நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஆவலுடன் எதிர்நோக்கப்படும் கர்நாடகா தேர்தல் முடிவுகள் - மக்களவை தேர்தலுக்கான திருப்புமுனையாகுமா? - ஓர் அரசியல் பார்வை

புதுடெல்லி: 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல், அடுத்த வருட மக்களவை தேர்தலுக்கான திருப்புமுனையாகும் வாய்ப்புகள் உள்ளன. இதனால், அம்மாநில முடிவுகளை ஆளும் கட்சியுடன், எதிர்க்கட்சிகளும் ஆவலுடன் எதிர்நோக்குகின்றன.

அடுத்த வருட மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஒன்பது மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு தொடங்கியது. இவற்றின் தாக்கம் 2024 மக்களவைத் தேர்தலில் ஏற்படும் எனக் கருதப்பட்டது.

இப்பட்டியலில் முதலாவதாக திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 

கடந்த மார்ச்சில் வெளியான இதன் முடிவுகளுக்குப் பிறகு திரிபுராவில் பாஜக தனித்தும் மற்ற இரு மாநிலங்களில் அதன் கூட்டணி சார்பிலும் ஆட்சி அமைந்தன. 

இதனால் உற்சாகம் குறையாமல் இருந்த பாஜகவிற்கு கர்நாடக தேர்தல் பெரும் சவாலாகியது.

எதிர்கட்சிகள் ஒன்றிணைப்பு

ஏனெனில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். 

காங்கிரஸுடன் சேர இதுவரை எதிர்ப்பு தெரிவித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்த ஆபத்தை பாஜகவும் உணர்ந்துள்ளது.

கடந்த 2014 முதல் பெரும்பாலான தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியையே சந்தித்து வருகிறது. 

கடந்த ஆண்டு இமாச்சல பிரதேச வெற்றிக்கு பிறகு கர்நாடகாவிலும் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு உள்ளது. இந்த வெற்றியை பொறுத்தே வரும் மக்களவைத் தேர்தலில் பிற எதிர்க்கட்சிகள் அதனுடன் கூட்டுசேரும் நிலை உள்ளது.

இதனால் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய காந்தி குடும்பத் தலைவர்கள் இதுவரை இல்லாத வகையில் கர்நாடகாவில் தீவிரப் பிரச்சாரம் செய்தனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சொந்த மாநிலம் என்பதால் அவருக்கும் இங்கு வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

பாஜகவை பொறுத்தவரை, 2014 மக்களவை தேர்தலில் தொடங்கிய ‘மோடி அலை’ வீச்சையே அக்கட்சி இன்னும் நம்பியுள்ளது. இதனால் அனைத்து தேர்தல்களிலும் பிரதமர் நரேந்திர மோடியே முன்னிறுத்தப்படுகிறார். கர்நாடகாவிலும் இவரே தீவிரமாகக் களம் இறங்கி பிரச்சாரம் செய்தார். தேர்தல் அறிவிப்புக்கு பின், 19 மேடைகள் ஏறிய பிரதமர், 6 சாலைப் பிரச்சாரங்களில் கலந்து கொண்டார். சுமார் 500 முக்கியஸ்தர்களையும் கர்நாடகா வெற்றிக்காக அவர் சந்தித்தார்.

பல மாநிலங்களில் தேர்தல்: இன்னும் எஞ்சியுள்ள, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் மக்களவை தேர்தலுக்கு மிகவும் நெருக்கமான காலங்களில் நடைபெற உள்ளது.

அதன் பிறகு கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகளுக்கு அவகாசம் போதாது. இதுபோன்ற பல காரணங்களால் கர்நாடகா முடிவுகளை பொறுத்து கூட்டணி முடிவு எடுக்க, எதிர்க்கட்சிகள் காத்துள்ளன.

எனவே, கர்நாடக தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமைந்தாலும் ஆச்சரியமில்லை.

- ஆர்.ஷஃபிமுன்னா
நன்றி: திஹிண்டு

​​​

தொடர்புடைய செய்திகள்

+ - reset