நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய தெலுங்கு சங்கத்தின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முப்பெரும் விழா; ஆகஸ்ட் 29, 30இல் பினாங்கில் நடைபெறும்: சத்தியா சுதாகரன்

கோலாலம்பூர்:

மலேசிய தெலுங்கு சங்கம் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முப்பெரும் விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

இவ்விழா வரும் ஆகஸ்ட் 29, 30ஆம் தேதிகளில், பினாங்கில் உள்ள Penang Waterfront Convention Centre (PWCC)-இல் நடைபெறவுள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் மலேசியா, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த தெலுங்குச் சமூகத் தலைவர்கள், பேராளர்கள், சிறப்பு விருந்தினர்கள், கலாசாரப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி, தெலுங்கு மொழி, கலாசாரம், பாரம்பரியம், ஒற்றுமை, சர்வதேச ஒத்துழைப்பைக் கொண்டாடவுள்ளனர் என்று மலேசியத் தெலுங்கு சங்கத்தின் துணைத் தலைவர் சத்யா சுதாகரன் தெரிவித்தார்.

மலேசியத் தெலுங்குச் சங்கத்தின் 46ஆவது ஈராண்டுப் பேராளர் மாநாடு ஆகஸ்ட் 29ஆம் தேதி காலை 9.00 மணி - பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும்.

மலேசியா முழுவதிலும் உள்ள சங்கத்தின் 30 கிளைகளைச் சேர்ந்த பேராளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளனர்.

சங்கத்தின் இதுவரையிலான முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அமைப்பின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதற்கும், குறிப்பாக மலேசியாவில் தெலுங்கு மொழி, கலாசாரம், கல்வி, கலை மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான சங்கத்தின் எதிர்காலத் திசையை விவாதிப்பதற்கும் இம்மாநாடு ஒரு முக்கியமான தளமாக அமையும் என்று அவர் சொன்னார்.

இம்மாநாட்டின் தலைமைச் சிறப்பு விருந்தினராக பிபிபி தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா கலந்து கொண்டு மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் என்று அவர் சொன்னார்.

ஆகஸ்ட் 29 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மலேசியத் தெலுங்கு சங்கத்தின் 70ஆவது பிளாட்டினம் ஆண்டு விழா மிகவும் விமர்சையாக நடைபெறுகிறது.

துணை பிரதமரும் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, பினாங்கு மாநில முதலமைச்சர் சாவ் கோன் இயோ, ஆந்திரப் பிரதேச தொழில் முனைவோர் அமைச்சர் கொண்டபாலி சிரினிவாஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

மறுநாள் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதலாவது ஆசிய பசிபிக் தெலுங்கு கூட்டமைப்பு மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

இந்திய, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, குவைத், சிங்கப்பூர், மொரிஷியஸ், மலேசிய, தாய்லாந்து, மியான்மார் நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று மலேசியத் தெலுங்கு சங்கத்தின் தலைவர் டாக்டர் வெங்கட் பிரதாப் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset