நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

என் நிழல் என்னுடன் பேசியது..! - டாக்டர் முஹிய்யித்தீன் காஜி - வெள்ளிச் சிந்தனை

என் நிழல் திடீரென்று என்னைப் பார்த்து கத்தியது: ‘உம்முடன் சேர்ந்து நடந்து நடந்து நான் களைத்துப் போய்விட்டேன்’.

*நான்* : ஏன்? ஏன்?

*நிழல்* : ஏனெனில் நீர் என்னுடைய இயல்புக்கு எதிரான இடங்களுக்கு எல்லாம் என்னை இழுத்துக் கொண்டு போகின்றீர். உம்முடைய வேலைகளில் மேல்பூச்சும் போலித்தனமும் மினுமினுப்பும் அதிகமாகிவிட்டன. ஆனால் உம்முடைய அகத்தையோ பகட்டு எனும் காரிருள் கவ்விக் கொண்டிருக்கின்றது. அந்தோ! நான் உம்முடைய நிழலாக இல்லாமல் இருந்திருக்கக் கூடாதா? 

*நான்* : என்னையா விட்டுவிட்டுப் போக விரும்புகின்றாய்? எத்தனை எத்தனை மக்கள் என்னைச் சந்திப்பதற்காக ஆசைப்படுகின்றார்கள் தெரியுமா? சந்தோஷப்படுகின்றார்கள், தெரியுமா? என் இதயத்துக்கினியவனே, என்னைப் பற்றிய உம்முடைய கருத்து முற்றிலும் தவறு. 

*நிழல்* : ஒருவருடன் சேர்ந்து இருக்கும்போது தான் அவருடைய ஒழுக்க நிலை முழுமையாக வெளிப்படும். மக்கள் என்னைப் போன்று உம்முடன் நீண்ட நேரம் சேர்ந்து இருப்பதில்லை. நீர் உம்முடைய இதயத்துக்குள் சற்றே எட்டிப் பாரும். அங்கே கருமைதான் தென்படும். 

*நான்* :  கருமைக்கான காரணம் என்ன?

*நிழல்* : செய்யும் பணிகளில் இக்லாஸ் எனும் உளத்தூய்மை இல்லாமல் போகின்ற போது, அன்றாட வாழ்வில் விளம்பரமும் பகட்டும் மிகைத்து விடுகின்ற போது இதயம் கருப்பாகிவிடுகின்றது. 

*நான்* : இதெல்லாம் இதயத்தை இந்த அளவுக்குப் பாதிக்குமா, என்ன?

*நிழல்* : நிச்சயமாக. இக்லாஸ்தான் எல்லா அறங்களுக்கும் தூணாக, அடிப்படையாக இருக்கின்றது. இதனால்தான், ‘எவரிடம் இக்லாஸ் எனும் உளத்தூய்மை இல்லையோ அவரிடம், ‘உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டிய அவசியம்தான் என்ன?’ எனச் சொல்லிவிடுங்கள்’ என்று அறிவிக்கப்பட்டது.

வல்லமையும் மாண்பும் மிக்க இறைவனும் இதனைத்தான் கட்டளையிட்டிருக்கின்றான்: 

‘தங்கள் தீனை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்கியவர்களாக, முற்றிலும் ஒருமனப்பட்டவர்களாய் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வழிபட வேண்டும் என்று மட்டும்தான் அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருந்தது.’

இமாம் முஹாபிஸி சொல்கின்றார் :

‘மரத்தின் வேர்கள் வெளியே தெரியத் தொடங்குகின்ற போது அது முழுமையாக தண்ணீர் அருந்துவது நின்றுவிடுகின்றது. அதன் பிறகு அது காயத் தொடங்கிவிடுகின்றது. கனிகளைத் தருவதும் நின்றுவிடுகின்றது. அதனுடைய மதிப்பும் குறைந்துவிடுகின்றது. ஆனால் அதன் வேர்கள் பூமிக்குள் புதைந்து வெளி ஆள்களின் கண்களில் படாமல் இருக்கின்ற போது அது நிறைய தண்ணீர் அருந்துகின்றது. ரொம்பவும் செழிப்பாகவும் பசுமையாகவும் காட்சி தருகின்றது. சுவையான, தித்திப்பான கனிகளைத் தருகின்றது. இவ்வாறாக அதன் மதிப்பும் கூடிவிடுகின்றது’

இவ்வாறாக, என் நண்பனே! உம்முடைய நல்லறங்கள் அல்லாஹ்வுக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகின்ற போது, அல்லாஹ்வின் ஷரீஅத்தில் அதன் வேர்கள் ஊன்றி இருக்கும். அதனால் பலன்களும் பிரமாதமானதாக இருக்கும். 

*நான்* :  ஆனால் இப்படிச் செயல்படுவது எனக்கு ரொம்பவும் சிரமமாச்சே!

*நிழல்* : நீர் சொல்வதும் சரிதான். இதற்குக் காரணம் என்னவெனில் ஷைத்தானுக்கு மிகப் பெரும் வாய்ப்பாக அமைவது எண்ணம் தான். அதுதான் ஷைத்தான் எளிதாக உள்ளே நுழைவதற்கான மிகப் பெரும் நுழைவாயில். எண்ணத்தைச் சிதைப்பதன் மூலமாகத்தான் அவன் மனிதனின் நல்லறங்களைச் சீர்குலைக்கின்றான். சின்னாபின்னமாக்குகின்றான். 

இதனால்தான் இமாம் சுஃப்யான்(ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: 

‘என்னுடைய எண்ணத்தைச் சீர்திருத்துவதுதான் எனக்கு இருப்பதிலேயே மிக மிக சிரமமான வேலையாகும்.’

*நான்* : ஆனால் நான் பகட்டுக்காகத்தான் எல்லாவற்றையும் செய்கின்றேன் என்பது மக்களுக்குத் தெரியாதே?

*நிழல்* : உம்முடைய விவகாரங்கள் அனைத்தும் உம்முடைய அதிபதியிடம் கொண்டு செல்லப்படுமா? மக்களிடம் கொண்டு செல்லப்படுமா? 

மேலும் வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ்வின் பார்வைக்கு வராதது எதுவுமே இல்லை. எதையும் அவனிடமிருந்து மறைக்கவே முடியாது. *சையத் குதுப் ஷஹீத் (ரஹ்)* எழுதியிருக்கின்றார்: 

‘அவனுக்கு முன்னால் மறுமைநாளில் எல்லாமே எந்தவிதமான திரையும் இல்லாமல் போய்விடும். 

உடலைப் போர்த்துவதற்கு எந்த திரையும் இருக்காது. 

நஃப்ஸும் திரையில்லாமல் போகும். 

மனமும் அம்பலமாகிவிடும்

செயல்களும் எந்தவிதமான ஜோடனையும் இல்லாமல் நிற்கும்.

விளைவுகளும் அலங்காரம் இல்லாமல் இருக்கும். 

இரகசியங்கள் மீதான திரைகளும் விலகிவிடும். 

உடல்கள் அம்மணமாய் இருப்பதைப் போன்று ஆன்மாக்களும் எந்தவிதமான ஆடையும் இல்லாமல் இருக்கும்’. 

அந்த நாளில் மக்களால் உமக்கு எந்தப் பயனும் கிடைக்காது, என் நண்பனே!

எனவே உம்முடைய அறங்கள் அனைத்தையும் உளத்தூய்மையுடன் மேற்கொள்வீராக. 

மக்களின் பார்வைகளில் படாமல் படைத்தவனுக்கு வழிபடுவீராக. அப்போது தான் ஷைத்தான் உம்முடைய நன்மைகளைத் திருடிக் கொண்டு செல்வதை தடுக்க முடியும். 

ஒரு பெரியாரின் வாழ்வில் நடந்த நிகழ்வு ஒன்றை நான் உமக்குச் சொல்லட்டுமா? : ‘அவர் நாற்பதாண்டுகள் வரையில் மக்களுக்குத் தெரியாமலே உபரி நோன்புகளை நோற்று வந்தார். 

வீட்டிலிருந்து ரொட்டிகளை எடுத்துக் கொண்டு கடைக்குக் கிளம்பிச் செல்வார். அங்கு அந்த ரொட்டிகளை எளிய மக்களுக்குத் தானமாகக் கொடுத்துவிடுவார். 

கடையில் பசியாறிக் கொள்கின்றார் என்றே வீட்டார்கள் நினைத்தார்கள். வீட்டிலேயே மனிதர் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கின்றார் என்று கடையில் இருப்பார்கள் நினைத்தார்கள்.’

*நான்* :  என்னுடைய நிழலே!  நீ என்னுடைய பார்வையை, சிந்திக்கின்ற கோணத்தையே மாற்றிவிட்டாய். என்றாலும் பகட்டுக்கான அடையாளங்கள் என்ன என எனக்குச் சொல்?

*நிழல்* : அலீ பின் அபூதாலிப் (ரலி) கூறினார்கள்:

‘பகட்டான பேர்வழிக்கு மூன்று அடையாளங்கள் உண்டு. 

தனிமையில் இருக்கின்ற போது சோம்பலுடன் இருப்பான்.

மக்கள் மத்தியில் இருக்கின்ற போது சுறுசுறுப்பாக மும்முரமாக இயங்குவான்.

மக்கள் பாராட்டுகின்ற போது அதிகமதிகம் நல்லறங்களில் ஈடுபடுவான். விமர்சனத்துக்கு ஆளாகின்ற போது அறங்களைக் குறைத்துக் கொள்வான்’. 

*நான்* : ‘அந்தோ! பரிதாபமே! என்னுடைய அறங்கள் அனைத்துமே வீணாகிவிட்டனவே. 

*நிழல்* : நிராசை அடையாதே. புதியதாக உறுதி பூண்டு செயல்படத் தொடங்கு. அல்லாஹ்வுடனான உன்னுடைய ஒப்பந்தத்தைப் புதுப்பித்துக் கொள். இக்லாசுடன் - உளத்தூய்மையுடன் எந்தவொரு நல்லறத்தையும் மேற்கொள்கின்ற நற்பேற்றை வழங்குவாயாக என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். இக்லாசான - உளத்தூய்மை மிக்க நல்லறங்களால் உமர் பின் அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்களுக்கு அல்லாஹ் மிகப் பெரும் அருள்வளங்களையும் பரக்கத்தையும் அளித்ததைப் போன்று உனக்கும் கிடைப்பதற்காக அல்லாஹ்விடம் மன்றாடு.

*நான்* : இக்லாசான - உளத்தூய்மை மிக்க நடத்தை உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் வாழ்வில் அருள்வளங்கள் நிறைந்தது எவ்வாறு?

*நிழல்* : உமர் பின் அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்கள் குறித்து அவருடைய சிறிய தந்தையாரின் மகனார் ஹிஷாம் பின் அப்துல் மலிக் சொல்வார்: ‘உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடிக்குப் பின்னால் அவர் செய்ய ஒவ்வொரு நல்லறத்துக்குப் பின்னாலும் நல்லெண்ணமும் கலப்பற்ற நாட்டமும் தான் இருந்து வந்தது என்றே நான் உறுதியாக நம்புகின்றேன்’.

இது குறித்து *ஷேக் ராஷித்* அவர்கள் எழுதுகின்றார்:

‘இதனால்தான் இரண்டு தலைமுறைகள் செய்த அலங்கோலங்களையும் சீர் கேடுகளையும் உமர் பின் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களால் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலகட்டத்தில் முற்றாக சீர் செய்துவிட முடிந்தது’. 

இன்றும் ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகத்தில் நிறைந்திருக்கின்ற சீர்கேடுகளைப் பார்த்து இஸ்லாமிய அழைப்பாளர் மலைத்துப் போய்விடக் கூடாது. ஏனெனில் இஸ்லாமிய அழைப்பாளரும் ஒவ்வொரு சின்னச் சின்னச் செயலையும் பெரும் பெரும் திட்டங்களையும் கலப்பற்ற நல்லெண்ணத்துடன் மேற்கொள்வார் எனில், இறைவனின் நல்லருளும் இருந்ததெனில் அவராலும் இரண்டு ஆண்டுகளுக்குள் சீர்கேடுகளைச் சீர் செய்துவிட முடியும். 

*நான்* : உம்முடைய பேச்சு மலைகளைக் கூட அசைத்துவிடக்கூடியதாக இருக்கின்றது.  நானும் இன்ஷா அல்லாஹ் உளத்தூய்மையுடன் கலப்பற்ற எண்ணத்துடன் களம் இறங்கிவிடுகின்றேன். 

*நிழல்* : என்னுடைய தோழரே! உங்களின் நிழல் உங்களை எரித்து விடுவதற்கு முன்பாக இக்லாசுடன் செயல்படத் தொடங்கிவிடுங்கள். நல்லெண்ணத்துடன் களம் இறங்கிவிடுங்கள். 

*நான்* : என்ன சொன்னாய்? நிழல் வந்து என்னை எரித்துவிடுமா? 

*நிழல்* : ஆமாம், என்னுடைய தோழரே. நிழல்களும் இரண்டு வகைகளாக இருக்கின்றன.

*வேதனையின் நிழல்.* மறுமை நாளன்று இறைவன் அறிவிப்பான்:

செல்லுங்கள், மூன்று கிளைகளையுடைய நிழலின் பக்கம்! அது குளிரச் செய்யக் கூடியதுமன்று. தீச்சுவாலையிலிருந்து காப்பாற்றக்கூடியதுமன்று. (திருக்குர்ஆன் அத்தியாயம் 77 அல்முர்ஸலாத் 30 - 31)

*இரண்டாவது நிழல்* இறைக்கருணையின் நிழலாகும். அது குறித்து கருணையும் பரிவும் நிறைந்த இறைவன் கூறுகின்றான் :

மேலும், வலப்பக்கத்தார்; வலப்பக்கத்தார் (உடைய நற்பேறு) பற்றி என்னவென்றுரைப்பது? அவர்கள் முள்ளில்லாத இலந்தை மரங்கள், மேலும் அடுக்கடுக்காய் குலைகள் கொண்ட வாழைகள்; பரந்து விரிந்திருக்கும் நிழல், எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் நீர், என்றைக்கும் தீர்ந்துவிடாத - தங்குதடையின்றிக் கிடைக்கக்கூடிய ஏராளமான கனிகள் மற்றும் உயர்ந்த விரிப்புகளில் இருப்பார்கள்.  (அத்தியாயம் 56 அல்வாகிஆ 27 -34) 

*இமாம் குர்தூபி(ரஹ்)* கூறுகின்றார்:

‘சுவனத்தில் வெயிலே இருக்காது. சுவனத்தில் எங்கெங்கு பார்த்தாலும் நிழல்தான் இருக்கும்.’

எனவே, என் தோழரே! உங்களுக்கு விருப்பமான நிழல் எது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். 

- டாக்டர் முஹிய்யித்தீன் காஜி.

தமிழில்: லுத்ஃபுல்லாஹ் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset