நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நமது முன்னோர்கள் பல தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கிய சுதந்திரத்தை அடுத்த தலைமுறையினர் போற்ற வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

நமது முன்னோர்கள் பல தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கிய சுதந்திரத்தை அடுத்த தலைமுறையினர் போற்ற வேண்டும்.

தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் இதனை கூறினார்.

நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் மலேசியர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். 

பல்லின மக்களின் தியாகங்கள், இழப்புகளைத் தாண்டித்தான் 1957இல் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. 

சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும்  மிகப் பெரிய போராட்டங்கள் உண்டு.  நாட்டிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கப் பலரின் தியாகங்கள் உண்டு. அந்த வரலாற்றை இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும். 

காட்டை நாடாக்கியது யார், பொருளாதார மேம்பாட்டைக் கொண்டு வந்தது யார், ஆதி முதல் இருந்து வந்த பழக்க வழக்கங்கள் என்ன என்பதை நுனிப்புல் மேய்ந்தாற்போல் இல்லாமல் ஆழமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

மலேசியர்களுக்கு தேசபக்தி உணர்வு மேலிட்டு இருப்பது நாம் அறிந்ததே. 

ஆனாலும் 68ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் மக்களுக்கு கருத்துச் சுதந்திரம், கலாச்சாரங்களைத் தடையின்றி கடைப்பிடிக்கும் சுதந்திரம், தவறுகளைத் தட்டிக் கேட்கும் சுதந்திரம் என்பதும் அத்தியாவசியம். 

நினைத்ததை எல்லாம் செய்வதல்ல சுதந்திரம். சரியானவற்றை உரிய நேரத்தில் செய்வதே சுதந்திரம். நமது சுதந்திரம் பிறருக்கு இடையூறாக இருந்து விடக் கூடாது. நமது மெளனம் நம் சுதந்திரத்தை கேள்விக்குறியாகவும் ஆக்கிவிடக் கூடாது.

உலகில் எந்த மூலையில் இருந்தாலும் மலேசியர்கள் என்ற வகையில். நாமெல்லாம் ஒற்றுமையாக. நாட்டுப்பற்றோடு வாழ்ந்து வருகிறோம் என்பதில் ஐயமில்லை. 

எந்த தேசத்திற்கு சென்றாலும் மலேசியர்கள் என்ற அடையாளத்தையும், உணவு முறைகளையும், பழக்கவழக்கங்களையும், நாம் தவறாமல் கடைப்பிடித்து வருகிறோம் என்பதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளலாம். 

நம் நாட்டின் பல்வேறு கலாச்சாரங்கள், இனங்களைச் சேர்ந்த மலேசியர்களின் ஒற்றுமை என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும். 

ஒவ்வொருவரும் வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset