நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தான்ஶ்ரீ விக்னேஸ்வரனை எதிர்த்துப் போட்டியிட ஆள் இல்லையா?

கோலாலம்பூர்: 

மலேசிய இந்தியர்களின் தாய்க் கட்சி எனப்படும் மலேசிய இந்தியக் காங்கிரஸ் மஇகாவின் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறுகின்றது. இச்சூழ்நிலையில் அக்கட்சியின் தலைவராக தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தான் நீடிப்பார் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

இம்முறையும் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடக்காது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. தான்ஶ்ரீ விக்னேஸ்வரனை எதிர்த்துப் போட்டியிட யாரும் இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தாலும், அவர் தான் தொடர்ந்து கட்சியை வழிநடத்த வேண்டுமென உயர்மட்ட தலைவர்களும் அக்கட்சியில் பெரும்பாலான தொகுதி, கிளைத் தலைவர்களின் எண்ணமாக உள்ளது

2018ஆம் ஆண்டு நடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்டது. அந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று அத்தருணத்தில் அக்கூட்டணியிலிருந்த முதன்மை கட்சிகளின் தலைவர்கள் பதவி விலகினார்கள். அம்னோ தலைவர் பதவியிலிருந்து நஜீப் விலகினார். மசீச தலைவர் பொறுப்பிலிருந்து, லியோ தியோங் லொய் விலகிக் கொண்டார். அதேபோல் மஇகா தலைவராக இருந்த டாக்டர் சுப்பிரமணியமும் கட்சித் தேர்தலில் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதில்லை என முடிவு செய்தார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் யார் மஇகாவிற்குத் தலைமையேற்பார் என்ற கேள்வி எழுந்த நிலையில் 2018ஆம் ஆண்டு மஇகா தலைவராகத் தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 3ஆவது தவணையாக அவர் அதே பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிடுகின்றார்.

அமைச்சரவையில் மஇகாவிற்கு இடமில்லை என்றவுடன் பலர் அக்கட்சியை விட்டு விலகினார்கள். ஆனால் மஇகா தான் மலேசிய இந்தியர்களின் அடையாளமெனத் தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தம்மை அக்கட்சிக்கு அர்பணித்தார்.

அவர் அக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றது முதல், மஇகா புதிய உத்வேகத்துடன் பயணிக்கத் தொடங்கியதை யாரும் மறுக்க முடியாது. மீண்டும் இந்திய சமுதாயத்தின் ஆதரவை பெற வேண்டுமெனக் கட்சியை வலுப்படுத்தும் செயல் திட்டங்களை முன்னெடுத்து அதில் வெற்றி கண்டார்.

ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் கடனை முழுமையுமான அடைத்து, இந்திய சமுதாய மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் கொடுக்கும் செயல் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தினார். அதோடு சமுதாயத்திற்காகத் தொடர்ந்து உழைக்கும் மன வலிமையை அவர் தமதாக்கிக் கொண்டார்.

உடல் நலம் சரியில்லை. அவர் அரசியலிலிருந்து விடுபடுவார் என்ற வதந்திகள் தொடர்ந்து வந்தாலும், மஇகாவிற்கெனத் தனி அடையாளத்தை உருவாக்க, தலைநகரில் விண்ணை முட்டும் தலைமையகத்தை உருவாக்கும் கனவில் காலடி எடுத்து வைத்துள்ளார் தான்ஶ்ரீ விக்னேஸ்வரன்.

தாம் கண்ட அனைத்து கனவுகளையும் நனவாகுவதில் வல்லமை கொண்ட அவர், யாருடைய ஆதரவும் இல்லாமல் தனிப் பொருளாதாரப் பலத்துடன் செயல்படும் மஇகாவை உருவாக்காமல்  ஓயமாட்டார்.

அந்த அடிப்படையில் மஇகாவின் தலைவராகத் தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தொடர்ந்து நீடிப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தான்ஶ்ரீ விக்னேஸ்வனை எதிர்த்து போட்டியிட ஆள் இல்லையா என்ற கேள்வி எழுந்தாலும், அவரின் கனவு நனவாக அவரே தலைவராக நீடிக்க வேண்டுமென்பதுதான் மஇகா  தலைவர்களின் சிந்தனையாக உள்ளது.

-தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset