நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரயிலில் கர்ப்பிணிக்கு வலி: வீடியோ காலில் ஆலோசனை சொன்ன மருத்துவர் 

மும்பை:

மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருக்கும். அதுவும் காலை மற்றும் மாலை நேரத்தில் புறநகர் ரயிலில் ஏறுவதாக இருந்தால் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.

இரவு 10 மணிக்கு பிறகுதான் சிறிது கூட்டம் குறையும். அப்படிப்பட்ட ரயிலில் பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டால் எப்படி இருக்கும்.

மும்பை புறநகரான விரார் பகுதியில் வசிக்கும் அம்பிகா(24) என்ற பெண் கர்ப்பமாக இருந்தார். அவர் பிரசவத்திற்காக விராரில் இருந்து இரவு 11 மணிக்கு பிறகு தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனைக்கு சென்றார்.

ரயில் மும்பை கோரேகாவ் என்ற இடத்தில் வந்த போது அம்பிகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவர் பிரசவ வலியில் துடித்தார். உதவிக்கு அருகில் யாரும் இல்லை. இரவு 11 மணியை தாண்டி இருந்ததால் ரயிலில் பெரிய அளவில் கூட்டமும் இல்லை. ரயிலில் டாக்டர்களும் யாரும் இல்லை.

பிரசவ வலி அதிகரித்ததால் உறவினர்கள் ரயில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் ரயில் ராம் மந்திர் ரயில் நிலையத்தில் நின்றது.

அதே ரயிலில் பயணம் செய்த விகாஷ் அப்பெண்ணிற்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தார். உடனே தனது டாக்டர் தோழி தேவிகா தேஷ்முக்கிற்கு போன் செய்து நிலவரத்தைச் சொன்னார்.

உடனே டாக்டர் தேவிகா வீடியோ கால் மூலம் அம்பிகாவிற்கு குழந்தை பிறக்க தேவையான ஆலோசனைகளை வழங்கினார். ரயில் நிலையத்தில் உறவினர்கள் மற்றும் சில பெண் பயணிகள் உதவியோடு அம்பிகாவிற்கு பிரசவம் நடந்தது.

பயணி ஒருவர் கொடுத்த கத்திரிக்கோல் மூலம் தொப்புள் கொடி வெட்டப்பட்டது. டாக்டரின் வீடியோ கால் மூலம் அதிகாலை 12.15 மணிக்கு குழந்தை சுகமாகப் பிறந்தது.

அதற்கு உதவிய விகாஷிற்கு அம்பிகாவின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர். ரயில் நிலையம் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ் மூலம் தாயும், குழந்தையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

பிரசவத்திற்கு உதவிய விகாஷ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருக்கிறார். இது குறித்து விகாஷ் கூறுகையில்,

''நான் விமான நிலையம் செல்வதற்காக கோரேகாவில் இருந்து புறநகர் ரயிலில் ஏறினேன். ரயில் கிளம்பியவுடன் ரயிலில் பெண்ணின் அழுகை குரல் கேட்டது. அவருக்கு யாரும் மருத்துவ உதவிக்கு முன் வரவில்லை. உடனே எனது டாக்டர் தேவிகாவிற்கு போன் செய்து விவரத்தை சொன்னேன்.

அவர் உடனே வீடியோ காலில் தேவையான ஆலோசனைகளை வழங்கினார். டாக்டரின் ஆலோசனையில் பயணி ஒருவர் வைத்திருந்த கத்திரியை லைட்டர் மூலம் சூடுபடுத்தி தொப்புல் கொடியை வெட்டினோம்''என்றார்.

இது குறித்து அம்பிகாவின் உறவினர் மிஸ்ரா கூறுகையில்,'' வலி ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு வரும்படி நாயர் மருத்துவமனை டாக்டர் தெரிவித்து இருந்தார். இரவில் அம்பிகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் இரவு 11 மணிக்கு விராரில் இருந்து புறநகர் ரயிலில் மருத்துவமனைக்கு புறப்பட்டோம். கோரேகாவ் அருகில் சென்ற போது வலி அதிகரித்தது.

அந்த நேரம் விகாஷ் உதவி செய்ததால் சுக பிரசவம் ஏற்பட்டது. அவர் உண்மையில் தாயையும் குழந்தையையும் காப்பாற்றி இருக்கிறார்'' என்று தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset