நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவு நாள்: செ. சீனி நைனா தொல்காப்பியத் திருக்கோட்டத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி

‘இறையருட் கவிஞர்’, ‘தொல்காப்பிய ஞாயிறு’ என்று உலகத் தமிழர்களால் என்றும் அன்போடு போற்றப்படும் ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டின் சிறப்பினை வெறும் வார்த்தைகளால் சொல்லி கடந்துவிட முடியாது.

ஐயா அவர்கள் இந்நாட்டு தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகளாவிய தமிழர்களுக்கும் பெரும் தமிழ்ச் சொத்தாக நற்றமிழறிஞாரக விளங்கியவர். 

பலதரப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் பல்கலைக்கழக விரிவுரைஞர்களுக்கும் பேராசியர்களுக்கும் தெளிவு தந்த பேராசானாக விளங்கியவர்.

பள்ளி தொடங்கி கல்லூரி வரை இலக்கண, இலக்கிய, கவிதைப் பட்டறைகள், பயிலரங்குகள் நடத்தியதோடு தொல்காப்பியம் எனும் தமிழின் அடையாளத்தை தம் வாழ்நாள் முழுதும் நெஞ்சில் சுமந்து சென்றவர்.

வரலாற்று அடிச்சுவட்டில் கடல்கோளால் தமிழர்கள் எல்லாம் இழந்த பின்னும் இறைவனின் பேரருளால் அவர்களிடம் அழியாமல் எஞ்சி நின்றது முதல் நூலான தொல்காப்பியம் மட்டுமே.

அந்த முதல் நூல்தான் இன்றுவரை நமது நாகரிகத்தை, பண்பாட்டை, மொழியின் தொன்மையை, அறிவின் உச்சத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்து அந்த மொழியின் மூதாதையர்களான நம்மையும் தலைநிமிரச் செய்கிறது.

சுருங்கச் சொன்னால் தமிழர்களின் ‘உயிர் நூல்’ தொல்காப்பியம் மட்டுமே.

தமிழர்களின் சொத்தான அந்தத் தொல்காப்பியத்தை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சுயமுயற்சியில் இரவும் பகலும் ஆழக் கற்றுத் தெளிந்து நாமும் அதன் சுவையுணர ‘தொல்காப்பியக் கடலின் ஒரு துளியாக’ பந்தி வைத்து சென்றிருக்கிறார் சீனி.

ஐயா சீனி நைனா முகம்மது அவர்கள் தொல்காப்பியத்தைச் சாறுபிழிந்து ‘நல்ல தமிழ் இலக்கணம்’, ‘புதிய தமிழ்ப் புணர்ச்சி விதிகள்’ என இரண்டு நூல்களை நாம் அனைவரும் எளிய வகையில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி அளித்திருப்பது அவரது அறிவுக் கொடையாகும்.

ஒரு தாய் குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதுபோல் நாம் அனைவரும் புரிந்துகொள்ள மிக எளிமையாகவும் இனிமையாகவும் அவர் எழுதியிருப்பது வியக்க வைக்கிறது.

தொல்காப்பியத்தில் அவர் கண்ட பேரறிவை நாமும் பெறவேண்டும் என்பதற்காகவே ஐயா சீனி நைனா அவர்கள் பெருங்கருணையோடு தமிழினம் நலம்பெற இதை எழுதியுள்ளார்.

அவர் கொடையளித்த இந்த நூல்களை ஒவ்வொரு தமிழரும் தெளிவுற படித்துணர்ந்தால் நாம் பிற இனத்தைவிட நாகரித்தாலும் மொழியாலும் எத்துணை உயர்ந்தவர்கள் என்பது தெரியும்.

இதை உலகத்துக்கு உணர்த்துவதற்காகவே ஐயா இந்தப் பணியை தன் உயிர்மூச்சாகக் கொண்டார்.

இறைவனின் பெருங்கருணையால் நமக்கு அவர் வழியாக தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம் மட்டுமே கிடைத்திருக்கிறது. 

அடுத்தடுத்து தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தையும் பொருளதிகாரத்தையும் கொடுப்பதற்குள் இறைவன் அவரை அழைத்துக் கொண்டான்.

ஐயா சீனி நைனா அவர்கள் நம்மைவிட்டு மறைந்து எட்டு ஆண்டுகள் சென்றாலும் அவர்  ஆற்றிய தமிழ்த் தொண்டு என்றும் நன்றியோடு தமிழர் நெஞ்சில் நிலைத்திருக்கும்.

அந்த வகையில் இன்று (7.8.2022 - ஞாயிற்றுக்கிழமை) ஐயாவின் எட்டாமாண்டு நினைவேந்தல் நாளை முன்னிட்டு ஈப்போவில் அமைந்துள்ள ஐயா செ.சீனி நைனா ‘தொல்காப்பியத் திருக்கோட்டத்தில்’ மாலை 4.30 முதல் 6.30 வரை ‘தமிழே வழி, தமிழா விழி’ எனும் அறிமுக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து சிறப்பிக்க பணிவோடு அழைக்கின்றோம்.

அறம் வாய்ந்த தமிழ்ச் சிந்தனைகளை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதே மறைந்த அந்த மாபெரும் தமிழறிஞருக்கு நாம் செய்யும் கைம்மாறாகவே கருதுகின்றோம்.

தம் வாழ்நாள் முழுவதும் தமிழுக்குத் அருந்தொண்டு செய்த ஐயா சீனி நைனா முகம்மது அவர்களின் திருப்பெயரை காலம் என்றும் கல்வெட்டாய் தமிழர்களின் நினைவில் பதித்திருக்கிறது.

காலம் மறக்காத இந்த மாமனிதரை பண்பாடுமிக்க தமிழினம் என்றும் போற்றிப் புகழும்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset