நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாய சிக்கல் தொடர்பான வட்ட மேசைக் கூட்டத்திற்கு  பொது அமைப்புகளும் அழைக்கப்பட வேண்டும்: இந்து சங்கம்

பெட்டாலிங் ஜெயா:

மலேசிய இந்திய சமுதாயம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கவும் பொருத்தமான முடிவெடுக்கவும் அமைச்சர், துணையமைச்சர்கள் மட்டும் கலந்து கொண்டால் முறையான தீர்வு காண முடியாது.

அதனால் சமய, சமூக இயக்கங்களும் அதற்கு அழைக்கப்பட வேண்டும் என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் கூறினார்.

அடுத்தப் பொதுத் தேர்தலை நோக்கித்தான் நாடும் அரசியல் தலைவர்களும் பயணிக்கின்றனர்.

அதனால், இந்திய சமுதாயத்தில் நிலவும் அதிருப்தி, சமூகத்திற்கும் சமயத்திற்கும் ஆற்ற வேண்டிய கடமை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் உள்ளிட்ட அனைத்துக்கும் ஏதாவது ஆறுதல் சொல்லி அடுத்தத் தேர்தல் வரை காலம் கடத்தும் நோக்கத்தில்தான் தற்பொழுது வட்ட மேசைக் கருத்தரங்கம் போன்றவற்றை அண்மைக் காலமாகப் பேசி வருகின்றனர்.

அழுகின்ற பிள்ளைக்கு எதையாவது கொடுத்து அமர்த்துவதைப் போல, சமுதாயத்தில் நிலவும் பிரச்சினைகளை மடைமாற்றும் நோக்கில் அண்மைக் காலத்தில் அரசியல் தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்த நாடக வேலைகளை பொதுமக்கள் இனியும் நம்பத் தயாரில்லை. 

எனவே, எத்தகைய ஆலோசனைக் கூட்டமாக இருந்தாலும் அவற்றை பொதுமக்களின் பார்வையில் வெளிப்படையாக நடத்தி, நல்ல தீர்வு காண வேண்டும்.

மலேசிய இந்து சங்கம் உள்ளிட்ட சமய அமைப்புகள், அதைப்போல சமுதாய இயக்கங்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வட்ட மேசைக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

அதில் எடுக்கப்படும் முடிவுகளை மடானி அரசுக்கும் பிரதமருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset