நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முகமது ஷுஹாய்லி குற்றத்தை மறுத்தார்

சிப்பாங்:

எல்லைக் கட்டுப்பாடு,  பாதுகாப்பு முகமையின் தலைமை இயக்குநர் டத்தோ செரி முகமது ஷுஹைலி முகமது ஜைன், கடந்த மாதம் இரண்டு அதிகாரிகளை வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இரண்டு குற்றச்சாட்டுகளுக்குத் தான் குற்றமற்றவர் என வாதிட்டுள்ளார்.

54 வயதான முகமது ஷுஹாய்லி, இன்று இங்குள்ள நீதிபதி கைரதுல் அனிமா ஜெலானி முன்னிலையில் தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் வாசிக்கப்பட்ட பின்னர் இந்த வாதத்தை முன்வைத்தார்.

செப்டம்பர் 28 அன்று கேஎல்ஐஏ முனையம் 1-ல் பாய்ஸ் சமன்,  எக்மல் சோஃப்வான் ஆகியோருக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323-ன் கீழ் ஷுஹாய்லி மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை, 2,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

நீதிபதி கைரதுல் அனிமா ஜெலானி, ஷுஹைலிக்கு இரண்டு ஜாமீன்தாரர்களுடன் 3,000 ரிங்கிட் ஜாமின் தொகையை அனுமதித்து, வழக்கு நிர்வாகத்திற்காக நவம்பர் 25ஆம் தேதியை நிர்ணயித்தார்.

துணை அரசு வழக்கறிஞர்களான ஷாரிசாத் இஸ்மாயில், சசாலி ஓமர் ஆகியோர் வழக்கை நடத்தினர்.

அதே சமயம் ஷுஹாய்லி சார்பில் கிட்சன் ஃபூங் தலைமையிலான எட்டு வழக்கறிஞர்கள் கொண்ட குழு ஆஜரானது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset