நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிஎம் கேர்ஸ் நிதி அரசுக்கு சொந்தமானது அல்ல: நீதிமன்றத்தில் இந்திய ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்

புது டெல்லி:

பிஎம் கேர்ஸ் நிதியம், அரசுக்குச் சொந்தமான நிதியமைப்பு அல்ல; அந்த நிதியம் நன்கொடையாக வசூலித்த தொகை இந்திய அரசின் நிதியத்துக்குச் செல்லவில்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய ஒன்றிய அரசு அதிர்ச்சியூட்டம் தகவலைத் தெரிவித்துள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மூன்றாம் தரப்பு தகவல்களை அளிக்க முடியாது என்றும் ஒன்றிய அரசு கூறியுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவியபோது, அதைக் கட்டுப்படுத்தவும், மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க உதவவும் "பிஎம் கேர்ஸ் டிரஸ்ட்" என்ற பெயரில் அறக்கட்டளையை பிரதமர் நரேந்தி மோடி தொடங்கினார். அந்த அறக்கட்டளை, "பிஎம் கேர்ஸ் ஃபண்ட்' என்ற பெயரில் நன்கொடை பெற்று வந்தது.

இந்நிலையில், பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை தொடர்பாக, சம்யக் கங்வால் என்பவர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மத்திய தகவல் ஆணையர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையை இந்திய ஒன்றிய அரசுக்கு சொந்தமான அறக்கட்டளையாக அறிவிக்கக் கோரி அவர் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், பிஎம் கேர்ஸ் நிதியம் அரசமைப்புச் சட்டப்படி இந்திய அரசுக்குச் சொந்தமானதாக இல்லை என்றால், அதன் வலைதள முகவரியில் "ஜிஓவி' என்ற பெயரைப் பயன்படுத்தக் கூடாது.

பிரதமரின் புகைப்படத்தையும் இந்திய அரசின் லச்சினையையும் பயன்படுத்தக் கூடாது. அந்த நிதியத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த வரவு-செலவு கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். அதன் விவரங்கள் வலைதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு, தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி அமித் பன்சால் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அந்த அறக்கட்டளையின் பொறுப்பாளரும், பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலருமான பிரதீப்குமார் ஸ்ரீவாஸ்தவா சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:

பிஎம் கேர்ஸ் நிதியம், மத்திய அரசின் அமைப்பு அல்ல. இந்த நிதியம் அனைத்து நன்கொடைகளையும் இணைய வழி அல்லது காசோலை அல்லது டி.டி. முறையில் பெறுகிறது. பெறப்பட்ட நன்கொடைக்கு வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு, அதன் விவரங்கள், நிதியத்தின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்த நிதியம், அரசுக்குச் சொந்தமானது அல்ல; அரசின் உதவியுடன் செயல்படும் தனி அமைப்பும் அல்ல. இதனால், தகவல் பெறும் உரிமைச் சட்ட வரம்புக்குள் இந்த அமைப்பு வராது. எனவே, மூன்றாம் தரப்பு தகவல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்க இயலாது.

இந்த நிதியத்துக்கு மதிப்பூதிய அடிப்படையில் நான் பணியாற்றி வருகிறேன். நான் மத்திய அரசு அதிகாரியாக இருந்தாலும், பிஎம் கேர்ஸ் நிதியத்தில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை, வரும் 27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset