நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

40 எம்எல்ஏக்கள் உள்ள காங்கிரஸை 25 எம்எல்ஏக்களுடன் பாஜக வெற்றி

சிம்லா:

இமாசல பிரதேசத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 40 எம்எல்ஏக்கள் உள்ள காங்கிரஸை 25 எம்எல்ஏக்களுடன் பாஜக வீழ்த்தி வெற்றி கண்டது. இதற்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகளித்ததே காரணம்.

இமாசல பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏக்கள் இருந்தும், 25 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவுக்கு 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறியும், 3 சுயேச்சைகளும் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜனுக்கு வாக்களித்தனர்.

இதனால் காங்கிரஸ் வேட்பாளரும், மூத்த வழக்குரைஞருமான அபிஷேக் மனு சிங்வியும், ஹர்ஷ் மஹாஜனும் 34 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர்.

பின்னர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டதில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆளும் மாநிலத்திலேயே காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாதது அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை ஹரியாணா போலீஸார் கடத்திச் சென்றதாக இமாசல முதல்வர் சுக்வீந்தர் சிங் குற்றம்சாட்டினார்.

இதேபோல், உத்தர பிரதேச மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் சமாஜவாதி கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு கட்சி மாறி வாக்களித்ததால் பாஜக 8 இடங்களையும், சமாஜவாதி 2 இடங்களையும் பிடித்தன.

தேர்தல் தொடங்கியபோது எதிர்க்கட்சியான சமாஜவாதியின் தலைமைக் கொறடா கட்சியைவிட்டு விலகுவதாக அறிவித்தார்.

ஆளும் பாஜகவுக்கு 252 எம்எல்ஏக்களும், சமாஜவாதிக்கு 108 எம்எல்ஏக்களும் உள்ளனர். இதில், பாஜக 8 பேரை நிறுத்தியதால் தேர்தலில் போட்டி ஏற்பட்டது.

சமாஜவாதி தரப்பில் முன்னாள் எம்.பி.யும் நடிகையுமான ஜெயா பச்சன், தலித் தலைவர் ராம்ஜி லால் சுமன் வெற்றி பெற்றனர்.

அக் கட்சியின் மற்றொரு வேட்பாளரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அலோக் ராஜன் தோல்வியடைந்தார்.

கட்சிமாறி வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

கர்நாடகம்:

கர்நாடகத்தில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் 3 இடங்களையும், பாஜக ஓரிடத்தையும் கைப்பற்றியது. இதில் பாஜக எம்எல்ஏ கட்சி மாறி காங்கிரஸுக்கு வாக்களித்தார்.

ஒரு வேட்பாளரின் வெற்றிக்கு 45 வாக்குகள் தேவை என்பதால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மஜத வேட்பாளர் குபேந்திர ரெட்டிக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பாஜக எம்எல்ஏ எஸ்.டி.சோமசேகர், காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மாக்கனுக்கு கட்சி மாறி வாக்களித்தார். மற்றொரு பாஜக எம்எல்ஏ சிவராம் ஹெப்பார் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset