
செய்திகள் மலேசியா
தவறு செய்தவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்: மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் ஊடக அறிக்கை
கோலாலம்பூர்:
சமூக ஊடகங்களில் பரவி வரும் ஆலய அர்ச்சகர்/குருக்கள் ஒருவரின் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டு மாமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுத் தற்போது விசாரணையில் உள்ளது.
ஆன்மீகப் பணி என்பது ஆழ்ந்த நம்பிக்கை, பக்தி மற்றும் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புடன் செய்யக் கூடிய ஒரு புனிதமான பொறுப்பாகும்.
இத்தகைய பொறுப்பு மிக்க பணியில் உள்ள ஒரு அர்ச்சகர் அல்லது குருக்கள் மீது பாலியல் முறைகேடு போன்ற ஒரு மிகக் கடுமையான குற்றச்சாட்டு சாத்தப்படுவது, ஒட்டுமொத்த சமூகத்தின் நம்பிக்கையையும் ஆன்மீக விழுமியங்களையும் கேள்விக்குள்ளாக்கும் இக்கட்டான சூழ்நிலையாகும்.
இந்த விவகாரம் குறித்து மலேசிய இந்து மாமன்றத்தின் நிலைப்பாடு மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது.
ஒரு அர்ச்சகர் அல்லது குருக்கள் மீது இத்தகைய பாலியல் முறைகேடு குற்றச்சாட்டு சாத்தப்படும்போது, அது முழுமையாக விசாரிக்கப்பட்டு, சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான மற்றும் விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாமன்றம் உறுதியுடன் உள்ளது.
இது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதையும் சமூகத்திற்குள் நம்பிக்கை மீட்டெடுக்கப்படுவதையும் உறுதி செய்யும் நடவடிக்கையாகும். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும், சட்டத்தின் முன் சமம் என்பதே மாமன்றத்தின் நிலைப்பாடு ஆகும்.
மேலும், இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையும் உணர்வுத்திறனையும் கருதி, விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துதல், சம்பந்தப்பட்ட ஆலயத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்தல், பாதிக்கப்பட்ட நபருக்கு மேலும் மன உளைச்சலை ஏற்படுத்துதல் என பல நெருக்கடிகள் உருவாக்கப்படும் நோக்கில் சமூக ஊடகங்களிலோ அல்லது பிற ஊடகங்களிலோ முன்கூட்டியே தீர்ப்பு வழங்கும் (trial by media) நடவடிக்கைகளை அனைவரும் உறுதியாகத் தவிர்க்குமாறு மாமன்றம் கடுமையாக வலியுறுத்துகிறது. சட்டத்திற்கு மதிப்பளித்து நீதித்துறை அதன் பணியைச் செய்யத் துணைசெய்வது அனைவரின் கடமையாகும். அடிப்படை மனித உரிமைகளையும் ஒரு தனிநபரின் கண்ணியத்தையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
இது போன்ற எதிர்கால சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு, இந்தியாவில் இருந்து நேரடியாக மலேசிய ஆலயங்களுக்கு அர்ச்சகர் அல்லது குருக்களாகப் பணியமர்த்தப்படுபவர்களை, மலேசிய அர்ச்சகர் சங்கம் அல்லது மலேசிய குருக்கள் சங்கம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் ஆன்மீக அமைப்புகளில் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், அவர்கள் மலேசிய கலாச்சார சூழலுக்கும் இங்குள்ள சட்டதிட்டங்களுக்கும் ஏற்றபடியான சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று, அந்தந்த அமைப்புகளின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருப்பதை ஆலய நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.
இறுதியாக, இது போன்ற எதிர்பாராத மற்றும் வருந்தத்தக்க சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கு, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பான புகார் நிலையங்களையும் (complaint mechanisms) ஒழுக்க நெறிமுறைகள் குறித்த தெளிவான வழிகாட்டுதல்களையும் (code of ethics) இந்து சமய அமைப்புகளும், குறிப்பாக ஆலய நிர்வாகங்கள், கட்டம் கட்டமாக அமல்படுத்த வேண்டும் என மாமன்றம் கேட்டுக்கொள்கிறது. இத்தகைய நடவடிக்கைகளே நமது சமூகத்தின் ஆன்மீக ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
நமது ஆலயங்கள் பக்தர்களுக்குப் பாதுகாப்பான சரணாலயங்களாகவும் ஆன்மீக – சமூக வளர்ச்சி மையங்களாகவும் நிலைத்திருப்பதை உறுதி செய்வது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 5:29 pm
பாலியல் துன்புறுத்தல் குற்றத்தில் ஈடுபட்ட கோவில் அர்ச்சகரைக் காவல்துறை தேடி வருகிறது
July 8, 2025, 3:27 pm
பகாங் சுல்தானை உட்படுத்திய காணொலி: போலீஸ் புகார் பதிவு செய்யப்பட்டது
July 8, 2025, 1:10 pm
கடன் பிரச்சினை காரணமாக ஆடவர் கொலை; தந்தை, மகன் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்
July 8, 2025, 12:22 pm
பெண் பக்தரிடம் காமச் சேட்டை புரிந்த பூசாரிக்கு எதிராக சமூக ஊடங்கங்களில் கடும் கண்டனம்
July 8, 2025, 11:37 am