நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

ஈரோடு: 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மேலும், அதிமுக வேட்பாளர் தென்னரசு டெபாசிட்டை தக்க வைத்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மார்ச் 2) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டுவருகிறது. பிற்பகல் 3 மணி வரை 10 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. இதன்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 79,991 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 28,398 வாக்குகள் பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 6021 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 731 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

* திமுக கூட்டணி: 79,991
* அதிமுக கூட்டணி: 28,398
* நாம் தமிழர் கட்சி: 6,021
* தேமுதிக: 731

இந்த நிலவரப்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மேலும், அதிமுக வேட்பாளர் தென்னரசு டெபாசிட்டை தக்க வைத்துள்ளார். நாம் தமிழர் கட்சி, தேமுதிக உள்ளிட்ட மற்ற வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.இந்தத் தொகுதியைப் பொறுத்தவரை ஒரு வேட்பாளர் 28 ஆயிரம் வாக்குகள் வாங்கினால் மட்டுமே அவர்கள் செலுத்திய டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும்.

மொத்தமுள்ள 77 வேட்பாளர்களில் காங்கிரஸ் மற்றும் அதிமுக மட்டுமே டெபாசிட்டை தக்க வைத்துள்ளது. மீதமுள்ள 75 வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் கருத்து:

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி, திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

- பிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset