நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சிறுபான்மையினருக்காக கைகோர்த்த கர்நாடக மக்கள்: வெறுப்புணர்வுக்கு மறுப்பு

பெங்களூரு:

கர்நாடகத்தில் ஆளும் பாஜக மேற்கொண்டு வெறுப்புணர்வு பேச்சுகளுக்கும், சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைக்கும் கர்நாடக மக்கள் ஒன்று சேர்ந்து கைகோர்த்து முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

அமைதியை வலியுறுத்தி பிரச்சாரம் செய்த காங்கிரஸுக்கு 135 இடங்களில் வெற்றி பெற வாக்களித்துள்ளனர். சுமார் 20 ஆண்டுகளாக யாருக்கும் பெரும்பான்மை பலம் இல்லாமல் குதிரை பேர ஆட்சி நடைபெற்று வந்த கர்நாடகத்தில் இந்த முறை மக்கள் தெளிவான முடிவை அளித்துள்ளனர்.  

இதற்கு ஆளும் பாஜக அரசுக்கு எதிரான மனநிலையும், காங்கிரஸின் ஊழல் எதிர்ப்பு பிரசாரமும், 5 முக்கிய வாக்குறுதிகளும், முஸ்லிம் வாக்குகளை ஒன்றிணைத்தும்தான் முக்கிய காரணமாகும்.

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என  என கல்வி நிலையங்களில் மாணவர்கள் மத்தியில் மோதல் ஏற்படுத்தியது, முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீட்டை பறித்து மாற்று சமூகத்தினருக்கு அளித்தது,, முஸ்லிம், ஹிந்து பண்டிகளின்போது மோதல் போன்ற சம்பவங்களால் கர்நாடகத்தில் எப்போதும் மத பரபரப்பு நிலவி வந்தது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கர்நாடகத்தில் 17 சதவீத வாக்குகள் உள்ள முஸ்லிம்கள் ஒன்றாகவும், அமைதி, மத சகோதரத்தை விரும்பும் கர்நாடக மக்களும் ஒன்று சேர்ந்து காங்கிரஸுக்கு வாக்களித்ததால் 42.88 சதவீத வாக்குகள் பெற்று 135 இடங்களில் அக் கட்சி அமோக வெற்றி பெற்றது.

இத்துடன், பாஜக அரசு மீதான 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டும், அதானி விவகாரத்தை தேர்தலின் முதல் நாளிலிருந்தே காங்கிரஸ் கட்சி முன்வைத்து பிரசாரம் செய்து வந்தது.

இதேபோல், பஜ்ரங் தள அமைப்புக்கு எதிராக தடை விதிக்கப்படும் என்று காங்கிரஸ் அளித்த வாக்குறுதியும், அதை எதிர்த்து பாஜகவும், பிரதமர் மோடியும் ஹிந்துக்களின் ஆதரவைப் பெற மேற்கொண்ட தீவிர ஜெய் ஹனுமன் பிரசாரத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்காமல், பாஜக அரசின் மோசமான நிர்வாகத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

மாநிலத்தில் மொத்தம் 99 பொதுக்கூட்டங்களையும், 33 பேரணிகளையும் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சி, 150 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் குதிரை பேரத்தை தவிர்க்க முடியும் எனவும், 2018 தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் தீவிர பிரசாரம் செய்தது.

இது பிரதமர் மோடி 7 நாள்களில் 18 பொதுக் கூட்டங்கள், 38 கி.மீ. தூர திறந்து வெளி பிரசாரத்தை முறியடித்தது. 

இந்தத் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டு அதிகமாக இருந்ததால் மாநில பாஜக மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் 72 புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்தது. ஊழல் குற்றச்சாட்டுகளால் 12-க்கும் மேற்பட்ட பாஜக அமைச்சர்கள் தேர்தலில் படுதோல்வி அடைந்தனர்.

லிங்காயத்து சமூகத்தினரின் கோபம்

லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களான முன்னாள் பாஜக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மண் சவதி ஆகியோர் காங்கிரஸுக்கு வந்ததும், அந்தச் சமூகத்தினரின் ஆளும் பாஜகவுக்கு எதிரான கோபமும் காங்கிரஸுக்கு அதிக வாக்குகளைப் பெற்று தந்தது.

இதனால் பிரதமர் மோடியின் அலையும், தேசியவாதம், ஹிந்துத்துவா, நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் அரசு ஆகியவற்றை முன்வைத்த பாஜக பிரசாரம்  தோல்வியை சந்தித்தது.

இத்துடன், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை, 10 கிலோ இலவச அரிசி, 18 முதல் 25 வயது வரையிலான வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரமும், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் ஆகிய 5 வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த முதல் நாளே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி காங்கிரஸுக்கு தேர்தலில் பலத்தை ஏற்படுத்தியது.

38 ஆண்டுகள் கர்நாடகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி ஆட்சியை அமைத்து வருவதுதான் வரலாறு. இந்த வரலாறு மாறாமல் தற்போது காங்கிரஸும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அமைக்கிறது. கர்நாடக தேர்தல் வெற்றி காங்கிரஸுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இது அடுத்த சில மாதங்களில் நடைபெறும்

4  மாநில தேர்தலிலும், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset