நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தள்ளாடுகிறதா மலேசியா ஏர்லைன்ஸ்?: புதிய A330 நியோ ரக விமானத்தில் இயந்திரக் கோளாறு 

கோலாலம்பூர்:
 
டிசம்பர் 19 ஆம் தேதி சேவைக்கு வந்த புத்தம் புதிய ஏர்பஸ் A330 நியோ ரக விமானம் தொழில்நுட்ப சிக்கல்களால் 48 மணி நேரத்தில் தரையிறக்கப்பட்டது. ஏற்கெனவே பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்துவரும் வேளையில் மலேசியா ஏர்லைன்ஸ்சின் செயல்பாட்டு பின்னடைவை இது காட்டுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் ட்ரெண்ட் 7000 இயந்திரங்களால் இயக்கப்படும் இந்த விமானம், டிசம்பர் 19 தேதியன்று கோலாலம்பூரிலிருந்து மெல்போர்னுக்குச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் முதல் பயணத்தைக் தொடர்ந்து தொடர்ச்சியான தொழில்நுட்ப செயலிழப்புகளை அந்த விமானம் சந்தித்தது.

விமான தொழிற்சாலை உற்பத்தியிலும் விநியோகத்திலும் ஏற்பட்ட தரம் குறைவின் காரணமாக இந்த ஏர்பஸ் A330 நியோ ரக விமானம் மூன்று தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளது என்று பொறியாளர்கள் கூறியதாக தெரிகிறது. இந்தச் சிக்கல்களை  விமான நிறுவனம் அடையாளம் கண்டுள்ளதாக மலேசிய விமான குழு நிர்வாக இயக்குனர் டத்தோ கேப்டன் இஸ்ஹாம் இஸ்மாயில் கூறினார். 

இந்த விமானம் தற்போது பழுதுபார்ப்புக்காக தரையிறக்கப்பட்டுள்ளது. புதிய விமானத்தில் இந்த சிக்கல்களுக்கான மூல காரணத்தை விசாரிக்க ஏர்பஸ்ஸும் ரோல்ஸ் ராய்ஸ்ஸும்  தொழில்நுட்ப குழுவும் ஆராய்ந்து வருவதாக இஸ்ஹாம் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 29 தேதி கோலாலம்பூருக்கு வந்து சேர வேண்டிய ஏர்பஸ் A 330 நியோ ரக விமானம்,  இரண்டு மாதங்கள் தாமதமாக தொழிற்சாலையிலிருந்து வந்தடைந்தது. தற்போது அதன் இயந்திரம் மட்டுமன்றி ஹைட்ராலிக் அமைப்புகளிலும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது,

மீண்டும் டிசம்பர் 20 தேதி அன்று இந்த ஏர்பஸ் A 330 நியோ ரக விமானம் விமானம் பழுதுபார்ப்புக்காக தரையிறக்கப்பட்டது. இதன் விளைவாக மலேசியா ஏர்லைன்ஸின் MH149 விமானம் டிசம்பர் 21 அன்று மெல்போர்னுக்கு செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டது.

புதிய விமானத்தை பாதிக்கும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்ப்பதில் மலேசியா ஏர்லைன்ஸுக்கு ஆதரவளிக்க ஏர்பஸ் நிறுவனம் தயாராக இருப்பதாக ஏர்பஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இம்மாதிரியான விமான இயந்திர கோளாறுகள், பண்டிகை காலத்தில் விமான நிறுவனத்தின் பிராண்ட், அதன் வாடிக்கையாளர்கள் இருவருக்கும்பெரும் பாதிப்பையும் மனஉளைச்சலையும் தரும். வேறு விமானங்களை கொண்டு மெல்போர்னுக்கான விமான சேவை வழங்கப்படுகிறது என்று இஸ்ஹாம்கூறினார்.

- நந்தினி ரவி

தொடர்புடைய செய்திகள்

+ - reset