செய்திகள் உலகம்
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் (SKML) களை கட்டிய பாரம்பரிய நடைபயணம்: சமூக சேவை, பாரம்பரியத்தைப் போற்றிய நிகழ்வு
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் (SKML) தனது 85ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்த பாரம்பரிய நடைபயணம் (Heritage Walk) கடந்த ஞாயிற்றுக்கிழமை (26 ஜூலை) காலை நடைபெற்றது.
சுமார் 120 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, அமைப்பின் 85ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வுகளுக்கான முதல் நிகழ்வாக அமைந்தது.
காலை 8.00 மணிக்கு, ரெட் ஹில் ஃபோரம், ஜாலான் கிளாங் திமூர் அமைந்துள்ள SKML அலுவலகத்தில் இருந்து நடைபயணம் தொடங்கி, கடையநல்லூர் தெருவில் (Kadayanallur Street) நிறைவடைந்தது.
மொத்தம் 6.5 கிலோமீட்டர் அல்லது 8,500 அடிகள் கொண்ட இந்த நடைபயணம், SKML-இன் 85 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் வகையில் குறியீட்டு முக்கியத்துவத்துடன் அமைந்தது.
SKML சங்கத்தின் முன்னாள் தலைவர் நசீர் கனி JP அவர்கள் இந்நடையை முறையாக தொடங்கி வைத்தார்
பங்கேற்பாளர்கள் ஜாலான் புக்கிட் மேரா, ஹெண்டர்சன் சாலை, தெலோக் பிளாங்கா கிரசென்ட், லோவர் டெல்டா சாலை, கம்போங் பாரு சாலை, நீல் சாலை, கேன்டோன்மெண்ட் சாலை, ஹோ சியாங் சாலை மற்றும் தஞ்சோங் பகார் வழியாக நடைபயணம் மேற்கொண்டு இறுதியில் கடையநல்லூர் தெருவை அடைந்தனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சுகாதார அமைச்சு, தகவல், தொடர்பு அமைச்சின் துணை அமைச்சரான ரஹாயு மஹ்ஸாம், நகர மறுசீரமைப்பு ஆணையம் (URA) அமைக்கவுள்ள பாரம்பரிய நினைவுப் பலகையின் (Heritage Marker) மாதிரி வடிவத்தை, சங்கத்தின் தலைவர் ஹாஜி ராஜா முஹம்மது, துணைத் தலைவர் ஹாஜி M A மசூது முன்னிலையில் திறந்து வைத்தார்.
மேக்ஸ்வெல் சாலை – கடையநல்லூர் தெரு சந்திப்பில் தற்போது அமைந்துள்ள URA வளாகம், ஒருகாலத்தில் உமர் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி இயங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகும். விரைவில் நிரந்தரமாக நிறுவப்படவுள்ள இந்த பாரம்பரிய நினைவுப் பலகை, 1950-களில் SKML நிறுவிய உமர் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் வரலாறையும், சிங்கப்பூரின் தமிழ் கல்விக்கான அதன் முக்கிய பங்களிப்பையும் பதிவு செய்யவுள்ளது.
இந்நிகழ்வின் உணர்வுபூர்வமான தருணமாக, உமர் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர் நடைபயணத்தில் கலந்து கொண்டனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த அவர்கள், தங்கள் பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டு, பாரம்பரிய நினைவுப் பலகை மாதிரி அருகில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். சிலர் கண்கலங்கியபடி தங்கள் பள்ளி வாழ்க்கையை நினைவுகூர்ந்தது நிகழ்விற்கு மேலும் சிறப்பை சேர்த்தது.
நடைபயணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப் பரிசாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி டி-ஷர்ட்கள், தோள்பைகள், விளையாட்டுத் துணிகள் (Sports Towels), சிற்றுண்டி, ஆதரவாளர்களின் பரிசுப் பொருட்கள், மின்னணு பங்கேற்புச் சான்றிதழ்கள் (e-Certificates) வழங்கப்பட்டன.
1941ஆம் ஆண்டு தஞ்சோங் பகார் பகுதியில் நிறுவப்பட்ட சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், தனது 85ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
அவற்றின் நிறைவு நிகழ்வாக, 2026 செப்டம்பர் 12ஆம் தேதி (சனிக்கிழமை) டவுன்டவுன் ஈஸ்டில் உள்ள தி மார்கீ (The Marque) மண்டபத்தில் 85ஆம் ஆண்டு சிறப்பு விருந்து நிகழ்ச்சி (Gala Dinner) நடைபெறவுள்ளது.
இதில் உறுப்பினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, இந்திய முஸ்லிம் சமூகத்திற்கும், சிங்கப்பூரின் பல்வேறு சமூகங்களுக்கும் SKML ஆற்றிய 85 ஆண்டுகால சேவையை கொண்டாட உள்ளனர்.
85ஆம் ஆண்டு பாரம்பரிய நடைபயணம், ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் சமூக ஒற்றுமையையும் ஊக்குவித்ததோடு மட்டுமல்லாமல், கல்வி, சமூக சேவை மற்றும் பாரம்பரியப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் SKML ஆற்றிய பங்களிப்பை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அதன் உறுதியையும் மீண்டும் வலியுறுத்திய சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.
- நசீர்கனி
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
