செய்திகள் மலேசியா
SAMBUTAN KEMERDEKAAN EP 2: நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தேசிய கீதம் நெகாராக்கூ வரலாறு
கோலாலம்பூர்:
மலாயா 1957ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி அறிவிக்கப்படவிருந்த சுதந்திரத்திற்கு முன்னதாக ன்நாட்டிற்கென ஒரு தனித்துவமான தேசிய கீதத்தை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
நாட்டின் தேசிய கீதத்தை தயார் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக, 1957 பிப்ரவரி மாதத்தில் சிறந்த தேசிய கீதத்தை தேர்ந்தெடுப்பதற்கான போட்டி ஒன்று நடத்தப்பட்டது.
இருப்பினும், இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு பாடல்களும் தேசிய கீதத்திற்குரிய முழுமையான தகுதியைப் பெறவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அப்போதைய நாட்டின் முதல் பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்-ஹாஜ், பேராக் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில கீதத்தின் மெட்டையே தேசிய கீதத்தின் அடிப்படை மெட்டாகப் பயன்படுத்தலாம் என்று ஒரு யோசனையை முன்வைத்தார்.
அந்தப் பேராக் மாநிலப் பாடலின் மெட்டானது, TERANG BULAN என்ற புகழ்பெற்ற பாடலை அடிப்படையாகக் கொண்டதாகும்.
துங்கு அப்துல் ரஹ்மானின் இந்த யோசனையை, தேசிய கீதத் தேர்வுக்குழு JKPLK ஏகமனதாக ஏற்றுக்கொள்ள முன்வந்தது.
இதனைத் தொடர்ந்து, பாடலின் இசை அமைப்பைப் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாகத் தொடங்கின.
இந்தச் சிறப்புமிக்க பாடலுக்கு இசைக்குறிப்புகளை உருவாக்கும் பொறுப்பு ALFONSO SOLIANO, D.S.P CROFF, CAPTAIN LENTHALL மற்றும் A.T REED ஆகிய திறமைமிக்க இசைக் கலைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதேவேளையில், பாடலுக்கான பாடல் வரிகள் துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையிலான சிறப்புக்கமிட்டியால் உருவாக்கப்பட்டு, மலாய் சுல்தான்களின் ஒப்புதலுடன் இறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 1957 ஆகஸ்ட் 31 நள்ளிரவு 12 மணிக்கு மேல், சிலாங்கூர் கிளப் திடலில் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் நிகழ்ந்தது. 'யூனியன் ஜேக்' கொடி இறக்கப்பட்டு, மலாயா கூட்டமைப்பின் தேசியக் கொடி முதன்முறையாக ஏற்றப்பட்டது.
அந்த வரலாற்று நள்ளிரவில்தான் 'நெகாராக்கூ' தேசிய கீதம் முதன்முதலாக ஒலிக்கப்பட்டு, மலேசிய மண்ணில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது.
அன்று முதல் இன்று வரை 'நெகாராக்கூ' பாடல் நாட்டின் அதிகாரப்பூர்வ தேசிய கீதமாகத் திகழ்வதோடு, மலேசிய மக்களின் தேசபக்தியின் அடையாளமாகவும் தொடர்ந்து ஒளிர்கிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 5:52 pm
மாலை 6 மணி வரை ஏழு மாநிலங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை - மெட் மலேசியா தகவல்
August 19, 2026, 12:48 pm
பாகிஸ்தானில் போலி அழைப்பு மையத்தின் மீது நடத்தப்பட்ட சோதனை: மலேசியர் கைது
August 19, 2026, 12:04 pm
