நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

சன்ஜானும், ஒரு சிட்டிகை சர்க்கரையும், இந்திய முஸ்லிம்களும்! - வெள்ளிச் சிந்தனை

சன்ஜானின் கதை தெரியுமா?

சன்ஜானின் கதை தெரியுமா, உங்களுக்கு? சன்ஜான் கதை சொல்கின்ற உன்னத செய்தியை அறிந்திருக்கின்றீர்களா?
 
வாசிக்கும் போதே மனத்துக்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்ற வரலாற்று நிகழ்வுதான் அது. 

கிஸ்ஸா ஏ சன்ஜான் என்கிற பெயரில் 1599-இல் எழுதப்பட்ட காவியம் ஒன்றில் தான் அந்த வரலாற்று நிகழ்வு பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆக, 1599-க்கு முன்பு தான் ஏதோவொரு ஆண்டு இந்த நிகழ்வு நடந்திருக்கலாம்.
 
ஆண்டு முக்கியமா, என்ன? அது தருகின்ற செய்திதானே முக்கியம், உடனே சொல்லுங்கள், என்கிறீர்களா? சொல்கின்றேன், கேளுங்கள். 

சன்ஜான் என்பது ஒரு துறைமுக நகரத்தின் பெயர். நம்ம நாட்டில் குஜராத்தில் இருக்கின்ற துறைமுக நகரம். 

இந்த நகரத்துக்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் விடியற்காலையில் ஒரு பாய் மரக் கப்பல் நிறைய மக்கள் வந்து இறங்குகின்றார்கள். நகரத்துக்கு வெளியே கூடாரமிட்டு தங்குகின்றார்கள். 

பாரசீகத்திலிருந்து - இன்றைய ஈரானிலிருந்து - அவர்கள் அரசியல் காரணங்களுக்காக தப்பித்து வந்திருந்தார்கள். அடைக்கலம் கேட்டு செய்தி அனுப்புகின்றார்கள்.
 
உள்ளூர் நாட்டாண்மை யாதவ் ராணாவுக்கு அவர்கள் இங்கு வந்து குடியேறுவதில் உடன்பாடு இருக்கவில்லை. ‘நம்ம நகரத்தில் ஏற்கனவே போதுமான மக்கள் இருக்கின்றார்கள்’ என்பது அவருடைய நிலைப்பாடு. புதிய மக்களுக்கு இடமேது என்பதுதான் அவருடைய எண்ணம்.

ஆனால், அடைக்கலம் கேட்டு வந்தவர்களை ‘இடம் இல்லை, போங்கய்யா!’ என்று முகத்தில் அறைந்தாற்போன்று சொல்லிவிட மனசும் இல்லை. அந்தக் காலத்து நாட்டாண்மைகள் வெறுமனே 56 இஞ்சுக்காரர்கள் என்று பாவனை செய்பவர்கள் அல்லர். வீரம் மிக்கவர்கள். அதே சமயம் இங்கிதம் அறிந்தவர்கள்.

அதனால், வந்திருந்த விருந்தாளிகளுக்கு தம்முடைய நிலைப்பாட்டை சூசகமாக உணர்த்திவிட முயன்றார் யாதவ் ராணா. 

விருந்தாளிகளுக்கு பசும்பால் நிறைந்த குவளையை தட்டில் வைத்துக் கொடுத்து அனுப்பினார். ‘ஹவுஸ் ஃபுல் - அரங்கம் நிறைந்திருக்கின்றது’ என்பதை உணர்த்தினார். 

பார்சி அறிஞர்கள் அந்த நாட்டாண்மையின் கவலையையும் எண்ணத்தையும் நல்ல முறையில் புரிந்துகொண்டார்கள். 

உடனே அவர்கள் என்ன செய்தார்கள், தெரியுமா? ஒரு சிட்டிகை சக்கரையை எடுத்து அந்தக் குவளையில் இட்டார்கள். ஒரே ஒரு துளி பால் கூட சிந்தாத வகையில் சர்க்கரையை பாலில் கரைத்தார்கள். 

அவர்களின் இந்த விவேகம் நிறைந்த பதிலைப் பார்த்து யாதவ் ராணா சந்தோஷப்பட்டார். இவர்கள் விவரமானவர்களாக இருக்கின்றார்கள். நம்முடைய நகரத்துக்கு நலம் சேர்ப்பார்கள் என்று தீர்மானித்து அவர்களை வரவேற்று மகிழ்ந்தார். 

இதுதான் பார்சிகள் நம்ம நாட்டுக்கு வந்து சேர்ந்த வரலாறு. அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் இன்று வரை நாட்டுக்கு பலன் அளிப்பவர்களாகத்தான், ஆற்றலும் திறமையும் வளமும் செழிப்பும் நிறைந்தவர்களாகத்தான் இன்று வரை கோலோச்சிக் கொண்டிருக்கின்றார்கள். 

முஸ்லிம் சமுதாயத்துக்கும் இதில் செய்தி இருக்கின்றது. இன்னும்  சொல்லப் போனால் பார்சிகளின் இந்த நடத்தை முழுக்க முழுக்க இஸ்லாம் விரும்புகின்ற நடத்தையாகும். 

இஸ்லாம் மக்களுக்கு நன்மை அளிப்பவர்களைத்தான் சிறந்த மனிதர்களாகக் கொண்டாடுகின்றது. அமலே ஸாலிஹ் - நல்லறங்களில் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபடுவது இறைநம்பிக்கையின் இயல்பான விளைவாக இஸ்லாம் அறிவிக்கின்றது. 

எண்ணிக்கையைக் கூட்டுவது மட்டுமே நம்முடைய நோக்கமாக ஒருபோதும் இருந்ததில்லை. பயனுள்ள, நன்மைகள் நிறைந்த நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதுதான் நம்முடைய நோக்கமாக இருந்து வந்துள்ளது. 

நாட்டுக்கும் நகரத்துக்கும் சுமையாக இருப்பவன் முஸ்லிம் அல்லன். தாம் வாழ்கின்ற எந்தவொரு பகுதிக்கும் விலைமதிப்புமிக்க சொத்தாக இருப்பவன் தான் முஸ்லிம். 

வாழ்நாள் முழுக்க இறுதி மூச்சு வரை தன்னை மேம்படுத்திக் கொண்டே இருப்பவன்தான் சிறப்பான முஸ்லிம். ஒரு முஸ்லிமின் இரண்டு நாள்கள் ஒரே மாதிரியானவையாய் இருக்கக்கூடாது என்பது நபிமொழி. 

இன்று நம்முடைய நிலைமை என்ன? புதியதாகக் கற்றுக் கொள்வதில், புதிய பழக்கங்களை மேற்கொள்வதில், புதியப் புதிய நல்லறங்களில் ஈடுபடுவதில் நாம் எந்த அளவுக்குக் கவனம் செலுத்துகின்றோம்? 

சிந்திக்க வேண்டிய விஷயம் இதுவே.

- லுத்ஃபுல்லாஹ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset