நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இளம் பெண் உயிர்களை பறித்த விபத்து: ஓட்டுநர் மீது கொலை வழக்கு பாய்ந்தது

தெலுக் இந்தான்:

தெலுக் இந்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இரு இளம் பெண்களின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, 28 வயதான அலெக்ஸ் ராபர்ட் மீது இன்று தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

கடந்த ஜூலை 26-ஆம் தேதி மாலை 6.35 மணியளவில் ஜாலான் பாடாங் தெம்பாக் பகுதியில் நேர்ந்த கோர சாலை விபத்தில் நூர் டானியா அரிஸ்ஸா சலீம்,  நூர் அத்திகா அப்துல்லா ஆகிய இரு இளம் பெண்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, அலெக்ஸ் ராபர்ட் மீது மலேசிய தண்டனைச் சட்டம் 302-ஆவது பிரிவின் கீழ் இரு கொலைக் குற்றச்சாட்டுகளும், 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் மேலும் இரு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

இவ்வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குட்பட்டது என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் இருந்து எந்த வாக்குமூலமும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படவில்லை.

இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் உடற்கூறு ஆய்வு அறிக்கை, நச்சியல் பரிசோதனை முடிவுகள் மற்றும் விசாரணைக்குத் தேவையான ஆவணங்களைப் பெறுவதற்காக வழக்கை ஒத்திவைக்க அரசுத் தரப்பு கோரிக்கை விடுத்தது.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கக் கூடாது என அரசுத் தரப்பு வலியுறுத்திய நிலையில், அதற்கு பாதுகாப்புத் தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

மேலும், விபத்தின் போது போதைப்பொருளின் தாக்கத்தில் வாகனம் செலுத்தியதாகவும், அதன் காரணமாக ஆடம் அர்ஜுனா அப்துல்லா என்ற பாதசாரி காயமடைந்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், கவனக்குறைவாகவும் அலட்சியமாகவும் வாகனம் இயக்கியதால் சுரேஷ் அயரூ என்பவருக்கு காயம் ஏற்பட்டதாக மற்றொரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்த இரு சாலைப் போக்குவரத்து குற்றச்சாட்டுகளையும் அலெக்ஸ் ராபர்ட் மறுத்து, தாம் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset