நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

கடவுள் தேர்ந்தெடுத்த தேவதைகள் தான் பெண்கள் - மகளிர் தின சிந்தனை - லோகநாயகி ராமச்சந்திரன்

இன்று உலக மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. உங்கள் பாட்டி காலத்திலோ அம்மா காலத்திலோ இதுபோன்ற தினங்கள் கொண்டாடப்பட்டனவா? இருக்காது. இருப்பினும் இந்த நாளில் சில சிந்தனைக் கீற்றுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கடவுள் தேர்ந்தெடுத்த தேவதைகள் தான் பெண்கள்.

இப்போதைய நடுத்தர வயதுப் பெண்களுக்கு ஒரு வித்தியாசமான கஷ்டம் இருக்கிறது! அதென்ன வித்தியாசமான கஷ்டம் என்கிறீர்களா? என்னிடம் பேசிய அந்த சிநேகிதியின் வார்த்தைகளை அப்படியே சொல்கிறேன்...

'27 வருஷம் முன்னால எனக்கு கல்யாணம் ஆனப்போ என் மாமியாருக்கு பயந்து பயந்து வேலை செஞ்சேன். இப்போ என் மருமகளுக்கு பயந்து பயந்து வேலை செய்றேன்.

"ஆமா, மாமியார் காலத்தில் தினம் 5 மணிக்கு நான் எழுந்திருச்சு, தலைக்குளிச்சு சமைக்கிறதில் ஆரம்பிச்சு, என் மாமியாருக்குப் பிடிச்ச மாதிரி ருசியா காப்பி போடறது, பருப்புருண்டை குழம்பும், எண்ணெய்க் கத்தரிக்காயும்  பண்றதுன்னு இருப்பேன்.

"மாமியார் மனம் குளிர்ற மாதிரி நாத்தனார்களை உட்கார வைச்சு பார்த்துகிட்டேன். இப்படியேதான் 3 வருஷம் முன்னால, என் மாமியார் உசுரோட இருந்த வரைக்கும் நடந்துச்சு. 

"இப்போ என் பையனுக்குக் கல்யாணமாகி எனக்கு மருமக வந்துட்டா. ஆனா இன்னிக்கு என் மருமகளுக்கு, அவ மாமியாரான  நான் சேவகம் பண்றமாதிரி என் காலம் மாறிப்போச்சு.

"மருமகளோ வேலைக்குப் போறவ. மகன் அளவுக்கு அவளும் ஈக்குவலா சம்பாதிக்கிறா. அதேபோல வேலை முடிச்சு லேட்டாதான் வீட்டுக்கு வர்றா. மருமகளுக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு பிரட் டோஸ்ட்டும், நூடுல்ஸும் பண்ண இப்போ நான் கத்துக்கிட்டேன். அவ மனசு குளிரணும்னு பார்த்து பார்த்து நடக்கிறேன்.

"இதில என் வாழ்க்கை எங்கே? என் அதிகாரம், என் விருப்பம் எங்கே? 
மாமியார் ஆசைக்கு அன்னிக்கு பருப்புருண்டை குழம்பும், மருமக ஆசைக்கு இன்னிக்கு பிரட் டோஸ்ட்டுமா அவங்க விருப்பங்களோடதானே என் வாழ்க்கை ஓடுது?’ என்று நீளமாக

அலுத்துக்கொண்டார் அந்தத் தோழி.
உண்மைதான்.

நடுத்தர வயதிலுள்ள பல கிரிஜாக்களும், சாந்திகளும் கீதாக்களும், உஷாக்களும், கவிதாக்களும், உமாக்களும், வசந்திகளும் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைதான் இது.

’வேலை பார்க்கும் மருமகள் என்றில்லை, வேலைபார்க்காத மருமகள் என்றால்கூட இன்று மருமகளை முன்னிறுத்திதான் வாழ்க்கையில் பல காரியங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது’ என்றும் இன்றைய பல மாமியார்களுக்கு மனக்கஷ்டம் இருக்கிறது. 

(மருமகளைப் புரிந்துகொண்டு மகள்போல நடத்திய மாமியார் அப்போதும் உண்டு. மாமியாரைப் புரிந்துகொண்டு தாய்போல நடத்தும் மருமகள் இப்போதும் உண்டு. இந்த மாதிரி சில விதிவிலக்குகள் வேறு ரகம்) 

இந்த விஷயத்தில் நம் புலம்பலை வெளியே கொட்டும் முன், மேலே அந்த சிநேகிதி குறிப்பிட்ட இந்த ’கஷ்டம்’ என்ற வார்த்தையை ’பெருமை’ என்று மாற்றிப்போட்டு கொஞ்சம் பாருங்கள். 

வெவ்வேறு குணாம்சமும் வெவ்வேறு கலாச்சாரமும் கொண்ட இரண்டு தலைமுறைப் பெண்களை இணைக்கும் ஓர் உறுதியான பாலமாக, இந்த தலைமுறைப் பெண்களைத்தான் காலம் செலக்ட் செய்திருக்கிறது என்று நமக்குப் புரியும்!

பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து அத்தனை வீட்டுக் காரியங்களையும் செய்ய வேண்டுமென்று நினைத்த, சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர் மாமியார். ஆணுக்குப் பெண் எந்த வகையிலும் இளைப்பில்லை பாருங்கள் என்று சாதிக்கத் துடிக்கும் பெண், இன்றைய தலைமுறை மருமகள்.

இப்படி இரண்டு வெவ்வேறு துருவங்களான மனப்பான்மையுடன் இருக்கும் இரு தலைமுறைப் பெண்களுக்கு இடையே அந்த தலைமுறை வித்தியாசங்களை மென்மையாக இணைக்கும் ஒரு உறுத்தாத பட்டுக்கயிறாக, இந்தத் தலைமுறை மாமியார்களை காலம் தேர்ந்தெடுத்து இருக்கிறது!.

காலத்தின் எத்தனையோ முக்கியமான மாற்றங்கள் அவ்வப்போது பலரால் மிக அழகாக நடந்திருக்கின்றன.

தன்னை நோக்கி வந்த பல கேள்விகளை, பல அவமானங்களை டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி தன் கஷ்டமென நினைக்காமல் அதிலிருந்து மீண்டு வந்ததால்தான் அவருக்கு அடுத்த தலைமுறையில், பெண்களும் டாக்டர்கள் என்ற கௌரவம் பெற முடிந்த மாற்றம் நிகழ்ந்தது.

’ச்சே! என்ன இது? போராட்டமே நம் வாழ்க்கையாக இருக்கிறதே!’ என்று சலிக்காமல் பல பெண்கள் தங்கள் பொறுப்புகளைச் சுமந்து சென்றதால்தான் அவர்களுக்கு அடுத்த தலைமுறைப் பெண்களுக்கு ஓட்டுரிமை உட்பட பல உரிமைகள் கிடைத்தன.

உண்மையில் அவர்கள், தங்கள் பர்சனல் வாழ்க்கையில் அந்த வலிகளைப் பட்டிருந்தாலும்கூட, அது அவர்கள் பர்சனல் வாழ்க்கையில் பட்ட வலிகள் அல்ல... இந்த சமூக மாற்றத்துக்காக அவர்கள் விரும்பி ஏற்ற வலிகள்!

’பெண்களின் முன்னேற்றம்’ என்ற மாபெரும் சமூக மாற்றம் நடந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் இன்றைய நடுத்தர வயதுப் பெண்கள் படும் இந்த சில கஷ்டங்களும்கூட சமூகம் சார்ந்த வலிகள்தான்.

இவற்றை ஒரு கஷ்டமாக மனதில் இருத்திக் கொள்ளாமல், ’என் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக இதைச் செய்கிறேன்!’ என்று செய்தால் அந்தச் சின்ன ஈகோ வலிகள்கூட இருக்காது.

இதன் மூலம், நம் வாழ்க்கையையும் மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டு, அதை என்ஜாய் செய்தபடியே இந்த சமூக மாற்றத்துக்கும் நம்மை  அர்ப்பணித்தவர்கள் ஆகிறோம்! 

1400 வருடங்களுக்கு முன் முஹம்மது நபி பெண்களைப் பெருமைப்படுத்தி சொன்ன வாக்கியம் இந்த மகளிர் தினத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். "அன்னையின் காலடியில்தான் சுவனம் இருக்கிறது. அவரைப் போற்றி பேணுபவர் என்னைச் சார்ந்தவர்" என்று கூறியுள்ளார்.

இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். உங்களில்  பலருக்கும்கூட  இந்த  சிந்தனை பொருந்திப் போகலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

- லோகநாயகி ராமச்சந்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset