நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகத் தலைவர்களுடனான பிரதமரின் கலந்துரையாடல்: இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதி

  புத்ரா ஜெயா:

இந்திய சமூகத் தலைவர்களுடனான பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன அடிப்படையிலான பாகுபாடு, வறுமை ஒழிப்பு, கல்வி உதவி, அரசின் நிதித் திட்டங்கள், சிறு தொழில் ஆதரவு குறித்து விரிவாகப் பேசினார்.

அரசுத் திட்டங்கள், அவற்றின் நடைமுறைகள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும், அறிவிப்புகளுக்கு முன் தரவுகள், எண்ணிக்கைகள், SOP நெறிமுறைகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இன அடிப்படையிலான அரசியல் பேச்சுகள் சமூகத்தில் மோதலை உருவாக்கக்கூடும் என்பதால், தலைவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார்.

குறிப்பாக இந்திய சமூகத்தில் அரசின் உதவிகள் போதுமான அளவில் சென்றடையவில்லை என்ற கருத்து பரவலாக நிலவுவதாகவும், இது கொள்கை குறைபாடு மட்டுமல்ல; தகவல் பரிமாற்றம், செயல்படுத்தலில் உள்ள பலவீனம் காரணமாகவும் இருக்கலாம் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

STR போன்ற உதவித் திட்டங்கள் இன வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்படுகின்றன என்றும், இந்திய சமூகத்தைச் சேர்ந்த பல லட்சம் பயனாளிகள் இந்த உதவியைப் பெறுகின்றனர் என்றும் பிரதமர் கூறினார்.

பள்ளி மாணவர்களுக்கான ஆரம்பக் கல்வி உதவி அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இந்திய மாணவர்களுக்கான கல்வி, நிதி உதவிகள் குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

மிகவும் ஏழையான இந்தியக் குடும்பங்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு நேரடியாக உதவும் வகையில் தேசிய அளவிலான ஒருங்கிணைந்த திட்டம் தேவை என கூட்டத்தில் முன்மொழியப்பட்டது.

சிறு, நடுத்தர தொழில்முனைவோர் அரசுத் திட்டங்கள், வங்கிக் கடன்களைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக உத்தரவாதம், முன் அனுபவம், ஆவணங்கள், collateral இல்லாததால் பெரிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தியத் தலைவர்களிடம் உறுதியளித்தார். 

சமூகங்களைப் பிரிக்கும் இன அடிப்படையிலான அரசியலைத் தவிர்த்து, அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து, குறிப்பாக ஏழைகள், மாணவர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கான உதவிகள் உண்மையில் சென்றடையும் வகையில் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்பதே கூட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset