நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

அந்த ஐந்து சிறப்புகள்..! -தியாகப் பெருநாள் சிந்தனை

உலகம் முழுவதும் இன்று மிக அதிகமாக உச்சரிக்கப்படுகின்ற பெயர்: இப்ராஹீம் (அலை)

இப்ராஹீம்(அலை) அவர்களின் வாழ்வும் வரலாறும் தருகின்ற செய்திகள் என்ன? நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கின் உர் என்கிற நகரத்தில் பிறந்த இப்ராஹீம்(அலை) அவர்களின் சிறப்புகள்தாம் என்ன? இன்றும் இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் நினைவுகூரப்படுவதன் தாத்பர்யம் என்ன?

ஐந்து சிறப்புகளைச் சொல்லலாம். 

முதலாவதாக,

அவர் தனியொருவராக ஏகத்துவத்தின் பக்கம் மக்களை அழைத்தார். ஒட்டுமொத்த உலகமே இணைவைப்பில் திளைத்துக் கொண்டிருந்த போது அதன் அடிப்படைகளையே தகர்த்தெறிகின்ற தவ்ஹீத் முழக்கத்தை அவர் ஓங்கி முழங்கினார்.
 
அவர் பிறந்த சமூகம் எத்தகையதாக இருந்தது தெரியுமா?  பூசாரிகள், அதிகாரிகள், இராணுவத்தினர் ஆகியோரைக் கொண்ட அமெலூ, வியாபாரிகள், தொழில் முனைவோர், விவசாயிகள் ஆகியோரைக் கொண்ட மிஷ்கினூ, தொழிலாளிகள், பாட்டாளிகள், அடிமைகள் போன்றோரைக் கொண்ட அர்தூ என்று மூன்று அடுக்குகளாக இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் அமெலு வம்சத்தில் பிறந்தவர்தாம் நபி இப்ராஹீம் (அலை). 

அந்தச் சமூகத்தின் அரசியலும் சரி, பொருளாதாரமும் சரி, பண்பாடும் சரி, கலை இலக்கியங்களும் சரி, குடும்ப நெறிமுறைகளும் சரி எல்லாமே நன்னார் (சந்திரன்), ஷம்மாஸ் (சூரியன்) போன்ற சிலைகளைச் சுற்றித்தான் பின்னிப் பிணைந்து இருந்தன. இணைவைப்பு ஒரு சமூகத்தில் வேரூன்றி விடுகின்ற போது விளைகின்ற கேடுகள் அனைத்தையும் கொண்ட சமூகமாக அது இருந்தது.

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் சிலை வழிபாடும் இணை வைப்பும் நிறுவனமயமாக்கப்பட்ட சமூகமாக அது இருந்தது. அப்படிப்பட்ட சமூகத்தில் *தனி ஆளாக* எழுந்து நின்று ஏகத்துவ முழக்கத்தை ஓங்கிய சிறப்பும் பெருமையும் இப்ராஹீம் நபிக்கே உண்டு.

இதனையே அவர் தம்மளவில் ஒரு சமுதாயமாக இருந்தார் என்றே குர்ஆன் கொண்டாடுகின்றது. 

இரண்டாவதாக,

தமக்குக் கிடைத்த ஏகத்துவ வெளிச்சத்தை மற்றவர்களுக்கும் பகிர்வதில் பேரார்வம் கொண்டவராக இப்ராஹீம் நபி இருந்தார்.

அதனையே தம்முடைய முதன்மையான இலட்சியப் பணியாக அமைத்துக் கொண்டார். தம்முடைய பெற்றோருக்கு செய்தியைச் சொன்னார்.

சொந்த ஊர்வாசிகளுக்கு இணைவைப்பின் கேடுகளை விவரித்தார். நாடாளும் மன்னனுக்கு இணைவைப்பு எந்த அளவுக்கு அபத்தமானது என்று உணர்த்தினார்.

நாட்டையும் வீட்டையும் துறந்த பிறகும் எங்கோ ஏதோ ஓரிடத்தில் அவர் முடங்கிவிடவில்லை. குடும்பம், சமூகம், தேசம் என எல்லாத் தரப்பினருக்கும் செய்தியை எடுத்துரைக்கின்ற அழைப்பாளராக முத்திரை பதித்தார். 

மூன்றாவதாக

அவர் செயலூக்கம் நிறைந்தவராக, தொலைநோக்கு கொண்டவராக (ஊலில் அய்தி வல்அப்ஸார்) ஒப்பற்ற தலைமைப் பண்புகளைக் கொண்ட தன்னிகரற்ற தலைவராக இருந்தார்.

அவருடைய வாழ்வில் ஒரே ஒரு நாள் கூட அவர் சோம்பி இருந்ததில்லை. ஓயாமல் ஒழியாமல் ஏகத்துவப் பரப்புரையில் அவர் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தார். 

போகின்ற இடங்களில் எல்லாம் ஏகத்துவக் கேந்திரங்களை நிறுவினார். அங்கு செயல்திறனும் ஊக்கமும் நிறைந்த ஆளுமைகளை தம்முடைய பிரதிநிதிகளாய் நியமித்தார். 

இவ்வாறாக தம்முடைய சகோதரர் மகனாரான லூத்(அலை) அவர்களை சோடோம் (இன்றைய டிரான்ஸ் ஜோர்தான்) நாட்டிலும், தமது மூத்த மகனாரான இஸ்மாயீல் (அலை) அவர்களை மக்காவிலும், தமது இளைய மகனாரான இஸ்ஹாக் (அலை) அவர்களை பாலஸ்தீனத்திலும் தம்முடைய பிரதிநிதிகளாய் நியமித்தார்.

எகிப்திலும் கால் பதித்தார். இன, மொழி, நிற, தேசிய வரையறைகளைத் தாண்டி ஏகத்துவப் பேரொளியை திக்கெட்டும் பரப்புவதில் கவனம் செலுத்தினார். 

நான்காவதாக

இறைக் கட்டளைகளை ஏற்று நடப்பவராக (கானித்), பரிவு நிறைந்தவராக, விருந்தோம்பல் செய்கின்றவராக, மனித நேயம் மிக்கவராக, இறைவனிடம் மீண்டும் மீண்டும் மீள்பவராக (முனீப்), செயலூக்கம் நிறைந்தவராக, தொலைநோக்கு கொண்டவராக, இறைவனுக்கு முழுமையாக அடிபணிந்து வாழ்பவராக (முஸ்லிம்), இளகிய மனம் படைத்தவராக (அவ்வாஹ்), பொறுமையும் நிதானமும் நிறைந்தவராக (ஹலீம்), இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக, கலப்பற்ற, மாசற்ற இதயங் கொண்டவராக, உண்மையே உரைப்பவராக(சித்தீக்) குர்ஆன் அவரைக் கொண்டாடுகின்றது.

அவருடைய பண்புகள் ஒவ்வொன்றும் அழைப்பாளர்கள் ஒவ்வொருவரும் தம்மிடம் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகளாகும். 

எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஹனீஃப் - ஆக இருந்தார். மனித வாழ்வின் அனைத்துவிதமான அழுத்தங்களுக்கும் இழுப்புகளுக்கும் சற்றும் வளைந்து கொடுக்காமல் மனத்தை ஒருமுகப்படுத்தி இறைவனுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து வாழ்பவராக அவர் மிளிர்கின்றார்.

குர்ஆன் அவருடைய இந்தப் பண்பை எட்டு இடங்களில் குறிப்பிடுகின்றது.

ஐந்தாவதாக

பெற்றோர் மீதான பாசம், பிள்ளைப் பாசம், பிறந்த மண் மீதான நேசம், மனைவி, பிள்ளைகள் மீதான பற்று, ஆட்சியதிகாரம், செல்வம், செல்வாக்கு என அனைத்தை விட்டும் அவர் அல்லாஹ்வின் மீதே தம்முடைய நேசம், பாசம், பந்தம், பற்று, ஆசை, எதிர்பார்ப்பு, ஏக்கம் என அனைத்தையும் குவித்துவிட்டார்.

கலீலாக - இறைவனின் நண்பராக இறைவனே அறிவிக்கின்ற அளவுக்கு இறைநெருக்கத்தைப் பெற்றார். ஹனீஃபியத் - இறைவனை மட்டுமே மையமாகக் கொண்ட வாழ்க்கைக்கு அவர் அழகிய முன்மாதிரியாக ஜொலிக்கின்றார். 

இந்த பண்டிகைக் காலங்களில் நாம் எல்லோரும் அவருடைய இந்த ஐந்து சிறப்புகளை நினைவு கூர்வோம்.

‘நமது தொழுகை, நமது தியாகம், நமது வாழ்வு, நமது மரணம் ஆகிய அனைத்தும் அல்லாஹ்வுக்காகவே’* என்பதை நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும், கூட்டு வாழ்விலும் நிரூபித்துக் காட்டுவோம். 

இன்ஷா அல்லாஹ்.

- லுத்ஃபுல்லாஹ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset