நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுக்கு தடை: இந்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் (எல்டிடிஇ) மீதான தடையை மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் நேற்று வெளியிட்டது.

1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எல்டிடிஇ அமைப்பை தீவிரவாத இயக்கம் என இந்திய அரசுஅறிவித்தது. 

இந்தியா முழுவதும்அந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்ததடை நீட்டிக்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில், 2019-ம் ஆண்டு மே மாதம் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இந்தத் தடை நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும்5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மத்தியஉள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

 
எல்டிடிஇ அமைப்பு 2009-ம்ஆண்டு தோல்வி அடைந்தபோதிலும், ‘ஈழம்’ தொடர்பான நோக்கத்தை அந்த அமைப்பு இன்னும் கைவிடவில்லை. குறிப்பாக, தமிழ்நாட்டில் ஈழத்துக்கு ஆதரவுத் தரப்பு உள்ளது. அந்த அமைப்பின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் ஈழத்துக்காக நிதி சேகரிப்பிலும் பிரச்சாரத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

எல்டிடிஇ இயக்கத்தின் செயல்பாடுகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது. மேலும் இந்திய மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.

பிரிவினைவாத கருத்துகள் தொடர்ந்து பரப்பப்படுகின்ற நிலையில், எல்டிடிஇ அமைப்பு மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset