செய்திகள் மலேசியா
பள்ளிகளில் நடக்கும் கொடுமைப்படுத்துதல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சகத்திற்கு பிரதமர் அன்வார் உத்தரவு
கோத்த பாரு:
பள்ளிகளில் நிலவும் வன்முறை, துன்புறுத்தல் (bullying) சம்பவங்கள் குறித்து கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சிற்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகள் தொடர்பான தற்கொலை, துஷ்பிரயோகம், துன்புறுத்தல் போன்ற சம்பவங்கள், சிறு வயதிலிருந்தே அவர்களின் ஆளுமை மேம்பாட்டையும் அறநெறி விழுமியங்களையும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வித் துறையில் சிறந்து விளங்குவது மட்டுமே போதாது என்று கூறிய அன்வார், கல்வி என்பது மாணவர்களிடையே நற்பண்புகள், மரியாதை, பொறுப்புணர்வு ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“மற்றவர்களைத் துன்புறுத்துவதும் அவமானப்படுத்துவதும், நமது கல்வி முறையில் விழுமியங்களையும் முறையான நடத்தைகளையும் புகட்டுவதில் இன்னும் குறைபாடுகள் இருப்பதையே காட்டுகின்றன.
“கல்வி அமைச்சு உறுதியுடனும், தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும் வகையிலும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் கல்வியாளர்களும் நமது குழந்தைகளைப் பாதுகாப்பதில் உதவ வேண்டும்,” என்று இங்கு நடைபெற்ற ‘கிளாந்தான் தொழில்முனைவோர் மறுமலர்ச்சித் திட்ட’ (Kelantan Entrepreneur Revival Scheme) தொடக்க விழாவில் அவர் கூறினார்.
மேலும், குர்ஆன் போதனைகளைப் புரிந்துகொண்டு அதன்படி நடத்தல், பிரார்த்தனைகளை நிறைவேற்றுதல், பெற்றோர், ஆசிரியர்கள், சக மாணவர்களை மதித்தல் உள்ளிட்ட சமயக் கல்வியின் முக்கியத்துவத்தையும் அன்வார் வலியுறுத்தினார்.
போதைப்பொருள் பயன்பாடு, குற்றச் செயல்கள் போன்ற சமூகச் சிக்கல்களைத் தீர்க்க, இளைஞர்கள் ஆரோக்கியமான சூழலில் வளர்வதை உறுதிசெய்யும் வகையில் ஒரு விரிவான அணுகுமுறை தேவை என்று அவர் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 1, 2026, 9:32 am
சிலாங்கூர் சுல்தான் குணமடைய பிரதமர் பிரார்த்தனை
November 1, 2026, 8:37 am
மாத்தா ஆயர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வான் பதாரியா காலமானர்: குடும்பத்தினருக்கு ஃபஹ்மி இரங்கல்
October 31, 2026, 1:39 pm
28 மலாக்கா சட்டமன்றத் தொகுதிகளில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
October 31, 2026, 1:37 pm
31 இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளி பரிசாக நிலப்பட்டா வழங்கப்பட்டது: டத்தோ சிவநேசன்
October 31, 2026, 12:43 pm
