நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகின் மிகப் பெரிய குகை: சுற்றிப்பார்க்க 3000 அமெரிக்க டாலர்

ஹோ சி மின் சிட்டி:

உலகின் மிகப் பெரிய குகையாக கருதப்படும் ’சன் டூங்’ குகை வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் நீளமுள்ள பிரமாண்ட குகையை சுற்றிப்பார்க்க 3000 அமெரிக்க டாலர் என்றால் புருவம் உயர்த்தாமல் இருக்க முடியாது. அப்படி என்ன சிறப்பு அந்தக் குகையில்?

மத்திய வியட்நாமில் குவாங் பின்க் மாகாணத்தில் ஃபோங் ந - கே பாங் (Phong Nha - Ke Bang) தேசிய பூங்காவில் உள்ள தொலைதூரக் காட்டில் அமைந்திருக்கும் சன் டூங் குகை பல ஆண்டுகளாக வெளி உலகத்திலிருந்து மறைக்கப்பட்டிருந்தது. 

பல தசாப்தங்களுக்கு முன்பு உள்ளூர் விவசாயி ஹோ கான் என்பவர் வாசனை திரவ பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் அகர் மரத்தை தேடி வனப்பகுதிக்குள் சென்ற போது குகையின் நுழைவு வாயிலை கண்டுபிடித்தார். அதன்பிறகு அவரது உதவியுடன் 2009-ஆம் ஆண்டில் இங்கிலாந்து குகை நிபுணர்கள் குழுவால் குகை ஆராயப்பட்டது,

நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு சன் டூங் குகை உலகின் பெரிய குகையாக அறிவிக்கப்பட்டது. 

இந்த பிரமாண்டமான குகை, 10.43 கிலோமீட்டர் நீளமும், 200 மீட்டர் உயரமும், 150 மீட்டர் அகலமும் கொண்டதாகும். குகை இவ்வளவு பெரிதாக இருப்பதற்கு செங்குத்தான நிலப்பரப்பு, அதிக மழைப்பொழிவு மற்றும் இப்பகுதியில் உள்ள சுண்ணாம்புக்கல்லின் தரம் ஆகியவைதான் காரணம் என்று கூறப்படுகிறது. 

Tourism on track in the world's largest cave - Global Times

சுமார் 23 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மலைக்கு அடியில் ஓடிய ஆறால், இந்த குகை உருவானதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே இக்குகைக்கு மழை ஆறு என்று பொருள்படும் விதமாக வியட்நாம் மொழியில் ‘சான் டூங்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

அதிசய குகையின் உள்ளே காடுகள், புல்வெளிகள், ஆறுகள், மணற்பரப்பு, பல்லுயிரினங்கள் என அனைத்தும் உள்ளன. குகையின் உடைந்த மேற்கூரை வழியாக வெளியே பார்த்தால் காடுகள் அடர்ந்த சோலைவனம் போலக் காட்சியளிக்கிறது.

சன் டூங் குகை மற்றொரு குகை அமைப்புடன் இணைவதாகவும், குகை இன்னும் நீளமாகவும் பெரியதாகவும் இருக்கும் என்று குகை நிபுணர்கள் நம்புகின்றனர். குகையில் உள்ள பெரும்பாலான பாதைகள் ஆராயப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு தாய்லாந்தில் குகையொன்றில் சிக்கியிருந்த கால்பந்து அணியை சேர்ந்த 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்க உதவிய முத்துக்குளிக்கும் வீரர்கள் அடங்கிய குழுவினர் இந்த குகையில் முக்கிய நதியை ஆராயும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆனால், நம்பமுடியாத அளவுக்கு ஆழமாகவும், தொழில்நுட்ப ரீதியாக மிகக் கடினமாகவும் இருந்ததால் அந்த பணி பாதியிலேயே கைவிடப்பட்டது. எனினும் வரும் காலத்தில் தொழில்நுட்ப உதவியுடன் குகையை முழுமையாக ஆராய்ந்து முடிப்போம் என்று குகை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

See world's largest cave, Hang Son Doong, in Vietnam | CNN Travel

What is the Sơn Đoòng Cave? Google celebrates discovery of world's largest  cave - World News - Mirror Online

குகைச் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறியீடுகள், மழைக்காலத்தில் வெள்ள முன்னறிவிப்புகளுக்கு உதவுவதாக பேரிடர் தணிக்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

லட்சக்கணக்கான ஆண்டுகள் பழமையான இந்த குகை, 2013-ஆம் ஆண்டில் முதன்முறையாக சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது. 

வனத்தின் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு, ஒவ்வொர் ஆண்டும் ஆயிரம் பேர் மட்டுமே இங்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். குகைக்கு சுற்றுப்பயணம் அழைத்து செல்லும் Oxalis Adventure என்ற நிறுவனம் நான்கு நாட்கள் சுற்றுப் பயணத்திற்காக 3000 அமெரிக்க டாலர் கட்டணம் நிர்ணயித்துள்ளது.

இந்த பயணத்தின்போது நிலத்தடி ஆறுகளைக் கடந்து, இரண்டு பிரமாண்டமான குகைக் கூரை இடிபாடுகளை பார்வையிட்டு, மலைக்காடுகள் வழியாகச் செல்வதுடன், உலகின் மிக அற்புதமான முகாம்களில் உறங்கலாம் என்பதால் சன் டூங் குகை சிறந்த சாகசத்திற்கான இடமாக பார்க்கப்படுகிறது.

17 கிலோ மீட்டர் மலையேற்றம், 8 கிலோ மீட்டர் குகையில் நடைபயணம் என கடினமான சுற்றுப்பயணமாக உள்ளதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களே சன் டூங் குகைக்கு சுற்றுலா செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset