நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய அரச காவல் படையில் டத்தோ ஸ்ரீ முஹம்மது சுஹைலியின் புதிய பணி நியமனம் குறித்து, பேரரசர்தான் முடிவு செய்வார்: ஐஜிபி டான்ஸ்ரீ காலித்

கோலாலம்பூர்:

மலேசிய அரச காவல் படையில் (PDRM) டத்தோ ஸ்ரீ முஹம்மது சுஹைலி முஹம்மது ஜைனின் புதிய பணி நியமனம் குறித்து, மலேசியப் பேரரசர் சுல்தான் இப்ராஹிமின் ஒப்புதல் கிடைத்த பின்னரே முடிவு செய்யப்படும் என்று
 காவல்துறைத் தலைவர் (IGP) டான் ஸ்ரீ முஹம்மது காலித் இஸ்மாயில் கூறினார்.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமையின் (AKPS) தலைமை இயக்குநராக அவர் வகிக்கும் பதவிக்காலத்தை முன்கூட்டியே முடித்துக்கொள்வதற்கு மன்னரின் அனுமதி தேவைப்படுகிறது.

முஹம்மது சுஹைலி ஒரு காவல்துறை அதிகாரி என்பதால், அவரது தற்போதைய பணி நியமனத்திற்கு முன்னதாகவே மாமன்னரின் ஒப்புதல் பெறப்பட்டிருந்தது என்று தெரிவித்தார்.

எனவே, முஹம்மது சுஹைலி மீண்டும் காவல்துறைக்குத் திரும்புவதற்கு மன்னரின் அனுமதியைக் கோரும் அதிகாரப்பூர்வ கடிதத்தைச் சமர்ப்பிக்கும் முன், அரசு வழக்கறிஞர் அலுவலகத்திடம் (AGC) சட்ட ஆலோசனையைப் பெற்று வருவதாக அவர் கூறினார்.

"மாமன்னரின் அனுமதி கிடைக்கும் வரை நான் காத்திருக்கிறேன். எனவே, அவரது புதிய பணி குறித்த விவரங்களை என்னால் உறுதிப்படுத்த முடியாது. 

இருப்பினும், அவர் ஒரு காவல்துறை அதிகாரி என்பதால், நிச்சயமாக மீண்டும் மலேசிய அரச காவல் படைக்கே (PDRM) திரும்புவார்," என்று அவர் கூறினார். 

புக்கிட் ஜாலிலில் உள்ள கிங்ஸ்டன் ஹோட்டலில் இன்று இரவு நடைபெற்ற, 2026-ஆம் ஆண்டிற்கான மலேசிய முன்னாள் காவல்துறை சங்கத்தின் 'ஜசமு திகெனாங்' (Jasamu Dikenang) விருந்து நிகழ்வில் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முகமது சுஹைலி மீண்டும் காவல்துறைக்குத் திரும்பிய பிறகு அவருக்கு வழங்கப்படும் பணிகள் அல்லது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று முஹம்மது காலித் குறிப்பிட்டார்.

இதனிடையே, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் நேற்று ஒரு கருத்தைத் தெரிவித்தார். அதன்படி, முஹம்மது சுஹைலியின் AKPS பணி நியமனம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அவரை மீண்டும் மலேசிய அரச காவல் படைக்கே (PDRM) திருப்பி அனுப்ப கடந்த வாரம் அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார். 

அதேவேளையில், அவருக்கு என்ன புதிய பணி வழங்கப்படும் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு காவல்துறை தலைமையிடமே விடப்பட்டுள்ளது. 

முஹம்மது சுஹைலி, 2025 ஜூலை 1 முதல் 2027 ஜூன் 30 வரையிலான இரண்டாண்டு காலத்திற்கு ஏ.கே.பி.எஸ் (AKPS) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அக்டோபர் 21 அன்று, செப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், செப்டம்பர் 28 அன்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் (KLIA) இரு காவல்துறை அதிகாரிகளுக்குக் காயத்தை ஏற்படுத்தியதாகத் தன்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை முஹம்மது சுஹைலி மறுத்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset