நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

திருப்பதியில் 10 மாடிகளுடன்  ரூ.500 கோடியில் புதிய பஸ் நிலையம்: வி ஐ பி கள் வசதிக்காக ஹெலிபேட், ஸ்கைவாக் அமைக்க திட்டம்

திருப்பதி:

ஆந்திர மாநிலம் திருப்பதி கோயிலுக்கு தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில் இருந்து தினமும் ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது. அதேபோல் திருப்பதியில் இருந்து திருமலை, காளஹஸ்தி உள்பட பல்வேறு நகரங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் திருப்பதி பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பஸ்நிலையம் 13.18 ஏக்கரில் அமைந்துள்ளது. ஆனால் இந்த பஸ் நிலையத்தை நவீன முறையில் கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி 12.19 ஏக்கர் பரப்பளவில் ரூ.500 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. இங்கு நான்கு திசைகளிலும் சாலைகள் அமைக்கப்படும். பாதாள அறையில் 2 தளங்களில் பைக்குகள், கார் பார்க்கிங் அமைக்கப்படும். முழு தரைத்தளமும் பேருந்து நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டு 98 நடைமேடைகள் அமைக்கப்படும். கூடுதலாக 50 பஸ்களை நிறுத்தவும், மின்சார பஸ்களை சார்ஜ் செய்யவும் ஏற்பாடு செய்யப்படும். 

1, 2வது தளங்களில் ஆர்.டி.சி. அலுவலகங்கள், மீதமுள்ள இடம் உணவு விடுதிகள், கடைகளுக்கு ஒதுக்கப்படும். 3வது தளத்தில் மின் மேலாண்மை மற்றும் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. 4 முதல் 7வது தளங்கள் வரை ஓட்டல்கள், உணவகங்கள், தங்குமிடங்கள், வணிக நோக்கங்களுக்காக ஒதுக்கப்படும். 8, 9, 10வது தளங்கள் வங்கிகள், அரசு, தனியார் நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் பிற தேவைகள் போன்ற வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும்.

இந்த கட்டிடத்தின் மேல் தளத்தில் ஒரு ஹெலிபேட் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் திருப்பதியில் அவசர காலத்தில் ஏர் ஆம்புலன்ஸ் சேவைக்காகவும், முக்கிய பிரமுகர்கள் ஹெலிகாப்டரில் வந்து செல்லவும் வசதியாக இருக்கும். 

மொத்தம் 1.54 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டதாக இந்த கட்டிடம் இருக்கும். ரயில் நிலையத்திற்கும், பஸ் நிலையத்திற்கும் இடையே உள்ள ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு ஸ்கைவாக் கட்டப்பட உள்ளது. 

புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகளின்போது, தற்போதைய பஸ் நிலையம் வேறு இடங்களுக்கு மாற்றப்படும்

இந்த பஸ் நிலையத்தின் முகப்பு தோற்றம் ஏழுமலையான் கோயில் ராஜ கோபுரம் வடிவில் அமைக்கப்பட உள்ளது. புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset