நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் கூச்சிங் சாலை விபத்தில் ஐந்து வயது சிறுமி பலி: வங்கி உதவி மேலாளர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது 

கோலாலம்பூர்:

கடந்த சனிக்கிழமை ஜாலான் கூச்சிங்கில் நடந்த ஆறு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில், ஐந்து வயது சிறுமி உயிரிழந்த சம்பவ தொடர்பாக வங்கி உதவி விற்பனை மேலாளர் ஒருவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

24 வயதான ரேவன் கோ, மாஜிஸ்திரேட் ஆலியா அன்வர் முன்னிலையில் இக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து குற்றச்சாட்டை நிராகரித்து விசாரணை கோரினார். 

கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி ஜாலான் கூச்சிங்கில் செகம்புட் நோக்கித் தனது மின்சார வாகனத்தை ஆபத்தான முறையில் இயக்கி, ஆசியா அகமத் ஷாஹிர் என்ற சிறுமியின் மரணத்திற்குக் காரணமானதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-இன் கீழ் சுமத்தப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டிற்கு 2 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, RM5,000 முதல் RM20,000 வரை அபராதம் மற்றும் குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தம் செய்யப்படலாம்.

மேலும், அதே சட்டத்தின் பிரிவு 42(1)-இன் கீழ் அலட்சியமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டியதாக அவர் மீது இரண்டாவது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. இக்குற்றச்சாட்டிற்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை, RM5,000 முதல் RM15,000 வரை அபராதம் மற்றும் குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

இதைத் தவிர, விபத்து நிகழ்ந்த பிறகு வாகனத்தை நிறுத்தத் தவறியதாகச் சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 52(1)-இன் கீழ் சுமத்தப்பட்ட மூன்றாவது குற்றச்சாட்டையும் அவர் மறுத்து விசாரணை கோரினார். இக்குற்றச்சாட்டிற்கு அதிகபட்சமாக RM2,000 அபராதம் அல்லது 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஆலியா அன்வர், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா ஒரு பிணையாளருடன் மொத்தம் RM36,000 பிணைத்தொகையை நிர்ணயித்தார். அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவர் தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இவ்வழக்கின் முழு விசாரணையும் முடிவடையும் வரை ரேவன் கோவின் ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்தம் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கின் மறு வழக்கு மேலாண்மைக்காக வரும் நவம்பர் 19-ஆம் தேதியை நீதிமன்றம் குறித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset