செய்திகள் தமிழ் தொடர்புகள்
‘அரசின் திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பது மக்களாட்சிக்கும் மக்களுக்கும் எதிரானது; பிறகு எதற்கு பட்ஜெட்?’: சீமான் கடும் விமர்சனம்
சென்னை:
‘சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஜோஸப் விஜய் அறிவிப்புகள் வெளியிடுவது மக்களாட்சிக்கும், மக்களுக்கும் எதிரானதாகும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை எதற்கு? அதன் மீதான விவாதங்கள் எதற்கு?’ என நாம் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு முதல்வர் விஜய் அறிவித்து வருவது மக்களாட்சிக்கும், அதனை நம்பி வாக்களித்த மக்களுக்கும் எதிரானதாகும்.
நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் 2026-27-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த நிறை - குறைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கடந்த ஒரு மாத காலமாகச் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
ஆனால், 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில், நிதிநிலை அறிக்கையில் இல்லாத புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முதல்வர் அறிவித்து வருவது ஏன்?
சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிடுவது அனைத்தும் முக்கியத் திட்டங்கள் என்றால், அதன் நன்மை தீமைகள் குறித்து அவையில் விவாதங்கள் நடைபெற வேண்டாமா?
மக்களுக்குத் தேவையான இன்றியமையாத திட்டங்கள் என்றால் அவை ஏன் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை?
பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு முடிவுகள், புதிய திட்டங்களைப் பேரவைத் தலைவர் அனுமதியுடன் சட்டப்பேரவையில் அறிவிக்கவும், அறிவிக்கும் நேரத்தில் அதன் மீது விவாதம் நடைபெறாமல் இருக்கவும் கடந்த திமுக, அதிமுக அரசுகள் விதி 110-ஐ பயன்படுத்தினார்கள்.
அதை, மாற்றம் எனச் சொல்லி வந்த தவெக அரசு, விளம்பர வெற்று அறிவுப்புகளுக்குப் பயன்படுத்துவது நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? இதுதான் உங்களது மாற்றமா?
சட்டங்களை உருவாக்கவும், விவாதிக்கவும், நிறைவேற்றவும் அமைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் இவ்விதியை பயன்படுத்தி நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத திட்டங்களை ஒவ்வொரு நாளும் வெளியிடுவதும் அதன் மீது விவாதமில்லாமல் கடந்து போவதும் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைக்காதா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் அவையில், மக்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருத்தும் தெரிவிக்கும் வாய்ப்பை பறிப்பது கொடுங்கோன்மை அல்லவா?
முதல்வரின் பொறுப்பிலிருந்த துறைகளையே, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கிவிட்ட நிலையில், மற்ற அமைச்சகம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு மட்டும் முதல்வர் எதற்கு?
அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவது, அமைச்சர்களின் தனித்துவத்தைக் குறைக்காதா?
இதன் மூலம் தவெக அரசு தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வரும் செய்தி என்ன? அனைத்து முக்கியத் திட்டங்களும் முதல்வரின் மூளையில் உதித்தது என்பதையா?
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதியிலிருந்து இன்று வரை தவெக அரசு விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்களுக்கான மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி. அதற்கு மேலாக எரிகாற்று உருளை, இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் தொடர் செலவாக 10,720 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்படும் திட்டங்களின் வரவு செலவுகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன்?
நிதிநிலை அறிக்கையின்படி ஏற்கெனவே இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி கடன் வாங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள்.
இப்பொழுது புதிதாக 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிற திட்டங்களுக்கான ரூ.73,900 கோடிக்கான நிதியை எப்படி பெறுவீர்கள்? யாரிடம் கடன் வாங்குவீர்கள்? இதுதான் கடன் சுமையை குறைக்கும் முறையா? இதுதான் தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான மாற்றமா?
மக்களாட்சிக்கு எதிரான, நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பர திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ என்று சீமான் கூறியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2026, 10:33 pm
சென்னை உட்பட 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை நிலையம்
October 21, 2026, 8:59 pm
புழல் சிறையிலிருந்து அடுத்தடுத்து 2 கைதிகள் தப்பி ஓட்டம்: சென்னையில் பரபரப்பு
October 20, 2026, 10:53 pm
ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு மீண்டும் திரும்பும் மக்கள்
October 18, 2026, 4:25 pm
சென்னையில் பலத்த மழை: பல இடங்களில் போக்குவரத்து நெரிசல்
October 17, 2026, 2:26 pm
பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்
October 16, 2026, 5:28 pm
கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தையும், அறிவியல் மையத்தையும் முதல்வர் ஜோசப் விஜய் திறந்து வைத்தார்
October 16, 2026, 9:25 am
தமிழகத்தில் தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: சுகாதாரத் துறை எச்சரிக்கை
October 15, 2026, 8:43 pm
திமுக தலைவர்கள் குறித்த அவதூறு AI காணொலிப் பதிவுகளை உடனடியாக நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
October 15, 2026, 11:40 am
