நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் ‘ஒப்பிலான்’ மக்களின் புதிய சங்கம் உதயம்

சிங்கப்பூர்:

‘ஒப்பற்ற ரத்தினம்’ எனப் பொருள்படும் ‘ஒப்பிலான்’ பெயரில் அமைந்த தமிழக கிராமத்திலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்துள்ள மக்கள் ஒப்பற்ற சேவையாற்றி, சமூகத்துக்கு நன்மை செய்வார்கள் என நம்புவதாக வெஸ்ட் கோஸ்ட்-ஜூரோங் வெஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹமீது ரசாக் கூறியுள்ளார்.

ஒப்பிலான் சங்கம் (சிங்கப்பூர்) எனும் புதிய பொதுநலச் சமூக அமைப்பின் அதிகாரபூர்வ தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் அவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து, மொழி வளர்ச்சி, பயன்பாட்டைத் தற்காப்பது, சிங்கப்பூரின் சொத்தான மக்களைப் பேணுவது, மாறுபட்ட திறன்கள் கொண்ட சங்கங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது ஆகியவை மூலம் மேலும் பல நற்செயல்களைச் செய்ய வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற, கலாசார, சமூக, இளையர்துறை மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹன்யான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

“1920களில் பல்வேறு வேலைகளுக்காகச் சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த ஒப்பிலான் மக்கள் காலப்போக்கில் உணவங்காடித் தொழிலில் இன்றியமையாத பங்காயினர். அடுத்தடுத்த தலைமுறையினர் இலக்கியம், ஆசிரியப்பணி என வளர்ச்சியடைந்துள்ளனர். 

அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் உதவவும், சிங்கப்பூரின் பல்லினச் சமூகத்தை மேம்படுத்தவும் இந்தச் சங்கத்தைத் தொடங்கியுள்ளது சிறப்பானது,” என்றார் கோ ஹன்யான்.

அல்ஜுனிட் அடித்தள ஆலோசகர் டாக்டர் ஃபைசல் அப்துல் அஸீசும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். நிகழ்ச்சியில் சங்கத்தின் சின்னம், இணையத்தளம் ஆகியவையும் அறிமுகம் கண்டன.

ஒப்பிலானைப் பூர்விகமாகக் கொண்ட மக்கள், சமூக அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட ஏறத்தாழ 800 பேர் இவ்விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் ஒப்பிலான் கிராமம் குறித்தும், மக்களின் வாழ்வியல் முறைகள், தொழில்கள், வளர்ச்சி, சமூகப்பங்கு ஆகியவை குறித்த காணொலிகள் ஒளிபரப்பப்பட்டன. குடும்பத்தை முன்னேற்ற அயராது உழைத்த மூத்த அன்னையர்கள் சிறப்பிக்கப்பட்டனர். கல்வி பயிலும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளமும் வழங்கப்பட்டது.

சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மன்றத்தின் ஆலோசகர் பேராசிரியர் அ வீரமணி, வளர்தமிழ் இயக்கத் தலைவர் நசீர் கனி, ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத் (சிங்கப்பூர்) தலைவர் முஹைதீன் அப்துல் காதர், ‘செம்மொழி’ இதழாசிரியர் இலியாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

“நூறாண்டுகளுக்கு முன்பே ஒப்பிலான் மக்கள் இங்குப் புலம்பெயர்ந்துவிட்டனர். எங்கள் ஊரைப் பூர்விகமாகக் கொண்ட ஏறத்தாழ 500 குடும்பங்கள் இங்குள்ளன. அவர்களை ஒன்றிணைத்து, அடுத்தடுத்த தலைமுறையினரின் வளர்ச்சிக்கு உதவுவதை இச்சங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவரை 220 பேர் உறுப்பினர்களாகியுள்ளனர்,” என்றார் சங்கத்தின் பொதுச் செயலாளர் ‌‌‌ஷாநவாஸ்.

“எங்கள் பாட்டனார் ஒப்பிலானிலிருந்து கப்பலில் பணியாற்ற இங்கு வந்தார். எங்கள் தந்தை 90களில் உணவுக்கடை தொடங்கியது முதல் நாங்களும் அதே தொழிலில் ஈடுபடுகிறோம். எங்கள் பிள்ளைகள் எங்களது ஊர், பண்பாடு ஆகியவை குறித்து அறியாமல் போக வாய்ப்புள்ளது. அதனை உயிர்ப்புடன் வைத்திருக்க சங்கம் உதவும் என நம்புகிறோம்,” என்றார் விழாவுக்கு வந்த இஸ்மத் நி‌‌‌ஷா.

“ஒப்பிலானைச் சேர்ந்த பல குடும்பங்கள் இங்கு இருந்தாலும் பார்த்துப் பேசிக்கொள்வது அரிதாகிவிட்டது. தற்போது இச்சங்கம் தோன்றி அதன் தொடர்பில் அனைவரையும் பார்க்கும்போது அவர்களுடன் பேசிப் பழகவும், அதன் மூலம் ஒருவருக்கொருவர் ஆதரவாக அமையவும் வாய்ப்பு கிடைத்துள்ளதில் மகிழ்ச்சி,” என்றார் ஹசீனா பானு, 38.

இந்த சங்கம் அமைவதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறுகிய கால இந்த ஏற்பாட்டிற்கு சிங்கப்பூர்வாழ் ஒப்பிலான் மக்கள் குடும்பத்தோடு ஒன்றாகத் திரண்டு வந்து கலந்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சங்க்கதி தலைவர் கூறினார்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset