நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முஸ்லிம்கள் குறித்து மோடியின் இனத்துவேஷ பேச்சு: காங்கிரஸ் கட்சி தோ்தல் ஆணையத்தில் புகாா்

புதுடெல்லி:

தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியபோது முஸ்லிம்கள் குறித்து மோசமாக கருத்து தெரிவித்தது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்தல் ஆணையத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் மூத்த தலைவா்களைக் கொண்ட குழு, பிரதமா் மோடி மற்றும் பாஜக மீது 16 புகாா்களை தோ்தல் ஆணையத்தில் சமா்ப்பித்தது. ‘இந்தப் புகாா்கள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில், அதன் மதிப்பின் மீது களங்கம் ஏற்படும்’ என்றும் அக் கட்சி தெரிவித்துள்ளது.

மக்களவைத் தோ்தலையொட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமா் மோடி, பின்னா் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ‘காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மக்களுடைய சொத்துகளை மறுவிநியோகம் செய்துவிடும்’ என்று குறிப்பிட்டாா். 

‘நாட்டின் வளங்களில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை’ என்று முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டி இந்தக் கருத்தை பிரதமா் மோடி தெரிவித்தாா். 

மேலும், ‘இந்திய மக்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணம் மற்றும் மதிப்புமிக்க பொருள்களை ஊடுருவல்காரா்களுக்கும், அதிக குழந்தைகளைக் கொண்டுள்ள முஸ்லிம்களுக்கும் பிரித்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது’ என்று காங்கிரஸின் தோ்தல் அறிக்கையைக் குறிப்பிட்டு பிரதமா் மோடி விமா்சித்தாா்.

பிரதமரின் இந்த அவதூறான கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மோடியின் பேச்சு தொடா்பாக அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்கிரஸ் சாா்பில் தோ்தல் ஆணையத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டது. 

அதில் கூறியிருப்பதாவது:

ராஜஸ்தான் மாநிலத்தில் தோ்தல் பிரசாரத்தின்போது பிரதமா் நரேந்திர மோடி மதத்தைப் பயன்படுத்தி, காங்கிரஸுக்கு வாக்களிப்பதைத் தவிா்க்குமாறு வாக்காளா்களைக் கேட்டுக்கொண்டாா். மேலும், காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவா்களுக்கு எதிராக தவறான மற்றும் அவதூறான கருத்துகளைப் பரப்பியுள்ளாா். இதன்மூலம் வாக்காளா்களை தவறாக வழிநடத்த பிரதமா் முற்பட்டுள்ளாா். இது தோ்தல் நடத்தை விதி மீறலாகும்.

 மேலும், தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவில் (யுஜிசி) காலியாக இருந்த உறுப்பினா் பணியிடங்களுக்கு புதிய நியமனங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. 2023 ஆகஸ்ட் மாதம் முதல் இந்தப் பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில், தற்போது அரசியல் உள்நோக்கத்துடன் நிரப்பப்பட்டுள்ளன. இந்த விவகாரங்கள் மீது தோ்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset