நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உண்மையான அரசியல்வாதியின் இழப்பால் முழு தேசமும் துக்கப்படுகிறது: பிரதமர் அன்வார் 

கோலாலம்பூர்:

மலேசியாவின் ஐந்தாவது பிரதமர் துன் அப்துல்லாஹ் அஹ்மது படாவி மறைவுச் செய்தியை அறிந்தவுடன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக விரைந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பாக் லா என்று அன்புடன் அழைக்கப்படும் அப்துல்லாஹ்வை, மிகுந்த நேர்மை, கருணை கொண்ட தலைவர் என்று வர்ணித்த அன்வார், நெருங்கிய நண்பருமான அவரது இழப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்தார்.

“பாக் லா ஒரு தலைவர் மட்டுமல்ல, மலேசிய அரசியலுக்கு ஒரு புதிய அத்தியாயத்தை கொண்டு வந்த நல்லுள்ளம்கொண்ட ஒரு சிறந்த அரசியல்வாதி,” என்று அன்வர் கூறினார்.

நோய்வாய்ப்பட்ட முன்னாள் பிரதமரை சந்தித்ததை நினைவு கூர்ந்த அன்வார், அப்துல்லாஹ்வின் இருப்பு அவரது பலவீனத்திலும் கூட அமைதியையும் அரவணைப்பையும் எவ்வாறு வெளிப்படுத்தியது என்பதைப் பகிர்ந்து கொண்டார்.

அப்துல்லாஹ்வின் தலைமைத்துவம், தேசத்திற்கான இரக்கம், அர்ப்பணிப்பில் வேரூன்றி இருந்ததாக பிரதமர் பாராட்டினார், நீதித்துறையில் அவரது சீர்திருத்தங்கள், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை,ஆகியவற்றை அவரது ஆளுமையை  எடுத்துக்காட்டுகிறது.

"அவரது இஸ்லாமிய ஹதாரி அணுகுமுறையால், பாக் லா முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் மதிப்புகளுடன் இணைத்தார், மலேசியா மனிதாபிமானத்துடன் முன்னேறுவதை உறுதி செய்தார்," என்று அவர் கூறினார்.

ஒன்பதாவது மலேசியா திட்டத்தின் கீழ் அதிக ஊடக சுதந்திரம், கிராமப்புற சமூகங்களை மேம்படுத்துவதன் மூலம் பொதுமக்களின் பங்களிப்பை விரிவுபடுத்தியதற்காக அப்துல்லாஹ்வுக்கு அன்வார் பாராட்டு தெரிவித்தார்.

"எல்லாவற்றிற்கும் மேலாக, பாக் லா தலைமைத்துவத்தில் மனிதநேயத்தின் அர்த்தத்தை எங்களுக்கு அவர் கற்றுக் கொடுத்தார்," என்று அவர் கூறினார்.

அப்துல்லாஹ்வின் மென்மையான நடத்தை, அமைதியான அணுகுமுறை பல அறைகூவல்களை எதிர்கொண்டாலும் உறுதியுடன் இருந்தது என்று அவர் கூறினார்.

அப்துல்லாஹ்வின் பச்சாதாபத்தின் தனிப்பட்ட நினைவுகளையும், குறிப்பாக அவரது வாழ்க்கையில் ஒரு கடினமான நேரத்தில் அவர் பகிர்ந்து கொண்டார்.

"அன்பாக நடந்துகொள்வது எளிதாக இருந்திருந்தாலும், பாக் லா ஒருபோதும் கசப்பைத் தேர்ந்தெடுக்கவில்லை, அதற்காக, நான் அவரை எப்போதும் நினைவில் கொள்வேன்," என்று அவர் கூறினார்.

அப்துல்லாஹ்வின் மனைவி துன் ஜீன் அப்துல்லாஹ்வின் குடும்பத்தினருக்கும், அவரது மருமகன் கைரி ஜமாலுதீன், முழு குடும்பத்தினருக்கும் அன்வர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

"ஒரு உண்மையான அரசியல்வாதியின் இழப்பால் முழு தேசமும் துக்கப்படுகிறது," என்று பிரதமர் மேலும் கூறினார்.

இறைவன் அவரது பிழைகளை பொறுத்து உயர் சுவனத்தை வழங்க தாம் பிரார்த்திப்பதாக கூறினார்.

துன் அப்துல்லா அகமது படாவி இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 85.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset