நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உண்மை, நீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம் தொடர வேண்டும்: அமைச்சர் முஹம்மது சாபு

கோலாலம்பூர்:

வேளாண், விவசாய அபிவிருத்தி அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹம்மது சாபு எழுதிய Mustakim versus Mustakim என்ற நூல் இன்று தலைநகர் பெர்ஜெயா தங்குவிடுதியில் வெளியீடு கண்டது.

இந்த நூல் உலக புவிசார் அரசியலை தனது நேரடி அனுபவங்கள், சந்திப்புகள், ஆய்வுகளின் அடிப்படையில் விளக்குகிறது என்று முஹம்மது சாபு குறிப்பிட்டார்.

கம்யூனிசம் குறித்து மலேசியாவில் பரப்பப்பட்ட தகவல்களையும், முன்னாள் மலாயா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களை நேரில் சந்தித்து அறிந்த உண்மைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அதிகாரம் நிரந்தரமானதல்ல:
எந்தப் பேரரசும் அல்லது அரசியல் சக்தியும் என்றென்றும் நிலைத்திருக்காது. அதிகாரம் அகங்காரமாகவும் அடக்குமுறையாகவும் மாறும்போது அதன் வீழ்ச்சி தொடங்குகிறது.

வரலாற்றில் பலவீனர்களின் வெற்றி:
மூசா நபி, இப்ராஹீம் நபி, நபிகள் நாயகம் முஹம்மது ﷺ, மகாத்மா காந்தி, ஹோ சி மின் போன்றவர்கள் வலிமையான ஆட்சிகளுக்கு எதிராக எழுந்து மாற்றத்தை ஏற்படுத்திய உதாரணங்களாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காஇஸ்ரேல் ஆதிக்கம்:
உலகின் தற்போதைய ஒருதுருவ அதிகார அமைப்பில் அமெரிக்காவும் இஸ்ரேலும் முக்கிய சக்திகளாக இருப்பதாக அவர் விமர்சித்தார். இந்த ஆதிக்கம் மாற்றமடைந்து வருவதாகவும் கூறினார்.

ஈரானைப் பற்றிய பார்வை:
ஈரான் தடைகள், வெளிப்புற அழுத்தங்களுக்கிடையிலும் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பெண்களின் உயர்கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

மதப்பிரிவினை அரசியல்:
சுன்னி–ஷியா பிரிவினையைப் பயன்படுத்தி முஸ்லிம் உலகை பலவீனப்படுத்தும் அரசியல் நடைபெறுகிறது என்று அவர் கூறினார். முஸ்லிம்கள் பிரிவினைப் பிரச்சாரங்களை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றார் மாட் சாபு.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு:
அரசியல், மதம் அல்லது இனத்தை விட ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே முக்கியம் என்று அவர் வலியுறுத்தினார்.

பாலஸ்தீன் - காசா:
பாலஸ்தீனில் நடைபெறும் மனிதாபிமான நெருக்கடி, படுகொலைகளுக்கு எதிராக உலக மக்களிடையே, குறிப்பாக ஐரோப்பாவில், எதிர்ப்பு அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் இனவாதத்திற்கு எதிர்ப்பு:
மலாய், சீனர் அல்லது இந்தியர் என்ற அடையாளத்தின் அடிப்படையில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் மதிப்பிடக் கூடாது. தவறு செய்தவர் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்றார்.

அசபிய்யா பற்றிய விமர்சனம்:
இன அடிப்படையிலான கண்மூடித்தனமான ஆதரவு சமூகத்துக்கும் அரசியலுக்கும் ஆபத்தானது. நீதி, நெறிமுறைகள் இன அடையாளத்தை விட மேலானவை என்று அவர் கூறினார்.

-புதிய உலக ஒழுங்கு:
அமெரிக்கா தலைமையிலான ஒருதுருவ உலக அமைப்பு மாறி, ரஷ்யா, சீனா, இந்தியா, ஈரான், பிரேசில் மற்றும் BRICS போன்ற புதிய சக்திகள் உருவாகி வருவதாக அவர் கூறினார்.

ஆசியான் மலேசியாவின் பங்கு:
மலேசியாவும் ஆசியான் நாடுகளும் மாறிவரும் உலக அதிகார சமநிலையை புரிந்துகொண்டு, ஒரே வல்லரசின் பாதுகாப்பு அல்லது ஆதிக்கத்தை மட்டும் சாராமல் செயல்பட வேண்டும் என்றார்.

இளைஞர்களுக்கான செய்தி:
எந்தக் கருத்தையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளாமல், இளைஞர்கள் தாங்களே படித்து, நேரடி தகவல்களைத் தேடி, பிரச்சாரத்துக்கும் உண்மைக்கும் இடையிலான வேறுபாட்டை அறிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset