நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

கவிஞர் வாலியும் உமணரும் - இலக்கியச் சுவைகூட்டல்

ஒரு பேட்டியின்போது கவிஞர் வாலியிடம் நீங்கள் எழுதிய பாடல்களிலேயே “உங்களுக்குப் பிடித்தமான வரிகள் எது?” என்று  கேட்டபோது ‘உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்’  என்ற பாடலில் வரும் 

“கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்”

என்ற வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். 

இந்த தகவல் ஒருபுறமிருக்கட்டும். நேற்று குறுந்தொகை பாடல்களை கண்ணுற்றபோது,  பண்டைய காலத்தில் உமணர்களின் வாழ்க்கை முறையை நன்குற அறிந்துக் கொள்ள முடிந்தது.  

யாரிந்த உமணர்கள்? (ஏ.வி.ரமணனுக்கும், இந்த உமணருக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று இதனால் தெரிவித்துக் கொள்வதாவது ) 

முன்பெல்லாம் நம் ஊர்களில் மாட்டு வண்டியைப் பூட்டிக் கொண்டு தெருவில்  உப்பு வணிகம் புரிவோரை நாம் கண்கூடாக பார்த்திருப்போம். இப்போது அதுபோன்ற காட்சிகளை நாம் காண முடிவதில்லை. 

நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பரதவர்கள் பாத்தி கட்டி, கடல் நீரைத் தேக்கி வைத்து,  சூரிய வெப்பத்தில் அந்த உப்பு நீர் ஆவியான பின்னர் உப்பு உற்பத்தி செய்வார்கள். 

உமணர் என்ற இனக்குழுவினர் இதனை சந்தைப் படுத்துவார்கள். இவர்கள் உப்பை வண்டியில் குடும்பத்துடன் ஏற்றிச் சென்று  ஊர் ஊராக திரிந்து விற்பனைச் செய்வார்கள். பெரும்பாலும் உமணப் பெண்களே வண்டியோட்டிச் செல்வார்கள். 

உமணர் சேர்ந்து கழிந்து மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன ஓமையம் பெருங்காடு
இன்னா என்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே

என்ற குறுந்தொகை பாடலிலிருந்து இவர்கள் கூட்டாகச் சென்று வியாபாரம் செய்வதை நாம் அறிய முடிகின்றது. 

ஊர் ஊராகச் செல்லும் உமணர்கள் எருதுகள் பலவற்றையும் பரந்து மேயும்படி அவிழ்த்து விட்டுச் சமைத்து உண்டு இளைப்பாறி அவ்விடத்தை விட்டும் செல்வர் என அகநானூற்று பாடலொன்றும் பகர்கிறது.

உப்புக்கு மாற்றாக பிற பொருள்கள் பண்டமாற்று செய்யப்பட்டன.  அகநானூறு,  பெரும்பாணற்றுப்படை,  மலைபடுகடாம், நற்றிணை, பட்டினப்பாலை ஆகிய நூல்களில் இதுபோன்ற தகவல்களை நாம் பெற முடிகிறது. 

“உமண் எருத்து ஒழிகைத் தோடு நிரைத்தன்ன” 
 
என்று ஒளவையார் பாடிய வரிகளிலிருந்து காற்றடிக்கும் காலத்தில் எருது பூட்டிய உப்பு வண்டிகளைச் செலுத்தாது உமணர்கள் நிறுத்தி வைத்தனர் என்பதை நாம் அறிகிறோம். காரணம், மழைத்தூறலில் உப்பு கரைந்துவிடும் என்பதால் அதனை தகுந்த பாதுகாப்போடு மூடி, வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி வைப்பார்கள்.

ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட கவிஞர் வாலி பேட்டியின்போது கூறிய வரிகளை   இப்போது நாம் தொடர்புபடுத்தி பார்ப்போம் 

எந்தவொரு கவிஞனும் பாடல் புனையும்போது, அவன் படித்து ரசித்த, அவனை மிகவும் கவர்ந்த, அவனுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய,  இலக்கிய வரிகள் அவனை அறியாமலேயே தோன்றி விடுகிறது போலும். கவிஞர் வாலிக்கும் இது பொருந்துகிறது. 

இதே கருத்தை மையமாகக் கொண்டு எதிர்மறை கருத்தாக “அபூர்வ சகோதரர்கள்” படத்தில் வாலி படம்பிடித்து காட்டியிருக்கிறார். 

“கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்
காற்றடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்”

என்ற வரிகள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 
 

- அப்துல் கையூம், பஹ்ரைன் 

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset