நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பதவி வகித்தபோது செய்யப்பட்ட முறைகேடுகள்; இனி விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடு: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை

சென்னை: 

நடிகர் விஷால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகள் செய்ததாக, தற்போது என்.ராமசாமி என்கிற முரளி தலைவராக பதவி வகிக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பகிரங்க குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இனி விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து நேற்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 2017-19ம் ஆண்டு வரையிலான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் மீது எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில், 2019ம் ஆண்டில் இருந்த தமிழ்நாடு அரசு, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்தது. 

2019ம் ஆண்டு நியமிக்கப்பட்ட தனி அதிகாரி, சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று ஒரு சிறப்பு ஆடிட்டரை நியமித்தார். 

அந்த ஸ்பெஷல் ஆடிட்டர், கணக்கு வழக்குகளை சரிபார்த்து அளித்த அறிக்கையில், அப்போது சங்கத்தில் இருந்த நிதி தவறான முறையில் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதில், சங்கத்தின் வங்கி கணக்கில் ஏற்கனவே வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த 7 கோடியே 50 லட்ச ரூபாய் மற்றும் 2017-19ம் ஆண்டுகளில் வரவு, செலவு 5 கோடி ரூபாயும் சேர்த்து, சுமார் 12 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அவ்வாறு சங்கத்தில் இருந்து முறைகேடாக செலவழிக்கப்பட்ட தொகையை சங்கத்துக்கு திருப்பி அளிக்க வேண்டும் என்று விஷாலுக்கு பலமுறை தெரியப்படுத்தியும், இதுநாள்வரை அவர் எந்த பதிலும் அளிக்காமல் இருக்கிறார். ஆகவே, மேற்படி விஷயத்தை சரிசெய்யும் பொருட்டு, 

ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரைப்படி ஏகமனதாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இனிவரும் காலங்களில் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை கலந்தாலோசித்து, அதற்கு பிறகே தங்கள் பணிகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset