நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கையின் அனைத்துலக வர்த்தக, நட்சத்திர விருது விழா; 4ஆவது ஆண்டாக பிரமாண்டமாக நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்

கோலாலம்பூர்:

நம்பிக்கையின் அனைத்துலக வர்த்தக, நட்சத்திர விருது விழா 4ஆவது ஆண்டாக இன்னும் பிரமாண்டமாக நடைபெறும்.

நம்பிக்கை குழுமத்தின் தோற்றுநரும் தலைவருமான டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால் இதனை கூறினார்.

1997ஆம் ஆண்டு மாத இதழாகத் தமது பயணத்தைத் தொடங்கிய நம்பிக்கை குழுமம், 2021-ஆம் ஆண்டில் இணைய ஊடகத் துறையில் கால் பதித்தது. 

2022ஆம் ஆண்டு முதல் முறையாக நம்பிக்கை விருதுகளை அறிமுகப்படுத்தி 27 பெருந்தகைகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தது.

அதனைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டும் 3-ஆவது முறையாக, நம்பிக்கை நட்சத்திர விருதுகள் 2024 ஏற்பாடு செய்யப்பட்டு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மலேசிய கலைஞர்கள், பிரபலங்களுடன் தமிழகத்தில் இருந்து நடிகை குஷ்பு, மகாராஜா இயக்குனர் நித்திலன், ஸ்டண்ட் சிவா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு விருது விழாவை  2 நாட்களாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.

முதல் நாள் அனைத்துலக ரீதியில் சர்வதேச வர்த்தகர்கள் விருது நடத்தப்பட உள்ளது.

இதில், மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகள், இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் வெற்றி பெற்ற வர்த்தகர்கள் விருது வழங்கி சிறப்பிக்கப்பட இருக்கின்றார்கள். 

இரண்டாவது நாளில் நடத்தப்படும் விழா முழுக்க முழுக்க நட்சத்திர விருது விழாவாக நடத்தப்பட உள்ளது.

அதில் மொழி, கலை, இலக்கியம், தொழில்துறை சார்ந்த விருதுகளும் இதில் அடங்கும்.
இம்முறை கலைத் துறையில் 15 விருதுகள், சமூகப் பிரபலங்களுக்கு 15 விருதுகளும் வழங்கப்படும்.

டிசம்பர் 4ஆம் தேதி சர்வதேச வர்த்தக விழா, வியாழக்கிழமை, கோலாலம்பூர், டேவான் துன் ரசாக், பேங்க் ரக்யாட் மாநாட்டு மண்டபத்தில், இரவு 7 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கும்.

அதே மண்டபத்தில் மறுநாள் 5 ஆம் தேதி நட்சத்திர விருது விழா நடைபெறகிறது.

மலேசியாவின் முதன்மை செய்தி ஊடகமாக வலம் வரும் நம்பிக்கை, திறமையாளர்களை அடையாளம் கண்டு கௌரவிக்கும் நோக்கத்துடன் இடைவிடாமல் இந்த விருது விழாவை நடத்துவதாக டத்தோஶ்ரீ முஹம்மது இக்பால் தெரிவித்தார்.

சமூகம் சார்ந்த சிறப்பு விருதுகள் நீதிபதிகள் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் அக் குழுவிற்கு டத்தோஶ்ரீ இக்பால் தலைமையேற்றுள்ளார்.

அதில் டத்தோஸ்ரீ தெய்வீகன், மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை முன்னாள் தலைவர் டாக்டர் குமரன், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் தலைவர் ராஜேந்திரன் பெருமாள் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.

இதில் கலை, சமூக ஊடகம் சார்ந்த இருபத்து மூன்று(23) விருதுகளும் பத்து(10) நாட்கள் நடக்கவிருக்கும் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.
ஒவ்வொரு பிரிவுகளில் ஐந்து (05) பேர் வேட்பாளர்களாகவும், அவர்களில் மக்களின் மகத்தான ஆதரவை பெற்று அதிக வாக்குகளை பெற்றவர் சம்பந்தப்பட்ட விருதினைச் தட்டிச் செல்வார். 

மேலும், "மலேசிய மாமனிதர்" துன் சாமிவேலு வாழ்நாள் சாதனையாளர் விருதும், கலைத் துறை வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட உள்ளன.

சிவப்பு கம்பள வரவேற்புடன் நிகழ்ச்சி தொடங்கும். கலைஞர்கள், பிரமுகர்கள், வருகையாளர்கள் என 500 பேர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த விருது விழா குறித்த அனைத்து தகவல்களுக்கும் Nambikkai Online சமூக ஊடகங்களை வலம் வரலாம்.

அழைப்பிதழ் கிடைக்கப் பெற்றவர்கள் மட்டுமே இந்த விருது விழாவில் கலந்து சிறப்பிக்க முடியும்.

இந்நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களுக்கு, நம்பிக்கை செயலகத்தை (018-240 8063) தொடர்பு கொள்ளலாம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset