நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மடானி அரசு 1.15 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது: குணராஜ் - சிவமலர்

சிரம்பான்:

இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான மடானி அரசின் அர்ப்பணிப்பு வெறும் வாக்குறுதியாக இல்லாமல், பல்வேறு திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மூலம் நிரூபித்துள்ளது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்  குணராஜ் ஜோர்ஜ்,  கெஅடிலான் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி ஆகியோர் இதனை தெரிவித்தனர்.

வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்கள்,

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு 2023ஆம் ஆண்டு முதல் இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், மொழி, கலாசாரம் மற்றும் சமூகநல மேம்பாட்டிற்காக 597.5 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

இதில் இந்திய சமூகத்தின் கல்வி, தொழில்முனைவு, சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்காக மித்ராவுக்கு 450 மில்லியன் ரிங்கிட் , இந்திய சமூகத்தின் கல்வி நிறுவனங்களுக்கு உதவ எம்ஐஇடி அமைப்புக்கு 101 மில்லியன் ரிங்கிட்,  நாடு முழுவதும் 344 இந்து ஆலயங்களைப் பராமரிக்கவும் கட்டமைக்கவும் வீடமைப்பு, ஊராட்சித் துறை அமைச்சுக்கு 46.5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய சமூகத்தின் கல்வியை வலுப்படுத்துவதற்காக மட்டும் 182 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

ஆறு தமிழ்ப்பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் அமைப்பதற்கு 30 மில்லியன் ரிங்கிட், 2023 முதல் 2026ஆம் ஆண்டு வரையிலான தமிழ்ப்பள்ளிகளின் பராமரிப்புக்கு 130 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், டேப் கல்லூரிக்கு 2026ஆம் ஆண்டில் 22 மில்லியன் ரிங்கி வழங்கப்பட்டுள்ளது. 
2024ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 2 மில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஒதுக்கீடு பத்து மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சமூகக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் மின் தகன மேடைகளை அமைப்பதற்கு 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்திய சமூகத் தமிழ் மாநாடு, மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை மற்றும் பள்ளிகளுக்கான தமிழ்மொழிக் கற்றல்–கற்பித்தல் உபகரணங்கள் உள்ளிட்ட முயற்சிகளின் மூலம் தமிழ்மொழியை வலுப்படுத்துவதற்கு மேலும் 5 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக பல்வேறு நிதியுதவித் திட்டங்கள் மூலம் 555.6 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

அதில் அமனா இக்தியார் அமைப்பின் பெண் திட்டத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட், தெக்குனின் ஸ்பூமி திட்டத்திற்கு 271.6 மில்லியன் ரிங்கிட், பேங்க் ராக்யாட்டின் பிரிவ்-ஐ திட்டத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட், எஸ்எம்இ வங்கிக்கு 50 மில்லியன் ரிங்கிட், மடானி வெற்றி திட்டத்திற்கு 34 மில்லியன் ரிங்கிட்டும் அடங்கும்.

இந்திய சமூக மேம்பாட்டிற்கான 597.5 மில்லியன் ரிங்கிட் பொருளாதார நிதியுதவிகளுக்கான 555.6 மில்லியன் ரிங்கிட் சேர்த்தால், மடானி அரசு இந்திய சமூகத்திற்கு வழங்கியுள்ள மொத்த நன்மைகளின் மதிப்பு 1.1531 பில்லியன் ரிங்கிட் எட்டியுள்ளதாக அவர் கூறினார்.

இந்தத் தொகையில் ரஹ்மா ரொக்க உதவி, ரஹ்மா அடிப்படை உதவி, பூடி மடா திட்டம், குறைந்தபட்ச சம்பள உயர்வு, பள்ளி உதவிகள் மற்றும் இன வேறுபாடின்றி மக்களுக்கு வழங்கப்படும் இதர திட்டங்கள் சேர்க்கப்படவில்லை.

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தால் இந்திய சமூகமும் பயனடைந்துள்ளதாகக் கூறிய அவர், ரிங்கிட்டின் மதிப்பு வலுப்பெற்றிருப்பதுடன், வேலையின்மை விகிதம் 2023ஆம் ஆண்டின் 3.4 விழுக்காட்டிலிருந்து 2025ஆம் ஆண்டு 2.9 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3.6 விழுக்காட்டிலிருந்து 5.2 விழுக்காடாக அதிகரித்துள்ளதுடன், நாட்டின் முதலீட்டு மதிப்பு 2023ஆம் ஆண்டின் 329.5 பில்லியன் ரிங்கிட்டில் இருந்து 2025ஆம் ஆண்டு 426.7 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. 

இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரித்து, முதலீட்டாளர்களின் நம்பிக்கை வலுப்பெற்றுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி வாக்களிக்கவுள்ள நெகிரி செம்பிலான் மக்கள், குறிப்பாக இந்தியர்கள், அரசியல் பேச்சுகளின் அடிப்படையில் அல்லாமல் அரசின் சாதனைப் பதிவுகளின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்.

இந்த மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டுமா அல்லது நிறுத்தப்பட வேண்டுமா என்பதை மக்களின் வாக்குகளே தீர்மானிக்கும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தலைமையிலான நெகிரி செம்பிலான் மடானி அரசுக்கும் நம்பிக்கை கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு வழங்க வேண்டும். 

அதன் மூலம் இந்திய சமூகத்தின் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சமூக மேம்பாடு, மொழி, கலாசாரப் பாதுகாப்புக்கான முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர்-

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset