நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

பாரிசான் இருக்குமா, பெரிக்கத்தான் வெல்லுமா? - அரசியல் அலசல்

அம்னோவுக்கும் பாஸ் கட்சிக்கும் இடையேயான Muafakat நேசனல் உடன்படிக்கை குறித்து கடந்த வாரம் அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சாஹித் ஹமிதியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு, Muafakat நேசனல் இன்னும் இருக்கிறதா என்று பதிலுக்கு கேள்வி எழுப்பினார் சாஹித் ஹமிதி.

அண்மைய சில தினங்களாக அம்னோ முதுகில் குத்தப்பட்டுவிட்டது என்கிற ரீதியில் சமூக ஊடகங்களில் ஏராளமானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவற்றைச் சுட்டிக்காட்டிய சாஹித் ஹமிதி, "அக்கருத்துக்களை கவனத்தில் கொள்ளும் பட்சத்தில் அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி கொடியின் கீழ் தனித்து நிற்பதே அம்னோவுக்கு நன்மை பயக்கும்," என்றார்.
ஓர் இணைய ஊடகத்துக்கு புதன்கிழமை அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அடுத்த நாளே, பெரிக்கத்தான் நேசனல் மற்றும் பெர்சாத்து தலைவருமான டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கூறுகையில், "அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவும் பாரிசானும் தங்களுடன் இருந்தாலும் இல்லாமல் போனாலும், பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளை உள்ளடக்கிய பெரிக்கத்தான் கூட்டணியானது, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும்," எனத்  திட்டவட்டமாக அறிவித்தார்.

மேலும், அடுத்த பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன் ஒத்துழைப்பதில்லை என்று அம்னோ எடுத்துள்ள முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கடந்த வெள்ளிக்கிழமை சாஹித் ஹமிதி உறுதியாகத் தெரிவித்தார்.

தவிர, பெரிக்கத்தான் கூட்டணி அமைக்கப்பட்டதை நிராகரிப்பதாகவும் தேசிய முன்னணியை (பாரிசான்) வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது என்றும் அம்னோ பொதுப்பேரவை 2020இல் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக  அவர் குறிப்பிட்டார்.

எனவே, அம்னோ, பெர்சாத்து கட்சித் தலைவர்களின் அறிக்கைகளைப் பார்க்கும்போது நாட்டின் மூன்று பெரிய மலாய் கட்சிகளும் வரும் பொதுத்தேர்தலில் மோதிக்கொள்ளும் என்பது தெரிய வருகிறது. குறிப்பாக, பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சிகளுடன் மோதும் நிலையில் உள்ளது அம்னோ.

கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் அம்னோ, பாஸ், பெர்சாத்து ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து 85 நாடாளுமன்றத் தொகுதிகளை (அம்னோ - 54, பாஸ் - 18, பெர்சாத்து - 13) கைப்பற்றின. எனவே, இந்த மூன்று கட்சிகளும் இணைந்தால் 15ஆவது பொதுத்தேர்தலில் வலிமையான சக்தியாக உருவெடுக்க முடியும்.

"மூன்று மலாய் கட்சிகள் இணைந்து 15ஆவது பொதுத்தேர்தலை எதிர்கொண்டால் மலாய் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள 122  தொகுதிகளில் பெரும்பாலானவற்றைக் கைப்பற்ற முடியும்," என்கிறார் டெக்னாலஜி மலேசியா பல்கலைக்கழகத்தின் (UTM) அரசியல் ஆய்வாளரான டாக்டர் மஸ்லான் அலி (Dr. Mazlan Ali).

ஒரு தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களில் 51 விழுக்காட்டினர் மலாய் மக்களாக இருந்தால் அதை மலாய் பெரும்பான்மைத் தொகுதி என்று இவர் குறிப்பிடுகிறார்.

Goldman Sachs' $3.9 Billion Settlement In 1MDB Scandal - An Opportunity For  Muhyiddin To Send Rival Najib To Jail | FinanceTwitter

அம்னோவும் பாஸ் கட்சியும் இணைந்து செயல்பட்டால் 71 மலாய் தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று மற்றொரு அரசியல் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
அதிலும் குறிப்பாக, 70 விழுக்காடுக்கும் மேல் மலாய் வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும்  வெற்றி பெற முடியும் என்று கணிப்புகள் நிலவுகின்றன.

இதே வேளையில் மூன்று பெரிய மலாய் கட்சிகளும் இணைந்து போட்டியிடும் பட்சத்தில் அதிகபட்சம் நூறு தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற நிலை தற்போது மாறிவிட்டதாக இன்னொரு ஆய்வாளர் சுட்டிக்காட்டுகிறார்.
வாக்களிப்பதற்கான வயது வரம்பு 21இல் இருந்து 18ஆக குறைக்கப்படும் பட்சத்தில் நிலைமை மாறக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் கூட்டணி தொடர்பாக அம்னோவின் பல்வேறு தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பொறுத்தே, பெர்சாத்து மற்றும் பாஸ் ஆகிய இரு கட்சிகளுடன் தேர்தல் உடன்பாடு ஏற்படும். எனினும், தற்போதைய சூழலில் பாஸ் மற்றும் பெர்சாத்து ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவர்களுடன் அம்னோ தேசியத் தலைவருக்கு சுமூக உறவு இருப்பதாகத் தெரியவில்லை.
பாஸ், பெர்சாத்து உடனான கூட்டணி தொடர்பில் கட்சியில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த அம்னோ தலைவர்கள் தவறும் பட்சத்தில் 15ஆவது பொதுத்தேர்தலில் பாரிசான் என்ற குடையின் கீழ் அம்னோ தனித்துப் போட்டியிட வேண்டியிருக்கும்.

"அவ்வாறு நிகழும் பட்சத்தில் அம்னோ 60 முதல் 70 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறக்கூடும். தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டால் அம்னோ எந்தவித வியூகமும் இன்றி களமிறங்குவதாக அர்த்தமாகாது.
"ஒருவேளை பெர்சாத்து, பாஸ் கட்சிகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டியிருந்தால் பக்காத்தான் ஹரப்பானுடன் அம்னோ ஒருவித புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளக்கூடும்," என்கிறார் UTM ஆய்வாளர் மஸ்லான் அலி.

அரசியல் கள நிலவரங்கள் குறித்து அண்மைய கருத்துக்கணிப்பின் மூலம் சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அம்னோவும் பாரிசானும் தனித்து களமிறங்கினால் நிச்சயம் வெற்றி பெறும் என்று மூன்று விழுக்காடு மலாய்க்காரர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். 19 விழுக்காட்டினர் இந்தக் கருத்தை வலுவாக ஆமோதித்துள்ளனர். 33 விழுக்காட்டினர் இவ்வாறு நடந்தால் அம்னோவுக்கு ஒருவேளை வெற்றி கிடைக்கக்கூடும் என்றும், வெற்றிக்கு வாய்ப்பில்லை என 26 விழுக்காட்டினரும், 19 விழுக்காட்டினர் கணிக்க முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மலாய் வாக்காளர்களைப் பொறுத்தவரை எந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியும் என்பதைத்தான் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.
அம்னோ, பாஸ், பெர்சாத்து இணைந்தால் ஆட்சி அமைக்க முடியும் என மலாய்க்காரர்கள் கருதுகின்றனர். மேலும் அம்னோவால் ஆட்சி அமைக்க முடியுமா என்பது தொடர்பில் அவர்களுக்கு சந்தேகம் உள்ளது.
அம்னோவால் குறைந்தபட்சம் 35, அதிகபட்சம் 70 இடங்களில் வெற்றி பெற முடியும் எனில், மற்ற கட்சிகளுக்குக் கிடைக்கும் இடங்கள் இயல்பாகவே குறையும்.

தீபகற்ப மலேசியாவில் மலாய் கட்சிகளுக்கு 95 தொகுதிகள்தான் உள்ளன. இவற்றைத்தான் அவை பகிர்ந்துகொள்ள வேண்டும். இதே வேளையில் மலாய்க்காரர்கள் அல்லாத, மற்ற இனத்தவர்கள் கலந்துள்ள தொகுதிகளில் பக்காத்தானின் ஆதிக்கம் இருக்கும்.

70 விழுக்காடு மலாய்க்காரர்கள் உள்ள தொகுதிகளில்தான் மலாய் கட்சிகளால் எளிதில் வெல்ல முடியும். அதற்கும் குறைவாக இருந்தால் வெற்றி எளிதில் கிடைத்துவிடாது.

பெரிக்கத்தான் கூட்டணியின் கீழ் பாஸ், பெர்சாத்து போட்டியிடும் பட்சத்தில் பாஸ் வலுவாக உள்ள தொகுதிகளில் வெற்றி கிட்டும். கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
இதே போல் பக்காத்தான் தரப்புக்கும் சில பாதக, சாதக அம்சங்கள் உள்ளன. கெடா, கிளந்தான், பகாங், பெர்லிஸ், திரங்கானு ஆகிய மாநிலங்களில் 40 முதல் 50 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பை பெரிக்கத்தான் கொண்டுள்ளது.

தாம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் அம்னோவுக்கு மலாய் வாக்காளர்களில் சுமார் 38% ஆதரவு உள்ளது எனத் தெரிய வந்ததாக மஸ்லான் கூறுகிறார்.
"பெரும்பாலான மலாய் வாக்காளர்கள் ஸ்திரமான அரசாங்கம் தேவை எனக் கருதுகின்றனர். மேலும், மலாய் - இஸ்லாம் சார்ந்த அரசாங்கம் வேண்டும் என்றும் நினைக்கின்றனர்.

"தீபகற்ப மலேசியாவில் 35 விழுக்காடு மலாய் வாக்காளர்கள் அம்னோவை அதரிக்கின்றனர். 50 விழுக்காட்டினர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. மீதமுள்ளவர்கள் பெரிக்கத்தான் அல்லது பக்காத்தானை ஆதரிக்கின்றனர்," என்கிறார் மஸ்லான்.

மேலும், பக்காத்தானை முன்பு ஆதரித்தவர்கள் இப்போது அதன் மீது கோபத்தில் உள்ளனர் என்றும், தேர்தல் வாக்குறுதிகளை பக்காத்தான் நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி அவர்களுக்கு உள்ளது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது கட்சி சார்ந்து மட்டுமல்லாமல், தலைவர்களின் ஆளுமையையும் வாக்காளர்கள் உற்று கவனிக்கிறார்கள். இந்த ஆண்டு மத்தியில் பெரிக்கத்தான், பாரிசான் ஆகிய இரு தரப்பையும் வாக்காளர்கள் சமமாகப் பார்த்த நிலை மாறிவிட்டது.  புதிய வாக்காளர்கள், அதிலும் குறிப்பாக இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும்,  களத்தில் போட்டியிடும் தரப்புகளும் எண்ணிக்கையும் கூடியுள்ளது. எனவே, இம்முறை எந்தத் தரப்புக்கு வேண்டுமானாலும் வெற்றி கிடைக்கக்கூடும்.

எதிர்வரும் 15ஆவது பொதுத்தேர்தல் என்பது புதிய தரவுகளின் அடிப்படையில் அணுகப்படும் தேர்தல் ஆகும். இம்முறை பழைய தரவுகளைப் பயன்படுத்த இயலாது.

தற்போதைய சூழலில் அம்னோவின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என்பதை மறுப்பதற்கில்லை. மேலும், பெரிக்த்தான் அல்லது குறைந்தபட்சம் பாஸ் கட்சியுடன் அம்னோவுக்கு தேர்தல் சார்ந்த ஒரு புரிந்துணர்வு ஏற்படலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

- அறிவுக்கரசு 

தொடர்புடைய செய்திகள்

+ - reset