நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியத் தொழில்முனைவோருக்கு மேலும் பல வாய்ப்புகள்; பெர்காட் தீபாவளி திட்டத்தை மைக்கி பாராட்டுகிறது: டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன்

கோலாலம்பூர்:

இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் பண்டிகைக் கால வணிகத் தேவைகளுக்குத் தயாராக உதவும் வகையில், ரிங்கிட் 30,000 வரை நிதியுதவி வழங்கும் பெர்காட் தீபாவளி திட்டத்தை தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தை அறிமுகம் செய்த அமைச்சர் ஸ்டீவன் சிம்மை மைக்கி பாராட்டுகிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் கூறினார்.

இந்தியச் சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மடானி அரசாங்கத்தின் மற்றுமொரு அர்த்தமுள்ள நடவடிக்கையாக இத்திட்டம் அமைந்துள்ளது..

குறிப்பாக சிறு, குறுந்தொழில் முனைவோர் சரக்குகளின் இருப்பை அதிகரிக்கவும், வணிகச் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், தீபாவளிக் காலத்தில் அதிகரிக்கும் வாடிக்கையாளர் தேவைகளை எதிர்கொள்ளவும் தேவையான மூலதனத்தைப் பெற இத்திட்டம் உதவுகிறது.

பெர்காட் தீபாவளி திட்டத்தின் அறிமுகத்தை மைக்கி பெரிதும் பாராட்டுகிறது.

அடித்தளத்தில் உள்ள தொழில்முனைவோரின் உண்மையான தேவைகளை இத்திட்டம் கவனத்தில் கொள்கிறது.

சிறு வணிகர்களைப் பொறுத்தவரை, பண்டிகைக் காலத்திற்கு முன்பாகக் கிடைக்கும் கூடுதல் மூலதனம், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் குடும்ப வருமானத்தை அதிகரிப்பதற்கும் குறிப்பிடத்தக்க உதவியாக அமையும்.

இத்திட்டம் நிதியுதவியை வழங்குவதோடு, தொழில்முனைவோர் அதிக நம்பிக்கையுடனும் முறையான திட்டமிடலுடனும் தயாராகுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

அவர்களின் வணிகத் தொடர்ச்சியைச் சார்ந்துள்ள குடும்பங்கள், பணியாளர்கள், சமூகத்தினரும் இதன் பலனைப் பெறுவார்கள்.என்று அவர் கூறினார்.

இந்தியத் தொழில்முனைவோரின் தேவைகளில் அக்கறை காட்டிய தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங்கிற்கும் பாராட்டுகள்.

முதன்முறையாக, இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோருக்குத் தீபாவளியை முன்னிட்டு இத்தகைய சிறப்பு நிதியுதவி வாய்ப்பு, அமைச்சர் ஸ்டீவன் சிம் தலைமையில் அமைச்சு மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பண்டிகைக் கால வணிகத் தயாரிப்புகளை மேற்கொள்ள இந்தியத் தொழில்முனைவோருக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கிய அவரது முயற்சியை மைக்கி பெரிதும் பாராட்டுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset