நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்துக்களின் சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம்: மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்திற்கு டத்தோஸ்ரீ சரவணன் கண்டனம்

கோலாலம்பூர்:

மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம் இந்துக்களின் சமய விவகாரங்களில் தலையிட வேண்டாம்.  

மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இக்கண்டனத்தை தெரிவித்தார்.

உங்களுக்கு மத நம்பிக்கை இல்லை என்றால் அது உங்கள் விருப்பம்.  ஆனால் இங்கே இந்து மதத்தை நேசிக்கின்ற, இந்து மதத்தைப் பின்பற்றுகின்ற இலட்சக்கணக்கான இந்துக்கள் இந்த மலேசிய நாட்டில் வாழ்கிறார்கள்.

திராவிடர் கழகம் என்பது கடந்த காலங்களில் பெரியார் போன்றவர்களால், மூடநம்பிக்கைகளை அழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இயக்கமே தவிர, அடுத்தவர்களின் மத நம்பிக்கையை இழித்துச் சொல்வதற்கும், மத நம்பிக்கையில் மூக்கை நுழைத்து,  அதைச் சாகடிப்பதற்கும் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் கிடையாது.

மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ்ப் பள்ளிகளை மூட, தமிழ்ப் பள்ளிகளைச் சீரழிக்க, தமிழ்ப் பள்ளிகள் இந்த நாட்டில் இல்லாமல் செய்ய ஒரு கும்பல் எத்தணித்துள்ளது. அதற்கு நீங்களே வழிவகுத்து விடாதீர்கள்.

அதே நேரத்தில் திராவிடர் கழகத்திற்கு நான் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். ஆறாம் நூற்றாண்டில் தமிழ் மொழி அழிந்து விடும் நிலையில் இருந்த பொழுது, இந்த தமிழ் மொழியை காப்பாற்றியது பக்தி இலக்கியம்தான். அப்பரும், சுந்தரரும், ஞானசம்பந்தரும், திருமுறை வழியே தமிழ் வளர்த்தார்கள். வரலாறு தெரியாமல் நாம் வாய்க்கு வந்ததைப் பேசக்கூடாது. 

தமிழையும் சமயத்தையும் பிரிக்க முடியாது. மாந்தநேயத் திராவிடர் கழகத்திற்கு வரலாறு தெரியவில்லை.

ஆறாம் நூற்றாண்டில் தமிழ் மொழி அழியக்கூடிய நிலையில் இருந்த பொழுது, இந்த மூவரும் தான் தேவாரம் பாடி தமிழ் வளர்த்தார்கள், தமிழ் பரப்பினார்கள்.

இன்னிசையால் தமிழ் பரப்பிய திருஞானசம்பந்தர், 'தமிழோடு இசைப் பாடல் மரந்தறியேன்' என்று பாடிய திருநாவுக்கரசர், என்ற வரலாரெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

முழுமையாக இந்து சமயம் செய்தது என்ன? இந்து சமயத்திற்கும் தமிழ் மொழிக்கும் என்ன தொடர்பு? என்று  புரிந்து பேசுங்கள். 

அதே நேரத்தில் இந்த நாட்டில் தற்போது இருக்கின்ற மடானி அரசாங்கம் 3ஆர் எனப்படும் இனம், சமயம், அரசு சார்ந்த விஷயங்களில் அவதூறு பரப்புபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்பதையும் உங்களுக்கு நினைவு கூற விரும்புகிறேன்.

நாட்டில் நமக்கென்று எத்தனையோ பிரச்சனைகள் உண்டு. அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல், இந்த தேவையில்லாத வேலை உங்களுக்கு எதற்கு? தமிழ்ப்பள்ளிகளில் பாடம் மட்டுமன்றி கலை, கலாச்சாரம், பண்பாடு என்று உணர்வு சார்ந்த விஷயங்களும், வாழ்வியலும் கற்றுத்தரப் படுகிறது என்பது நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

எட்டப்பனைப் போல் அதில் களங்கம் ஏற்படுத்தும் வேலையை இத்தோடு விட்டுவிடுங்கள் டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset