நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

பேச்சு..! - மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான் / வெள்ளிச் சிந்தனை

பேச்சுக்கும் உரையாடலுக்கும் மனித வாழ்வில் அடிப்படையான முக்கியத்துவம் உண்டு. ஒருவர் எப்படிப்பட்ட ஆள் என்பதை அவருடைய பேச்சே வெளிப்படுத்திவிடும். தூய்மையான இயல்பைக் கொண்ட மனிதர்களின் பேச்சில் தூய்மை மிளிரும். வழிகெட்டுப் போன, திசை மாறிப் போன மனிதர்களின் பேச்சிலிருந்தே அவர்களின் வழிகேடு அம்பலமாகிவிடும். 

பேச்சு என்பது ஒருவர் மொழிகின்ற சொற்கள் மட்டும் கிடையாது. அவற்றை அவர் எப்படி உச்சரிக்கின்றார் என்பதும் அவர் பேசுகின்ற தொனியும் அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்திவிடும். நிம்மதியின்றி, மன நிறைவின்றி மனிதர் பதற்றத்தில் இருக்கின்றார் எனில் அதுவும் அவருடைய பேச்சில் வெளியாகிவிடும். 

நிம்மதியாக வாழ்கின்றவரின் பேச்சிலோ இம்மியளவு பதற்றமும் எட்டிக்கூடப் பார்க்காது. நிம்மதியில்லாத, கவலையிலும் வேதனையிலும் சிக்கியிருப்பவரோ தம்முடைய பேச்சால் மற்றவர்களையும் கவலையில் ஆழ்த்திவிடுவார்.

இதற்கு நேர்மாறாக எவருக்கு திருப்தியடைந்த ஆன்மா வாய்த்திருக்கின்றதோ அவருடைய பேச்சிலும் சொற்களிலும் எத்தகைய அசாத்திய சக்தி இருக்கும் எனில் அவருடைய பேச்சு தீராத கவலையில் தத்தளிப்பவரின் பதற்றத்தையும் தணித்துவிடும்.
 
மனிதனின் ஆசைகளும் விருப்பங்களும் அவனுடைய பேச்சிலிருந்தே வெளிப்படும். மனிதன் ஆசைகளைச் சார்ந்தே வாழ்கின்றான். இன்னும் சொல்லப் போனால் மனிதனின் உண்மையான அடையாளம் அவனுடைய ஆசைகள்தாம்.

அவருடைய ஆசைகளை வைத்துதான் அவர் மகத்தான இலட்சியங்களைக் கொண்டிருக்கின்ற மாமனிதரா, இலட்சியப் புருஷரா அல்லது சின்னச் சின்ன ஆசைகளைக் கொண்ட சாமான்யரா அல்லது அவற்றில் சிக்கிக் கிடக்கின்ற அற்பரா என்பதெல்லாம் தெரிந்துவிடும்.
 
சிந்தனையிலும் எண்ணத்திலும் ஒருவர் உயர்ந்தோங்கி இருப்பாரேயானால், எல்லாவகையான குறுகிய பார்வைகளிலிருந்தும் எண்ணங்களிலிருந்தும் அவர் விலகி இருப்பாரேயானால் அவருடைய பேச்சிலும் அந்த பரந்த உள்ளமும் பார்வையும் வெளிப்படும். 

ஒருவருடைய பேச்சில் பாராட்டத்தக்க பண்புகள் பளீரென மின்னுகின்ற போதும், தவறான சிந்தனையாலோ, மட்டரகமான உணர்வாலோ இம்மியளவுகூட மாசுபடாததாய் அவருடைய பேச்சு தனித்து நிற்கின்ற போதும் உங்களால் மிக எளிதாக ஒரே வார்த்தையில் அவருடைய ஆளுமையை விவரித்துவிட முடியும்.  

ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்வும் - அவருடைய சிந்தனை, செயல், உணர்வு ஆகிய அனைத்தும் - எந்த வார்த்தையை அல்லது கூற்றை உறுதிப்படுத்துவதாய் இருக்கின்றதோ, அது தூய்மையானதாயும், மகத்தானதாயும் இருக்கலாம்; அற்பமானதாயும் கேவலமானதாயும் இருக்கலாம். அந்த மனிதரின் நடத்தையே அந்த வார்த்தையின் தரத்தை வெளிப்படுத்தி விடும். 

குர்ஆனில் இந்த இரண்டு வகையான வார்த்தைகள், கூற்றுகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டடுள்ளது. தூய்மையான வார்த்தை, மகத்தான கூற்று முழுக்க முழுக்க நன்மையை மட்டுமே அளிக்கக்கூடியது; நீடித்த, நிலையான பலனை இடைவிடாமல் தரக்கூடியது; எல்லாவிதமான நன்மைகளுக்கும் மூல ஊற்றாக ஆகிவிடக்கூடியது. 

அது எந்தவொரு குறிப்பிட்ட காலகட்டத்தை மட்டுமே சேர்ந்ததாகவோ, குறிப்பிட்ட நாட்டுடன் மட்டுமே தொடர்புடையதாகவோ இருப்பதில்லை. அது வானளாவிய அளவில் ஓங்கி, அடர்த்தியாக கிளை பரப்பி ஓங்கி நிற்கின்ற, எந்நேரமும் செழிப்பாக இருக்கின்ற மரத்தைப் போன்றதாகும். அதன் கனிகள் இனிமையானவை.

உடல் நலத்தையும் வலுவையும் தருபவை. மேலும் இப்படிப்பட்ட வார்த்தைகள் எந்நேரமும் உயிர்த்துடிப்போடு இருக்கின்றன. அதனால் உள்ளமும் உடலும் புத்துணர்வு பெறுகின்றன. அதனையும் தாண்டி அது மக்களைத் தம் பக்கம் சுண்டியிழுக்கின்ற திறன் கொண்டது.

அந்த வார்த்தை மனங்களையும் இதயங்களையும் சிலிர்த்தெழச் செய்யக்கூடியது. அதனையும் தாண்டி ஆன்மாவையே தட்டி எழுப்பிவிடக் கூடிய ஆற்றல் படைத்தது. அந்த வார்த்தையை மொழிந்தவர் மனித வாழ்வின் உண்மையை உணர்ந்துகொள்கின்றார். நடைமுறை வாழ்விலும் அது ஆழமாக, அழுத்தமாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

(பார்க்க அத்தியாயம் 14 இப்ராஹீம் 24)

உரையாடுகின்ற போதும் பேசும்போதும் பின்வரும் மூன்று அம்சங்களை எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லா இடங்களிலும் மனத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். 

1) உண்மை  (Truthfulness)

2) நன்மை (Goodness)

3) பொருத்தம் (Appropriate)

1) உண்மை  (Truthfulness)

நீங்கள் எதைப் பேசினாலும் அது உண்மையாகவே இருக்க வேண்டும். உங்களின் நாவிலிருந்து உண்மை இல்லாத, பொய்யான விஷயம் எதுவுமே ஒருபோதும் வெளிவரக் கூடாது. 

ஏனெனில், பொய்யும் அதன் கலப்பும்தாம் வழிகேட்டுக்கு அடிப்படைக் காரணங்களாய் இருக்கின்றன. பண்டையக் காலத்து தொன்மையான கதைகளையும் காப்பியங்களையும் எழுதியவர்கள் இந்த விஷயத்தைப் பேணி நடந்துகொள்ளவில்லை. அவர்கள் தேவிகள், தெய்வங்கள், சான்றோர்கள், பெரியோர்கள் போன்றோரைப் பற்றிய கதைகளை புனைந்து எழுதிக் கொண்டே சென்றுவிட்டார்கள். மேலும் அவற்றை அவர்கள் உண்மையில் நடந்த நிகழ்வுகளாக, உண்மைகளாக சாமான்யர்களுக்கு முன்னால் எடுத்துரைத்தார்கள். 

அவற்றைக் கேட்ட, வாசித்த பக்தர்கள் அவற்றை உண்மை நிகழ்வுகளாய்ப் புரிந்துகொண்டு கற்றும் கற்பித்தும் வந்தார்கள். அவற்றில் தங்களால் புரிந்துகொள்ள இயலாதவற்றை அவர்கள் தங்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களாய் நினைத்துக் கொண்டார்கள்.

மேலும் மதக் கிரந்தங்களில் இருக்கின்ற அனைத்துமே முழுக்க முழுக்க உண்மைகள் தாம் என்று நினைத்துக்கொண்டார்கள். 

உண்மையின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் அவர்கள் அறிந்திருப்பார்களேயானால் அறிவார்ந்த அணுகுமுறையோடு அவற்றை அணுகி இருந்திருப்பார்களேயானால் உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான வேறுபாடு அவர்களுக்குப் புலப்பட்டிருக்கும். எது சத்தியம், எது அசத்தியம் என எளிதாக அடையாளங் கண்டிருப்பார்கள்.

ஆனால், உண்மையைக் காட்டிலும் அவர்களுக்கு விந்தையான, திடீர் திருப்பங்கள் நிறைந்த சுவையான கதைகள் தாம் பிடித்தமானவையாய் இருந்தன. அவர்கள் உண்மையை விட்டு வெகு தொலைவு விலகிச் சென்றுவிட்டார்கள். அறிவியல் ரீதியான மனோபாவம் அவர்களுக்கு பிடிபடாமலே போயிற்று. 

பேச்சில் உண்மை இருத்தல் வேண்டும். உண்மையை மட்டுமே பேச வேண்டும். சொல்லில் உண்மை இல்லையெனில் அதனை ஒருபோதும் நாவில் கொண்டு வரவே கூடாது. பேச்சு தொடர்பான முதல் விதி இதுதான். 

2) நன்மை (Goodness) 

பேச்சு, உரையாடல் தொடர்பாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம் நன்மையாகும். 

நம்முடைய பேச்சில் உண்மை இருப்பதோடு, அதனையும் தாண்டி அது நன்மை தரக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அதாவது உண்மையோடு நன்மையும் இருக்க வேண்டும்.

நீங்கள் சொல்வதில் எந்தவொரு நன்மையான விஷயமோ, பயனுள்ள அம்சமோ எதுவுமே இல்லையெனில் அதனை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம்தான் என்ன? இந்த இரண்டாவது விதியைக் கடைப்பிடித்தாலே எத்தனையோ பயனற்ற அரட்டைகளிலிருந்தும் பேச்சுகளிலிருந்தும் நாம் விடுதலை பெற்றுவிட முடியும். 

இவ்வாறு பயனற்ற பேச்சுகளைத் தவிர்ப்பதால் நாம் சேமிக்கின்ற நேரத்தை நல்ல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்வதிலும் அவற்றை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதிலும் பயன்படுத்தலாம். 

3) பொருத்தம் (Appropriate) 

பேச்சு தொடர்பான மூன்றாவது விதியும் முக்கியமானது. அது குறித்தும் நாம் அனைவரும் அதிகக் கவனம் செலுத்துவது அவசியமாகும். மூன்றாவது விதி என்னவெனில் நீங்கள் சொல்லப் போவது எத்துணை பெரும் உண்மையாகவே இருந்தாலும், பொருத்தமான நேரத்தையும் பொருத்தமான இடத்தையும் கருத்தில் கொண்டு இடமும் சூழலும் நேரமும் பொருந்திப் போகின்றபோது அதனைச் சொல்ல வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். 

நீங்கள் ஒரு நல்ல, நன்மையான, பயனுள்ள செய்தியையே சொல்வதாக இருந்தாலும் பொருத்தமற்ற நேரத்தில் பொருத்தமற்ற இடத்தில் அதனைச் சொல்லும்போது அந்த நல்ல செய்தியே இழப்பையும் பின்னடைவையும் ஏற்படுத்திவிடும். அறிவாளிகள் உங்களைக் குறித்து ‘விவரம் போதாத மனிதர்’ என்கிற தீர்மானத்திற்கு வந்துவிடுவார்கள். 

எடுத்துக்காட்டாக ஓரிடத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிறைந்திருக்கின்ற திருமண நிகழ்வு நடந்துகொண்டிருக்கின்ற போது அங்கு எல்லோரையும் துக்கத்திலும் சோகத்திலும் ஆழ்த்திவிடக் கூடிய செய்தியைச் சொல்வதற்கு அவசரப்படக் கூடாது. அந்தச் செய்தியை அங்கிருக்கின்ற மக்களிடம் பகிர்ந்து கொள்வதில் அவசரப்படக் கூடாது. அதன்று மாறாக வேறு ஏதேனுமோர் நேரத்தில் அதனை பகிர்ந்துகொள்ளலாம் என்று தள்ளிப்போட்டுவிட வேண்டும்.  

இதே போன்று சோகமான சபைகளில், நினைவேந்தல் நிகழ்வுகளில் நின்று கொண்டு ஜோக் அடிப்பதும் சிரித்துப் பேசுவதும் சிரிக்க வைப்பதும் கூடாது. 

- மௌலானா முஹம்மத் ஃபாரூக் கான்

தமிழில்: லுத்ஃபுல்லாஹ் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset