நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்காவின் உத்தரவின்படியே ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது; அமெரிக்காவை ஒருபோதும் நம்ப முடியாது: ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி

இஸ்தான்புல்:

அமெரிக்காவை நம்ப முடியாது. அணு சக்தி தொடர்பாக அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சூழல் இல்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல், ஈரான் போர் தொடர்பாக அரபு நாடுகள் கூட்டமைப்பின் (அரபு லீக்) அவசர ஆலோசனை கூட்டம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில் சவுதி அரேபியா, எகிப்து, இராக், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 22 நாடுகள் உள்ளன. அரபு நாடுகள் கூட்டமைப்பு கூட்டத்தில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்அரக்சி பங்கேற்றார். 

கூட்டத்துக்கு முன்பாக அவர் கூறியதாவது:

ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா ஏற்கெனவே முடிவு செய்து விட்டது. அமெரிக்காவின் உத்தரவின்படியே ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது அணு சக்தி தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்படுகிறது.

அமெரிக்கா நம்பிக்கை துரோகம் செய்கிறது. அந்த நாட்டை ஒருபோதும் நம்ப முடியாது. கண்துடைப்புக்காக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா அழைக்கிறது. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஓமனில் நடைபெற இருந்தது. அதற்கு முன்பாக ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேல் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால் அமெரிக்காவுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்பது உலக நாடுகளுக்கு தெரியும். ஈரான் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படுகிறது. 

இந்த சூழலில் அணு சக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராகவில்லை.

கடந்த 2015-ம் ஆண்டில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய 6 நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுபோன்ற ஆக்கப்பூர்வமான ஒப்பந்தங்களை மட்டுமே ஈரான் விரும்புகிறது. இவ்வாறு அப்பாஸ் அரக்சி தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset