நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

11 வாகனங்கள் மீது மோதிய லோரி ஓட்டுநர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்

ஷாஆலம்:

ஷாஆலமில் 11 வாகனங்கள் மீது மோதிய லோரி ஓட்டுநர், போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டி மற்ற சாலைப் பயனாளிகளுக்குக் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார்.

மாஜிஸ்திரேட் அமீரா மஸ்துரா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட 51 வயதான அகிலன் செல்லப்பன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

குற்றச்சாட்டின்படி, அந்த நபர் மாலை 4.30 மணிக்கு மெத்தம்பெட்டமைன், ஆம்பெட்டமைன் போதைப்பொருட்களின் தாக்கத்தில் லோரியை ஓட்டி, சுபாரு ஸ்போர்ட்ஸ் ஓட்டுநர், பயணிகளுக்கும், பெரோடுவா மைவி வாகனத்தின் ஓட்டுநருக்கும் காயம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 44(1அ)(அ)-ன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஏழு முதல் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 30,000 முதல் 50,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படும்.

முன்னதாக, தனது கட்சிக்காரர் மாதத்திற்கு சுமார் 1,700  ரிங்கிட் சம்பாதிப்பதாகவும், வேலையில்லாத மனைவி, 11 வயது குழந்தையை ஆதரிப்பதாகவும் கூறி, ஜாமீன் தொகையைக் குறைக்குமாறு அவரது வழக்கறிஞர் ரோகன் சிங் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்பின், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு ஜாமீன்தாரருடன் 9,000 ரிங்கிட் ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset