகெட்ட ஊடகங்கள்.  இதனால் தங்கள் மரியாதையும், மதிப்பும் தரைமட்டமாவதை உணரவில்லையே..!

ஒரு ஷணம் இந்திய திரை ரசிகர்களின் நெஞ்சம் அதிர்ந்தது, அந்த செய்தியை கண்டவுடன்!

நல்ல வேளையாக ஹேமாலினியும், ஈஷா தியோலும் உடனே மறுப்பு தெரிவிச்சாங்க. பாவம் ! அவங்களுக்கு எத்தனை பேர் போன் பண்ணி துக்கம் விசாரிக்க முயற்சித்து இருப்பாங்க. அந்தக் குடும்பத்தினர் இதை எப்படியேல்லாம் தர்மசங்கடத்துடன் எதிர் கொண்டிருப்பார்கள்...!

இந்த நான்சென்சை செய்த மீடியாக்களுக்கு ஏதாவது தண்டனை என்று சட்டம் போட்டால் தான் பயப்படுவார்களோ என்னவோ..?

1960, 70 களின் சூப்பர் ஸ்டார் தர்மேந்திரா!

என் பள்ளி நாட்களில் நாங்கள் குடும்பத்துடன் பார்த்த ஒரே இந்திப் படம் ஷோலே. தமிழ்நாட்டில் திரையிட்ட இடங்களில் எல்லாம் சக்கை போடுபோட்டது அந்த திரைப்படம்! ஒரு நல்ல திரைப் படத்தை ரசிப்பதற்கு மொழி தெரிந்திருக்க வேண்டியதில்லை என்பதற்கு ஷோலே ஒரு உதாரணம். எப்போது திரையிட்டாலும் அப்படியே லயித்து பார்க்க முடியும் என்ற தகுதி வெகு சில மசாலா படங்களுக்கே உள்ளது. அதில் ஷோலே முதன்மையானது.

அதனால் தான் அந்தப்படம் இந்தியாவில் 100 தியேட்டர்களில் வெள்ளி விழா கண்டது. 60 தியேட்டர்களில் கோல்டன் ஜூப்ளி கண்டது. பம்பாய் மினர்வா தியேட்டரில் ஐந்து வருடம் தொடர்ந்து ஓடியது.

1960 ல் நடிக்க வந்த தர்மேந்திரா 70 களில் நடிக்க வந்து சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கும் ஈடு கொடுத்து பல ஹிட் படங்களை தந்த வண்ணம் இருந்தார். 1990 களுக்கு பிறகு கேரக்டர் ரோல்களுக்கு மாறிக் கொண்டார்.

1970 களில் தர்மேந்திரா, ஹேமமாலினி ஜோடி பல ஹிட் படங்களை தந்ததனர். ஹேமாமாலினியை இந்திய திரை ரசிகர்கள் கனவுக் கன்னி எனக் கொண்டாடினர். தர்மேந்திரா ஆண்களுக்கான இலக்கணமாக அவர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.  

தஞ்சை ஒரத்த நாடு பகுதியில் சின்னஞ்சிறிய அம்மன்குடி கிராமத்தில் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த ஹேமா  பஞ்சாப் லூதியானாவின் நஸ்ரலி கிராமத்தில் ஜாட் சீக்கியர் குடும்பத்து தர்மேந்திராவை  காதலித்து கரம் பிடித்தார். 1980ல் இருவருக்கும் திருமணம் நடந்தது. 1954 ல் தனது 19 ஆம் வயதில் முதல் திருமணம் செய்திருந்த தர்மேந்திரா தனது 45 வது வயதில் 32 வயது ஹேமாமாலினியை திருமணம் செய்தார்.

தர்மேந்திரா தான் முதலில் அரசியலுக்கு வந்து பாஜக எம்.பியானார். அதன் பிறகு வயது மூப்பின் காரணமாக தர்மேந்திரா அரசியலில் சற்று விலகி நிற்கவும் பாஜகவினர் ஹேமாமாலினியை எம்.பியாக்கினர்.

பத்தாண்டுகளாகவே உடல் நலிவுற்று தான் உள்ளார் தர்மேந்திரா. அடிக்கடி மருத்துவமனை, வீடு என்று மாறி மாறி பயணிக்கிறார். நிறை வாழ்வு வாழ்ந்த இந்த அருமையான கலைஞனை இயற்கை அழைத்துக் கொள்ளும் வரை அவரது குடும்பத்துடன் நிம்மதியாக இருக்கவிட வேண்டும் மீடியாக்கள்!

- சாவித்திரி கண்ணன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset