நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விபத்தில் 17 வயது இளம் பெண் மரணம்; குண்டர் கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது: போலிஸ்

ஜொகூர்பாரு:

கடந்த செவ்வாய்க்கிழமை கூலாய்,  இந்திராபுத்ரா பகுதியில் நடந்த விபத்தில் உயிரிழந்த 17 வயது இளம் பெண் மரணம் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக, 15 வயது மாணவி உட்பட 13 பேரை போலிஸ் கைது செய்துள்ளது.

நள்ளிரவு சுமார் 12.38 மணியளவில், உயிரிழந்த இளம் பெண் உட்பட ஐந்து பேர் பயணித்த பெரோடுவா மைவி கார் சம்பந்தப்பட்ட விபத்து குறித்து தனது துறைக்கு தகவல் கிடைத்ததாக ஜொகூர் போலிஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாத் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரும் அவரது நண்பரும் இரவு உணவு முடித்துவிட்டு இந்திரா புத்ராவில் உள்ள ஜாலான் கெனங்காவிலிருந்து தங்களது வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​கருப்பு நிற டொயோட்டா வெல்ஃபயர் உட்பட பல வாகனங்கள் பாதிக்கப்பட்டவரின் வாகனத்தைப் பின்தொடர்ந்தன என்பது தெரியவந்துள்ளது.

அவர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது, ​​பாதிக்கப்பட்டவர் பயணித்த வாகனம் டொயோட்டா வெல்ஃபயரால் மோதப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதனால், முன் இருக்கையில் பயணித்த பாதிக்கப்பட்டவர் தூக்கி வீசப்பட்டார். என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ஏற்கனவே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியிருந்த அந்தப் பாதிக்கப்பட்டவர், இங்குள்ள சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பாக, சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவர் கூறினார்.

போலிசார் முதலில் இந்த வழக்கை ஒரு விபத்தாக விசாரித்தனர்.

பின்னர், அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இதை ஒரு கொலை வழக்காக வகைப்படுத்தினர்.

ஜொகூர் பாருவைச் சுற்றியுள்ள இரண்டு இரகசிய சமூகக் குழுக்களுக்கு இடையேயான உறுப்பினர் தகராறுடன் இந்தச் சம்பவம் தொடர்புடையதாக இருப்பதற்கான சாத்தியக்கூற்றையும் நாங்கள் நிராகரிக்கவில்லை.

இருப்பினும், இந்தச் சம்பவத்திற்கான நோக்கம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset