நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

"எத்தனை கடவுள்களை வழிபடுகிறீர்கள்?” - வெள்ளிச் சிந்தனை

மதீனாவில் ஹுசைன் என்பவர் பல கடவுள்களை வழிபட்டுக்கொண்டிருந்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஹுசைனை ஒரு நாள் சந்தித்தார்.

“ஹுசைனே, இப்போது நீங்கள் எத்தனை கடவுள்களை வழிபடுகிறீர்கள்?” என்று கேட்டார்.

 ஹுசைன்,“ஏழு கடவுள்கள். பூமியில் ஆறு, வானத்தில் ஒன்று” என்றார்.

இந்த இடத்தில் ஒரு சின்ன விளக்கம்.

“இறைமறுப்பாளர்களையும் இணைவைப்பாளர்களையும் வாள் முனையில் நிறுத்தித்தான் இஸ்லாம் மதம் மாற்றியது” என்று அபாண்டமாக எழுதி வைத்துள்ளார்களே, வரலாறு எனும் பெயரில்.

அவர்கள் இந்த நபிமொழியை வாசிக்க வேண்டும்.

“எத்தனை கடவுள்களை வழிபடுகிறீர்கள்” என்று கேட்பவர் இறைத்தூதர்.

பதில் அளித்தவரும் எந்த அச்சமும் இல்லாமல் “ஏழு” என்கிறார்.

அது மட்டுமல்ல, இறைத்தூதரிடமே விளக்கமும் அளிக்கிறார்- “பூமியில் ஆறு...வானத்தில் ஒன்று” என.

உடனே நபிகளார்(ஸல்) வாளை உருவி அவர் கழுத்தில் பாய்ச்சிடவில்லை.

மாறாக, உரையாடலைத் தொடர்கிறார்.

“ஏழு கடவுள்களா?”

“ஆமாம்”

“இவற்றில் எதை மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் அச்சத்துடனும் வழிபடுகிறீர்?”

ஹுசைன் கூறினார்- “வானத்தில் இருப்பதை.”

அவரிடம் ஓரிறைக் கொள்கையின் சிறிய சாயலாவது இருப்பதை நபிகளார்(ஸல்) புரிந்துகொண்டார்.

“ஹுசைனே, நீங்கள் இஸ்லாத்தை உங்கள் வாழ்வியலாக ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பயனளிக்கும் இரண்டு சொற்றொடர்களைக் கற்றுக்கொடுப்பேன்” என்று மட்டும் சொல்லிவிட்டு நபிகளார்(ஸல்) சென்றுவிட்டார்.

பின்னாளில் இந்த ஹுசைன் இஸ்லாத்தைத் தழுவுகிறார்.

நபிகளார்(ஸல்) முன்பு சொன்ன வார்த்தைகள் அவருடைய இதயத்தில் மின்னின.

உடனே நபிகளாரிடம் விரைந்து சென்று,“இறைத்தூதர் அவர்களே, எனக்கு நீங்கள் வாக்களித்த அந்த இரண்டு சொற்றொடரைக் கற்றுத் தாருங்கள்” என்கிறார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், “அல்லாஹும்ம அல்ஹிம்னீ ருஷ்தீ வஅயித்னீ மின் ஷர்ரி நஃப்ஸீ” என்று கூறுங்கள் என அறிவுறுத்தினார்கள்.

பொருள்- யா அல்லாஹ், எனக்கு நல்வழிகாட்டுதலை வழங்குவாயாக. என் மனத்தின் தீங்கிலிருந்து என்னைப் பாதுகாப்பாயக.” (மிஷ்காத் 2476)

பொறுமை, சகிப்புத்தன்மை, இனிய உரையாடல், மக்கள் சேவை ஆகியவற்றின் மூலம்தான் இஸ்லாம் எடுத்துரைக்கப்பட்டதே தவிர சில வரலாற்றுப் புரட்டர்கள் சொல்வது போல் வாள் முனையால் அல்ல.

-சிராஜுல் ஹஸன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset