நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

தொழுகை விரிப்பு பேசிய போது... - வெள்ளிச் சிந்தனை

வைகறைத் தொழுகைக்கு முன்பே பின்னிரவுப் பொழுதில் அவன் முழித்துவிட்டான். கடுமையான தண்ணீர் தாகம் வாட்டியெடுத்தது. உடனே போர்வையை உதறி வீசி விட்டு கட்டிலிலிருந்து துள்ளி எழுந்தான். படுக்கையறையை விட்டு வெளியேறுவதற்காக கதவைத் திறந்தான். 

திடீரென்று-

தரையிலிருந்து யாரோ அழுகின்ற சத்தம் கேட்டது.

திடுக்கிட்டுத் திரும்பியவன் தரையைப் பார்த்தான். இங்குமங்கும் நோக்கினான். 

எந்த சத்தமும் இல்லை. 

வெளியே சென்றான். ஹாலின் மூலையில் இருந்த பானையிலிருந்து ஒரு குவளை தண்ணீரை மொண்டு குடித்தான். மீண்டும் படுக்கைக்குத் திரும்பியவன் கதகதப்பான போர்வைக்குள் தன்னை முழுமையாக திணித்துக் கொண்டான். 

பனி கடுமையாக இருந்தது. 

யாரோ அழுகின்ற ஓசை மீண்டும் கேட்டது. இப்போது சத்தம் கொஞ்சம் பலமாகத்தான் இருந்தது. 

யாரோ குமுறி குமுறி அழுவதாகத் தோன்றியது. 

யாருமே இல்லாத வீட்டில் அழுவது யார்?

அவனுக்கு உடம்பே சில்லிட்டுப் போனது. கட்டிலில் படுத்தவாறே சத்தம் வந்த திசையில் உற்று நோக்கினான். இருட்டில் எதுவுமே புலப்படவில்லை. 

கட்டிலிலிருந்து இறங்கி ஓசை வந்த திசையில் இருந்த அலமாரியின் பக்கம் சென்ற போது தொழுகை விரிப்பின் மீது கால் பட, உடனே அந்த அழுகுரல் நின்று விட்டது. 

அவன் ஆச்சர்யத்துடனும் சற்றே திகிலுடனும் கேட்டான் : ‘நீயா அழுது கொண்டிருந்தாய்?’

*தொழுகை விரிப்பு :* ஆமாம்.

*அவன் :*  ஏன்? ஏன் அழுதாய்?

*தொழுகை விரிப்பு :* தாகம் எடுத்ததால் உம்முடைய தூக்கம் கலைந்தது. தண்ணீர் குடித்து உம்முடைய தாகத்தைத் தணித்துக் கொண்டாய். எனக்கும் தண்ணீரின் தேவை இருக்கின்றது. ஆனால் என்னுடைய தாகத்தைத் தணிக்கக் கூடியவர்தான் யாருமே இல்லாமல் போய்விட்டார்களே!

*அவன் :* இப்போது உம்முடைய பிரச்னைதான் என்ன? ஒரு குவளை தண்ணீரைக் கொண்டு வந்து உம் மீது கொட்டி விடச் சொல்கின்றாயா? 

*தொழுகை விரிப்பு :* இல்லை. என்னுடைய தாகம் தண்ணீரை அருந்துவதால் தணியாது. இறைவனை வழிபடுகின்ற, இறைவனை நினைத்து அழுகின்ற பின்னிரவு தொழுகையாளியின் கண்ணீர்த் துளிகளால்தாம் என் தாகம் தணியும். 

*அவன் :* அந்தக் கண்ணீர்த் துளிகளை நான் எங்கிருந்து எடுத்துக் கொண்டு வர முடியும், என் இனிய தொழுகை விரிப்பே..!

*தொழுகை விரிப்பு :* அதனால்தான் இந்த பின்னிரவுப் பொழுதில் நான் குமுறி குமுறி அழுது கொண்டிருந்தேன். போ. உடனே ஒளு செய்து கொண்டு வந்து இரண்டு ரகஅத் தொழுது உன் அதிபதியிடம் மன்றாடு. இந்த அதிகாலை ரகஅத்கள் மண்ணறையின் கும்மிருட்டை விரட்டியடித்து அதனை ஒளிமயமானதாய் ஆக்கிவிடும். இன்னும் சில நிமிடங்கள்தாம் எஞ்சி இருக்கின்றன. நேரம் மிகவும் குறைவாக இருக்கின்றது. நாலே முக்காலுக்கு எல்லாம் அந்த மோதினார் டாண் என்று பாங்கு சொல்லிவிடுவார். 

*அவன் :* அட போப்பா!  என்னை என்னுடைய நிலையில் விட்டுவிடு. (அவன் மறுபடியும் கட்டிலில் பாய்ந்து போர்வைக்குள் சுருண்டுவிடுகின்றான்) 

*தொழுகை விரிப்பு :* எழுந்திரு ராஜா! ஃபஜ்ருக்கான இரண்டு ரகஅத்கள் ஆவது தொழுதுவிடு. இதயத்தையும் ஆன்மாவையும் உயிர்த்துடிப்போடு வைத்திருக்கக் கூடியது ஃபஜ்ர் தொழுகைதான். ஹும்.. மோதினாரின் அழைப்பை சற்றே செவி தாழ்த்திக் கேள்: *தூக்கத்தை விட தொழுகை சிறப்பானது.* 

நாள் முழுக்க இவர் அழைத்தார், அவர் அழைத்தார் என்று அரக்க பரக்க இங்குமங்கும் ஓடியாடி உழைக்கின்றாய். ஆனால் வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ்வின் பக்கம் அழைப்பு விடுக்கப்படுகின்ற போது அது உன்னுடைய காதுகளிலேயே விழ மாட்டேன் என்கிறதே..! உனக்கு என்னதான் ஆகிவிட்டது?

*அவன் :* (எரிச்சலுடன்) அம்மா தொழுகை விரிப்பே! என்னை தூங்க விடு அம்மா! நான் நேற்று இரவு வந்து படுத்த போது எந்த அளவுக்கு களைத்து, சோர்ந்து இருந்தேன் என்பதை நீ பார்க்கவில்லையா? ஆசை தீர தூங்க விடேன். (அதன் பிறகு அவன் மீண்டும் தூங்கிப் போனான்).

*தொழுகை விரிப்பு :* கொஞ்சம் யோசித்துப் பார். நீ உன்னுடைய வாழ்வை மார்க்கத்துக்குப் பதிலாக உலகத்துக்கே அர்ப்பணித்துவிடப் போகின்றாயா, என்ன? 

*அவன் :* (கடுமையாக) இப்போ கொஞ்சம் வாயை மூடிக் கொள்கின்றாயா? இன்றைக்கு அலுவலகத்தில் மலை போல் வேலைகள் காத்திருக்கின்றன. கொஞ்சமாவது நிம்மதியாக படுத்து களைப்பு தீர தூங்க விடேன். 

*தொழுகை விரிப்பு :* (சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு துக்கம் ததும்பும் சோகக் குரலில்..) அந்தோ! அந்த ஃபஜ்ர் தொழுகையாளிகள் எங்கே போனார்கள்? ஃபஜ்ர்காரர்கள் எங்கே போனார்கள்? 

கேளுங்கள்! அன்பு நபிகளாரின் அந்த அமுத வாக்கை நீங்கள் கேட்டதே இல்லையா? 

‘எவர் சூரிய உதயத்துக்கு முன்பும் சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுதாரோ (ஃபஜ்ர், அஸ்ர் தொழுதாரோ) அவர் நரக நெருப்பில் விழ மாட்டார்.’

நபிகளார்(ஸல்) நினைத்தாலே இனிக்கின்ற நற்செய்தியையும் அறிவித்திருக்கின்றார்கள்:
‘எவர் ஃபஜ்ர், அஸ்ர் தொழுகைகளை நிறைவேற்றினாரோ அவர் சுவனம் செல்வார்’.

நபிகளார்(ஸல்) இன்னொன்றையும் சொல்லியிருக்கின்றார்கள்:
‘இருட்டில் பள்ளிவாசலுக்குச் செல்பவர்களுக்கு மறுமை நாளில் முழுமையான பேரொளி கிடைக்கும் என்கிற நற்செய்தியை அறிவித்துவிடுங்கள்’.

நபிகளார்(ஸல்) மேலும் கூறினார்கள்:
‘நயவஞ்சகர்களுக்கு ஃபஜ்ர், அஸ்ர் தொழுகைகளைக் காட்டிலும் பாரமானது வேறு எதுவும் இருப்பதில்லை. (அவ்விரு தொழுகைகளால் கிடைக்கின்ற) நன்மைகளைக் குறித்து அவர்கள் அறிந்துகொள்வார்களேயானால் தவழ்ந்து கொண்டாவது பள்ளிவாசலுக்குச் செல்வார்கள்’.

*அவன் சிலிர்த்தெழுந்தான் :* ‘அப்படியானால் ஃபஜ்ர் தொழுகை மிகவும் மதிப்பு வாய்ந்தது என்று பொருளா?.

*தொழுகை விரிப்பு :* ஆமாம். இப்போ உடனே எழுந்துவிடு. போய் தொழுகைக்கான ஆயத்தமாகிவிடு. 

*அவன் :* அதெல்லாம் நாளையிலிருந்து தொடங்கிக் கொள்ளலாம். இன்றைக்கு என்னைத் தூங்கவிடு. நான் இன்று ரொம்பவும் களைத்துப் போய் இருக்கின்றேன். 

*தொழுகை விரிப்பு :* (வருத்தத்துடன்) எவருக்கு நல்லறங்களால் கிடைக்கின்ற நன்மைகள் குறித்து நம்பிக்கை இல்லையோ அவருக்கு நிலைமைகள் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் எல்லாச் சமயங்களிலும் அவை சுமையாகத்தான் தோன்றும். தூங்குவதற்கு மண்ணறையின் மெத்தையே போதுமானது. நீண்ட நெடுங்காலம் தூங்கிக் கொண்டு கிடப்பாய். அதன் பிறகு என்னுடைய அறிவுரை உனக்கு ஞாபகம் வரும். 

தொழுகை விரிப்பு மௌனமாகிவிட்டது. அவனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவனிடமிருந்து எந்தச் சலனமும் இல்லை. அட, இதென்ன! அந்த தூக்கமே அவனுடைய இறுதித் தூக்கமாகி விட்டதோ? 

ஆம். அவன் தூங்கிவிட்டான். அதன் பிறகு அவனுடைய கண்கள் திறக்கவே இல்லை. அது *மீளாத் துயில்.* 

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்.

- டாக்டர் முஹிய்யித்தீன் காஜி

தமிழில்: லுத்ஃபுல்லாஹ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset