நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மீண்டும் ஏமாற்றப்படுவதையும் கேலி செய்யப்படுவதையும் மஇகா விரும்பவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

மீண்டும் ஏமாற்றப்படுவதையும் கேலி செய்யப்படுவதையும் மஇகா விரும்பவில்லை.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.

1954ஆம் ஆண்டு கூட்டணிக் கட்சியிலும் 1973இல் உறுப்பு கட்சியாகவும் தேசிய முன்னணியில் இணைந்ததிலிருந்து,

அக்கூட்டணி வெற்றிகரமாக மத்திய அரசாங்கத்தை அமைத்த ஒவ்வொரு முறையும் மஇகாவின் பிரதிநிதிகள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் வரலாற்றில் முதல் முறையாக, நம்பிக்கை கூட்டணியுடன் தேசிய முன்னணி வெற்றிகரமாக ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்த போதிலும், மஇகா எந்த அமைச்சர் பதவி அல்லது எந்த அரசாங்கப் பதவியையும் வகிக்கவில்லை.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான இன்றைய அரசாங்கம் அமைப்பதற்கு முன்பே கட்சிக்கு அமைச்சர் பதவிகள் உறுதியளிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இப்போது மஇகாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை நாங்கள் தெளிவாக காண்கிறோம்.

தற்போதைய அரசாங்கம் மஇகாவுக்கு முன்னுரிமை அளிப்பதை நான் காணவில்லை.

மஇகா ஒரு பெரிய கட்சி. குறிப்பாக இந்திய சமூகத்தைப் பாதுகாக்கும் கட்சி என்பதை அவர்கள் அறிந்திருந்தாலும் அக்கட்சி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

மக்கள் பிரதிநிதியாக தற்போதுள்ள பிரதிநிதிகளுடன் ஒப்பிடும்போது, நான் அந்தச் சுமையைச் சுமக்க விரும்பவில்லை.

ஆனால் நான் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்று நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் இருக்கிறேன்.

செனட்டராக இரண்டு முறை, நாடாளுமன்ற உறுப்பினராக நான்கு முறை, துணையமைச்சராக இரண்டு முறை, அமைச்சராக ஒரு பதவி வகித்துள்ளேன்.

குறிப்பாக ஏழு பிரதமர்களின் கீழ் பணியாற்றியுள்ளேன்.

ஆனால் அவர்கள் என் நிபுணத்துவத்தைப் பயன்படுத்த விரும்புவதாக நான் பார்க்கவில்லை.

அமைச்சரவை மூலம் பணியாற்ற இடமில்லை. பிற நிறுவனங்கள் மூலம் பணியாற்ற இடமில்லை.

இதனால் அரசாங்கத்திற்கு நமது பங்கு தேவைப்படுவதாகவோ அல்லது மதிக்கப்படுவதாகவோ நான் பார்க்கவில்லை.

நம்மை மதிக்க விரும்பாதபோது நாம் அதைப் பற்றி ஆராய்ந்து, நமக்குத் தகுதியான மரியாதையைப் பெறக்கூடிய ஒரு இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த முறை நான் நேர்மையாகச் சொல்கிறேன். ஏனென்றால் எனக்கு இழக்க எதுவும் இல்லை.

மலாய் நாளிதழுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் டத்தோஸ்ரீ சரவணன் இதனை கூறினார்.

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் பிரதமரானபோது, மலேசியாவில் அம்னோ வலுவான கட்சியாக இருந்தது.

மலாய்க்காரர்கள் ஒன்றுபட்டிருந்தனர். பிரிக்கப்படவில்லை.

எனவே துன் மகாதீரின் தலைமை 100 சதவீதம் மலாய் வாக்குகளைச் சார்ந்திருந்தது. மலாய்க்காரர்கள் ஒன்றுபட்டிருந்தனர்

மகாதீருக்கு இந்தியாவோ அல்லது சீனாவோ தேவையில்லை. நாம் அவரை ஆதரிக்காவிட்டாலும், அம்னோவின் பலத்தால் மகாதீர் வெற்றி பெற முடியும்.

ஆனால் வேறு எந்த இனமும் வெற்றி பெறுவதை அவர் தடுக்கவில்லை.

மகாதீரின் காலத்தில், ஆஸ்ட்ரோவில் வெற்றி பெற்ற டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன் தான் இந்திய சமூகத்தின் தேவை இல்லாமல் அதைச் செய்தார்.

மகாதீரின் காலத்தில், நஜிப்பின் அளவுக்குப் பெரியதாக இல்லாவிட்டாலும் அவர் நிதியை வழங்கினார்.

அவர் அதிகமான தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கினார். வழிபாட்டுத் தலங்களுக்கு நிதி வழங்கினார்.

மேலும் மகாதீரின் காலத்தில் எந்த வழிபாட்டுத் தலங்களும் இடிக்கப்படவில்லை.

இந்தியர்களின் ஆதரவு அவருக்குத் தேவையில்லை என்றாலும், அவர் எந்த தமிழ்ப்பள்ளிகளையும் மூடவில்லை.

டத்தோஸ்ரீ நஜிப்பின் காலத்தில். அவருக்கு இந்திய வாக்குகள் தேவைப்பட்டன. அது மிகவும் வித்தியாசமானது என்று அவர் கூறினார்.

இந்நிலையில் மஇகா தேசியக் கூட்டணியில் இணையுமா என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளது.

ஆனால் இந்த நேரத்தில், ஆம் அல்லது இல்லை என்று சொல்ல எனக்கு தைரியமில்லை.

நமக்கு யாராவது தேவையில்லை என்று நாம் பார்க்கும்போது, நாம் தொடர வேண்டாமா? என்ற சிந்தனை வரும்.

இதுவரை  ஒற்றுமை அரசாங்கத்திற்கு மஇகா தேவையற்ற கட்சியாகக் கருதப்படுகிறது.

மஇகா மிகவும் அனுபவம் வாய்ந்த கட்சி. முறையாக கட்டமைக்கப்பட்ட ஒரே இந்தியக் கட்சி.

அதன் அடிப்படையில் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்கு வேண்டிய கட்டாயத்திறகு மஇகா தள்ளப்பட்டுள்ளது.

ஆக மஇகாவின் மாநில, தேசிய மட்டங்களின் கூட்டம் முடிந்த பிறகு மஇகா ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

ஆனால் மீண்டும் ஏமாற்றப்படுவதையும் கேலி செய்யப்படுவதையும் மஇகா விரும்பவில்லை என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset